வீட்டைக் குறிக்கத் தமிழில் எழுந்த சொற்கள் பல. அவற்றில் சில சொற்களை
ஆய்ந்து இன்பமடைவோமாக.
வீடு, இல்லம் என்பனவற்றை நாம் எளிதில் நினைவுக்குக் கொண்டுவரலாம். இவற்றுள் வீடு என்பது வீட்டுவழக்குச் சொல்லாக இருக்கின்றது.
வீடு என்ற பொருளுள்ள இன்னொரு சொல் அகாதம் என்பது. இச்சொல்லைப் பார்த்தால் அயற்றன்மை கொண்டதுபோல் தோற்றமளிக்கின்றது.
ஒரு வீட்டைக் கட்டுங்கால் கட்டுமிடத்தின் அகத்து அல்லது உட்புறத்திலே நன்றாகத் தோண்டி அதாவது மண்ணை அழுத்திவாரித் தூண்கள் வளர்த்து நிறுத்திச் சுவர் எழுப்பிக் கூரை வேய்வோம்.
அழுத்திவாருதலே அழுத்திவாரம் பின் அஸ்திவாரமென்று வழங்கப்பெற்றது. இது எப்படி இருக்கிறதென்றால் மானின் கழுத்தில் ஊறிவருவதாக ஒரு காலத்தில் நம்பப் பட்ட கழுத்தூறி மணப்பொருள் - கஸ்தூரி என்று மாறி மக்களை மகிழ்வித்தது போலுமாம்.
அகத்து ஆழமாய் வாரி அமைப்பது (வீடு) என்ற கருத்தி னடிப்படையில் அகம்+ ஆழ் + து + அம் என்ற பகுதியையும் ஒட்டுக்களையும் ஒன்று கூட்டி, அகாழ்தம் என்ற சொல்லை உண்டாக்கி, ழகரத்தைக் கெடுத்துச் சுருக்கி, அகாதம் என்ற சொல்லமைப்பை எட்டிப் பிடித்து அதுவே " வீடு" என்ற பொருளில் வருமாறு செய்யப்பட்டது.
ஆழ மண்ணை வாரி எடுத்து அத்திவாரம் என்னும் அடிப்படை அமைத்து, வீட்டைக் கட்டுவது சரிதான்; அடிப்படை குறைவானலும் வீடு நிற்கும்; பெரும்பாலும் விழுந்துவிடுவதில்லை. ஆனால் சூழ நிற்கும் ( சுற்றுச்) சுவர் என்பது மிக்க முன்மை வாய்ந்தது ஆகும். இந்த சுற்றுச்சுவரின் முக்கியம் உணர்த்த இன்னொரு சொல் உருவாக்கப்பட்டது.
அகம் + ஆர் + அம்: உட்புறத்தைச் சூழ அல்லது சுற்றி நிற்கும் சுவர்கள் உடையது என்னும் பொருளில் அக ஆர் அம் = அகாரம் என்ற சொல் வீடு என்னும் கட்டுமானத்தைக் குறிக்க அமைத்தனர்.
அகம், வீடு, இல் என்பவற்றிலெல்லாம் சலிப்படைந்தவர்கள் மேற்கொண்ட இரு முயற்சிகளை மேலே கண்டோம். இச்சொற்கள் சில நூல்களில் காணப்படலாம் ஆயினும் உலகவழக்குக்கு வரவில்லை.