சனி, 27 ஜூலை, 2019

வினியோகம் ஓர் அழகிய திரிபு.

இன்று வினியோகம் என்ற சொல்லைப் பற்றிய சிந்தனையில் சிறிது ஆழ்வோம். இதைப் பற்றி யாமெழுதியது உண்டெனினும் இது இப்போது ஈண்டில்லை யாதலின் மீண்டும் பதிவேற்றி மகிழ்வோம்.

வியன் என்பது ஒரு தமிழ்ச் சொல். இதைச் சுருங்க விளக்க முயல்வோம். இது விர் என்னும் அடிச்சொல்லிலிருந்து விய் என்று திரிந்து  அன் என்னும் விகுதி (மிகுதி) பெற்று  வியன் என்று வரும்.

விற்றல் ( வில்+ தல் ),   விற்பனை (  வில்+ பு + அன் + ஐ )  என்ற சொற்களில் வில் என்று வரும் அடிச்சொல்,  பின்னர் விர் என்றும் அதன்பின் விய் என்றும் திரியும்.   ஓர் இடத்திலுள்ள ஒரு பொருளைப் பிற இடங்களிலும் கொண்டுசெல்லும் செயலையே " வில் " என்பது குறிக்கிறது.  பணத்துக்காகவோ பண்டமாற்றுக்காகவோ அவ்வாறு கொண்டு செல்கையில் அது வில்> விலை ஆகி, ஒன்றுக்காக மற்றொன்றைப் பெறுதலைக் குறிக்கிறது. இதிலிருந்து "பொருட்பெறுமானம்" உண்டாகின்றது.

விர் என்பது விய் என்று திரிந்து பின் அன் என்ற விகுதி பெற்று " வியன் "  ஆகின்றது.

வில்,  விர், விய் எல்லா உருமாற்றுக்களுக்கும் கருப்பொருள்  விரிவு என்பதே.  வினியோகம் என்பது பொருள் விரிபாடு ஆகும்.  விலைப் பொருட்டாயினும் அன்றாயினும் விரிவே மையப்பொருள்.

இது விரிவு என்னும் பொருளில் தமிழ் நூல்களில் காணப்படுகின்றது.  எம் நினைவுக்கு வரும் எடுத்துக்காட்டு:

விரிநீர் வியனுலத் துள்நின் றுடற்றும் பசி என்ற வள்ளுவனார் வரியாகும். வியன் என்றால் இங்கு விரிந்த என்பது பொருள்.  வியாபித்தல் என்ற புனைவுச் சொல்லும் இதனடித் தோன்றியதுதான்.   வியன் +  ஆ + பி =  விய + ஆ + பி =  வியாபி என்றாகிறது.  0னகர ஒற்றும்  ஆகு என்ற வினையில் கு என்ற நீட்சி விகுதியும் களையப்பட்டுள்ளன.   வியன் ஆகுவித்தல் எனற்பாலதை மடக்கி,  விய ஆ பி (த்தல்)  என்று வேய்வித்துள்ளனர்.  (வேய்தல்:  வேய்> வேயம் > வேசம் > வேஷம்).

வியன் என்பது வினியோகம் ஆவது:

வியன் + ஓங்குதல்.

ஓங்குதல் என்பதை முன் எடுத்துக்கொள்வோம்.

ஓங்கு + அம் =  ஓங்கம்;  இடைக்குறைந்து:  ஓகம்.  ங் என்பது விடப்பட்டது.

வியன் + ஓகம் =  வியனோகம்

இங்கு எழுத்து முறைமாற்று புகுத்தப்படுகிறது.

வியனோகம்  >   வி -ன -  யோகம்.

இது விசிறி > சிவிறி என்பதுபோலும் எழுத்து முறைமாற்று.  இன்னோர் எ-டு:
மருதை > மதுரை.  ( மருத நிலங்களால் சூழப்பட்ட நகரம் ).

வியனோகம் > வினயோகம்.

நன்றாகவே உள்ளது.

இதை எளிதாக்க.  வினியோகம் என்று னகரத்தை  னிகரமாக்குக.  இது ஒலிப்பெளிமை புகுத்தல்.

