ஒரு குருவென்னும் மனிதன், தன் சீடனின் மூளையைத் தீட்டித் தான் அகன்றபின்பு சீடனும் ஒரு குருவாகும் தகுதியை உண்டாக்குகிறான். எந்தக் குருவும் மேலுலகிலிருந்து நேராக வருவதில்லை. அவன் பெற்ற அறிவைச் சீடனுக்கு வழங்கிப் படிப்பிக்கின்றான் என்பதே உண்மை.
சீண்டுதல் என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை முதலில் அறிவோம்.
சீண்டுதல் என்பது தீண்டுதல் என்பதன் திரிபு. சகரத்தில் தொடங்கும் சில சொற்கள் தகரத் தொடக்கமாய் இருந்தவை. தீண்டுதல் > சீண்டுதல். இனி சகரம் தொடக்கம் எனினும் இழுக்கில்லை. ச>< த ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. ஒன்றுக்கு இன்னொன்று மோனை.
தூங்காதே தம்பி தூங்காதே நீ
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே.
பட்டுக்கோட்டை பாட்டு. தூ > சோ மோனையானது.
இக்கவி மிக்க எதுகை மோனை கூர்அறிவுடையவர்.
எல்லாப் பாடல்களிலும் இவை போலும் மோனைப் புனைவு காணலாம்.
சீ <> தீ : இதுபோல் திரிந்த சொற்களை ஒப்பு நோக்குவோம்.
தம்தம் ( மதங்க ஒலி) - சம்தம் > சந்தம்.
இப்படி மதங்க ஒலி குறித்த சொல் பின் அதுபோன்ற பிற இசையொலிகளையும் குறிக்க விரிந்தது.
தம் பந்தி > சம்பந்தி.
பல் > பல் து > பற்று. பல் து > பந்து. பல்து > பந்து > பந்தம்;.
தம்பந்தம் > சம்பந்தம்.
தனி > சனி ( இதன் பொருள் தனிச்சிறப்பு உடைய கோள் என்பது ).
கோள்களில் சனிக்கு மட்டுமே ஈஸ்வரப் பட்டம் என்பர். இறைவன்> இறைவர்> ஈஶ்வர்> ஈஸ்வர்> ஈஸ்வரன்.
இவற்றில் சில நம் இடுகைகளில் விளக்கப்பட்டுள.
இப்படித் திரிந்ததுதான் தீண்டுதல் > சீண்டுதல்.
இன்னும் பல திரிபுகள் உள்ளன. எல்லாவற்றையும் ஒரே அடியாக உள்வாங்கிக் கொள்ளுதல் கடினமே. ஆகவே இவை போதுமானவை.
இரண்டு தன் சேர்ந்தால் ஒரு தம் ஆகிறது. இப்படித் தொடங்கியதே இப்பன்மை வடிவம்.
தன் உறவினர் - தம் உறவினர் (பன்மை) தன் > தம் பின்னர் சம்.
ஆகத் தீண்டுதல் என்பதற்கும் சீண்டுதல் என்பதற்கும் உள்ள திரிபுத் தொடர்பையும் பொருண்மை அணுக்கத்தையும் உணர்ந்தோம்.
என்னைச் சீண்டாதே என்றால் அடிக்கடி தொட்டுத்தொட்டுத் தொந்தரவு கொடுக்காதே என்பதுதான் அர்த்தம்.
இனி, ஒரு குருவானவர் ஒரு சீடனுக்கு நெற்றியைத் தீண்டிச் "சீடனாக்கி"க் கொள்கிறார். ஆகவே இந்தத் தீட்சை பெறுபவன் சீடனாகிறான்.
தீண்டு > சீண்டு > சீடு ( இது இடைக்குறை).
சீடு+ அன் = சீடன். குருவினால் தீண்டப் பெற்ற பாக்கியவான் சீடன்.
பகு> பகு+ இயம் = பாக்கியம். ( உலகில் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு; இவற்றுள் நற்பாகத்தைப் பெற்றவன் பாக்கியவான்.) பாக்கிய + ஆன் = பாக்கியவான், வகர உடம்படு மெய். வான் என்பது ஒரு தனி விகுதியன்று.
பாக்கியவான் : நற் பகுதியைப் பெற்றவன்.
சீ > சீத்தல். தேய்த்தல், கூராக்குதல். ( தொடுதல் கருத்து. தொடுதல் பலவகை. ஒரு முறை தொடுதல்; பல முறை தொடுதல்; தொட்டுத் தொடர்தல், இதை விளக்கவேண்டாம். தெரிந்துகொள்க.)
சீ > சீடு ( டு ஒரு விகுதி ) > சீடன். ( குருவினால் புத்தி கூராக்கப்படுபவன்).
குரு சீடனின் நெற்றியைத் தேய்த்து விடுகிறார். எலாம் பொருத்தமே.
டு இறுதி வரும் சொற்கள் சில
பா ( பொருள்: பாடல் ) : பாடு. (பாடுதல்)
மூ ( அடிச்சொல்) ( பொருள்: மேல் உள்ள திறப்பினை பரக்க அடைத்தல்)
மூ > மூடு.
டு விகுதி வினை பெயர் என இரண்டிலும் வரும்.
மற்றவை:
சீடு > சீண்டு ( இடைமிகை).
சீண்டு >< தீண்டு. இரண்டும் இருவழித் தொடர்புள்ள சொற்கள்.
சீடு > சீடு+இய > சீடிய > சிஷ்ய.
சீடு > சீசு > சீசப்பிள்ளை ( சிற்றூர் வழக்கு).
தீண்டு என்பதன் வேர்ச்சொல் தீள் என்பது.
தீள் > தீள்+து > தீண்டு.
தீள் > தீள்+து > தீட்டு.
தீள் + சை = தீட்சை. (. > தீக்ஷை ) குரு சீடனைத் தீண்டிப் பற்றுறுத்தல்).
குறிப்பு: ஆரியர் என்பது வெள்ளைக்காரன் கூறினமாதிரி ஓர் இனப்பெயர் அன்று. அப்படி ஓர் இனம் இல்லை. எல்லா ஊர்களிலும் வெளி நாட்டினர் வந்து தங்குவதென்பது இயல்பானதே. பல நாடுகளிலிருந்தும் ஊர்களிலிருந்தும் கடல் வழியாக வந்தவர்களும் நில வழியாக வந்தவர்களும் இருந்தனர். திருமணம் செய்துகொண்டு கலந்துவிட்டனர். ( சீனப்படைகளுடன் வந்து வழி மாறி இந்தியச் சிற்றூரில் தங்கித் திருமணம் செய்துகொண்டு பிள்ளை குட்டி பெற்று மூப்பும் அடைந்து அண்மையில்தான் ஒரு சீனர் சீனாவிற்குப் போய்ச் சேர்ந்தார். இதுபோல் எத்தனையோ. அலக்சாந்தரின் படைகளுடன் வந்தோர் பலர். திரும்பிச் சென்றுவிட்டனரா? யாரறிவார்? ஆப்கானியர் வந்திருப்பர்.)
ஆனால் ஆரியர் யாருமில்லை.
ஆர் என்பது தமிழில் ஒரு பலர்பால் விகுதி. உயர்திணை குறிப்பது. பணிவு பகர்வது. ஆர் என்ற வினைச்சொல்லும் உண்டு. இவற்றைக் கூறும் தனி இடுகைகளைப் படியுங்கள்.
சமஸ்கிருதம் என்பது பெரும்பாலும் சாமி கும்பிடும்போது பயன்படுத்திய மொழி. சாமிகளை மரத்தடியில் வைத்துக் கும்பிட்டனர். பெரும்பாலும் கோயில் கட்டியவர்கள் மன்னர்களே, மரத்தடிப் பூசாரி, பிறர் கட்டிய கோயிலுக்குள் போனபோது அதே வழிபாட்டு முறையே வழக்கில் தொடர்ந்தது. வடமொழி என்பது மரத்தடிமொழி என்று திரு வி க கூறியது சரியானதுதான். ஆரியர் வரவுமில்லை. சமஸ்கிருதம் அப்படிப்பட்டவர்களால் பேசப்படவும் இல்லை. சமஸ்கிருதத்தில் முதல் கவி வால்மீகி ஒரு வால்மீகி சாதியான்; இன்று தாழ்குலம். பாணினி வடமொழி இலக்கணம் இயற்றியவன், ஒரு பாணன். பாண்+இன்+இ = பாணினி. இது வெள்ளைக்காரனுக்குத் தெரியவில்லை. புலவர்கள் குலப்பெயர்களால் அக்காலத்தில் அறியப்பட்டனர். வேதவியாசன் செம்படவன். சமஸ்கிருதம் எப்படி வெளிநாட்டு மொழி ஆனது.? உரோமாபுரியின் காலத்திலே தமிழரும் பிறரும் அங்கு சென்று இந்தியச் சொற்களைத் தந்து உதவியுள்ளனர். (சென்னைப்பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசியர் ஆய்வு முடிவு ) ஆரியர் வந்தனர் என்ற தெரிவியல் ( தியரி) நிறுவப்படவில்லை.
சமஸ்கிருதத்தில் உள்ள வெளிநாட்டுச் சொற்கள் பெறப்பட்டவை. ஒரு மொழியில் வெளிநாட்டுச் சொற்கள் இருந்தால் அது அக்காரணத்தினால் வெளிநாட்டினர் மொழி ஆகிவிடாது. மூன்றில் ஒரு பகுதி திராவிடச் சொற்கள் அதில் உள்ளன; ( டாக்டர் லகோவரி). சமஸ்கிருதம் தென்னகத்து ஒலியமைப்பை உடையது ( சுனில் குமார் சட்டர்ஜீ).
நாம் எடுத்து விளக்கிய சொற்கள் சொற்பமே. அறிக. சமஸ்கிருதத்தில் சொற்கள் 170000 க்கு மேல் உள்ளன. நாம் இங்கு விளக்கியுள்ள சொற்கள் மிகவும் குறைவு. மொத்த எண்ணிக்கையை எட்டமுடியாது. அது ஒருவர் இருவர் செய்து முடிக்கும் வேலையன்று,
பின் செப்பம் பெறும்.