விற்பனைக்குப் பகிர்தல் முறை என்பதைக் குறிக்க ஒரு சொல் கிடைத்துள்ளது.

வினியோகங்கள் தொடங்கிய காலத்து மனித குலத்துக்கு ஒரு யோகம் உண்டாகியிருக்கலாம்.  பொருட்பகிர்வு உண்டானதால்.  உடற்பயிற்சி மனப்பயிற்சி முதலிய குறிக்கும் யோகம் ஏதுமிருப்பதாய்க் காண இயல்வில்லை.

வியயோகம் என்று வந்திருந்தால் சொல்ல எளிமை இல்லையாகின்றது.  விசயோகம் எனினும் நேரன்று.  ய>ச.

பகிரோங்கம் என்றிருக்கலாம்.  குறுக்கிப் பகிரோக மாக்கலாம்.  ரோகம் வந்துவிடுகிறது.

பகிரோங்கம் என்பதைச் சீனமாக்கினால் " புவே லோங்"  வரை இழுக்கலாம்.
தொல்லை இன்றி. புரியாவிட்டால் விடுக.


வியனோகத்தைக் கொண்டாடுங்கள்.


பிழைபுகின் பின் திருத்தம்




   

வியாழன், 25 ஜூலை, 2019

கேழ்வரகும் கேவரும்.

செந்தமிழ்ச் சொற்களிலிருந்து  நம் பேச்சு மொழி எத்துணை திரிந்துள்ளது என்பதை, ஒப்பிடுங்கால் நாம் கண்டுகொள்ளலாம்.  பல இடைக்குறைச் சொற்களையும் பகவொட்டுச் சொற்களையும் நாம் சுட்டிக் காட்டியபோது இதை நீங்கள் உணர்ந்திருத்தல் கூடும்.

இன்று கேழ்வரகு என்ற பொருட்பெயரை  ஆய்ந்தறிவோம்.  இது  ஓர் உணவுப் பொருள்..  கேழ்வரகு என்பது ஒரு தானியம் அல்லது கூலம்.

விளைச்சலில் அரசுக்கு இறுத்தது போக குடியானவனுக்குத் தனக்கென்று தான் வைத்துக்கொள்வது " தானியம் ".  இஃது ஆங்கிலத்தில் வழங்கும் பெர்சனல் செட்டல்ஸ்,  பெர்சனால்டி முதலிய சொற்களைப் போன்று பொருளமைப்பு உடைய சொல்.  ஒன்றகக் கூட்டிச் சேர்த்து  எடுத்துச் \செல்லப்படும் காரணத்தினால் அதற்குக் கூலமென்றும்    பெயர்.   கு > கூ முதலிய எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் சில,  ஒன்று சேர்த்து எடுத்துச் செல்லப்படும் அல்லது பயன்பாடு காணும்  காரணத்தை அடிப்படையாகக் கொண்டவை.  கூ > கூலம்;  கூ> கூ ழ்  ( குழைந்து ஒன்று  சேர்வது ).  சேர்த்துவைத்தாலே கூலம் பொருளாகும்; இறைத்துவிட்டால் அல்லது  கொட்டிவிட்டு அள்ள முடியாவிட்டால் வீண்.   எறும்பு காக்கை குருவிகட்குப் பயன்படலாம்.

கூழ்வரகு என்பதுதான் கேழ்வரகு என்று திரிந்தது என்று அறிஞர் சிலர் கருத்துரைத்துள்ளனர்.

இவை நிற்க.

இடைக்குறை என்னுங்கால் கேழ்வரகு என்பது கேவர் என்று பேச்சு மொழியில் திரிதலை நீங்கள் கேள்வியில் உணர்ந்திருப்பீர்கள். இத்திரிபில் உள்ள இடைக்குறையைப் பாருங்கள்:

கேழ்வரகு >  கேவர்.
ழகர ஒற்று மறைந்தது.
வரகு என்பது வர் என்று மாறிவிட்டது.

இதுபோல் வகரத்தின் முன் ழகர ஒற்று வீழ்ந்த இன்னொரு சொல்
பாழ் >  பாழ்வம் >  பாவம்.

வரகு என்பது இன்னொரு தானியம்.  அது மென்மையும் வழவழப்பும் இல்லாமல்  (உண்ண அல்லது தடவ )  வரவர என்று இருப்பதால் அது வரகு என்று சொல்லப்பட்டது.
வறுத்ததும் கொஞ்சம் வரவர என்றுதான் இருக்கும்.   வர -  வற  - வறு - வறட்டு என்ற சொற்களின் உறவினைக் கண்டுகொள்க.  வரகை அறிந்தபின் தமிழர் கேழ்வரகை அறிந்தனர் என்பது தெளிவு.

கேழ்வரகு என்ற சொல்லமைப்பில் கு என்னும் இறுதி விகுதியை நீக்கிய பேச்சுமொழி,  வர என்று எச்ச வடிவிலின்றி வர் என்று இறுதிசெய்துகொண்டது திறமையே ஆகும். சொல்லிறுதிக்கு எது ஏற்றது என்பதைப் பேசுவோரும் அறிந்துள்ளனர்.  புலவர்பெருமக்கள் மட்டும் அல்லர்.

தட்டச்சுப் பிழை - பின் திருத்தம்.



செவ்வாய், 23 ஜூலை, 2019

மா மை மயிர் மயில்

இன்று மை,   மா,   மயிர் என்ற  சொற்களைத் தெரிந்தின்புறுவோம்.

மை என்பது பல்பொரு ளொருசொல் ஆகும்.  இதன் பொருண்மையில் கருப்பு   என்பதும் ஒன்றாம்.

" மையிட்ட கண்மலர்ந்தாள்"  என்று கூறின்,  கருப்பு மையிட்ட என்பது பொருளாகக் கொள்ளின் சரியாகும்.  இப்போது வேறு நிற மைகளும் உண்டெனினும் இந்தச் சொற்றொடர் போந்த காலத்து இவை கவனத்துக்கு வராமை உணர்க.

மா என்பதற்கும் வேறு பொருள் உண்டெனினும்,   மா நிறம் என்பதுபோலும் தொடரில் கருமையையே குறிக்கும்.   ஆனாலும் பேச்சு வழக்கில் இஃது முழுக் கருமையைக் குறித்திலது என்பர்,  சற்று வெண்மையொடு  பெரிதும் கருமை கலந்த நிறத்தையே குறிக்குமென்பர்:  இதையும் மனத்தில் இருத்திக் கொள்வீர்.

மயிர் என்ற சொல்லில் இர் என்பதே விகுதி என்று கோடல் பொருத்தமாம். பகுதியாவது ம என்பதே.

இந்த ம என்பது மா என்ற சொல்லின் குறுக்கமாகும்.

மா என்பது சொல்;  ம என்பது தனித்து வாராமையின் சொல்லன்று என்றும் திரிபிற் போந்த வடிவம் என்றும் கூறுப.

இப்போது யாம் கூறவந்தது:

மா >  மா+ இர் >  மயிர்.   ஈண்டு மா என்பது ம என்று குறிலாய் நின்றமையின் முதனிலை குறுகி அமைந்த சொல்லென்று காண்க.

இதுபோலும்  எடுத்துக்காட்டு வேண்டின்:

சா +  அம் =  சவம் என்பதைக் கூறலாம்.  சாவு+ அம் =  சவமெனினுமாம்.
கூ + இல் =  குயில் என்ற ஒப்பொலிப் பெயரையும் காட்டலாம்.
மா + இல்=  மயில் எனினுமது.

வினைகளும் இவ்வாறு குறுகுதல்:  வா -  வந்தாள். வந்து.  வந்த.

இதுவே விதியாம். இது வாதத்தின் அப்பால்பட்டதாகும்.  பழைய இடுகைகளில் பரந்துபட்டு விளக்கமுற்றுள்ளது இது.

இனி,  மை + இர் =  மயிர் எனினுமாம்.

மயில் என்பது கரும்புள்ளிகள் உள்ள பறவை என்பதாம் சொல்லமைப்புப் பொருள்.

வினையினின்று விகுதியேற்று அமைதலும் பிறவகையினின்று விகுதிபெற்றமைதலும் கண்டுகொள்க.

 பிழை புகின் பின் திருத்தம்,