செவ்வாய், 26 டிசம்பர், 2017

ஆர் விகுதி காட்டும் மதிப்பும் ஆரியன் என்ற சொல்லும்.

ஆரியன் என்ற சொல்லை ஆய்ந்துகொண்டிருக்கையில்
தமிழில் ஆர் விகுதியும் அர் விகுதியும் என்முன் தோன்றுவதை
உணர்ந்தேன்.   ஆர் என்பதனுடன் ஏர் எரு என்ற சொற்களும்
வந்து நின்றன.

பண்டைக் குமுகங்களில் ஏர்த்தொழிலே பெரிதும் 
போற்றற்குரித்தாகக் கருதப்பட்டது என்று தெரிகிறது. 
இதற்கு என்ன காரணம் என்பது தெளிவு. நிலையாக 
ஓரிடத்து வாழ்தலைத் தொடங்கிய மனிதன், தனக்கு 
வேண்டிய உணவினைத் தானே படைத்துக்கொண்டு, 
அத்தொழிலில் ஈடுபடாத பிற தொழில்  மேற்
கொண்டோர்க்கும் அளித்தான். அதனால் ஏரையும்
உழவரையும் பிறர்போற்றி உயர்ந்தோராகக் கருதினர்.
("தொழுதுண்டு பின்செல்லுதல்")

ஆதியில் தோள்வலிமை உடையோர், ஏர்த்தொழில
ரிடமிருந்துநெல் முதலியவற்றை மிரட்டி வாங்கி யுண்டனர்.
இதுபின் சற்று மென்மையாகி விளைச்சலில் ஒரு பகுதியை
ஒப்புவிக்க வேண்டும் என்று விதித்தனர். ஒன்றும் 
செய்யாதார்க்கு உழவன் பங்கு தரவேண்டியதாயிற்று.
உழவனுக்கு வேறு வழிகள் இல்லை. (வரிவிதிப்பு
தொடக்கம் )

இதிலும் போட்டி ஏற்பட்டது. தனக்கு வரவேண்டிய 
பங்கினை, பிறருக்குச் சென்றுவிடாமல் வலிமையுடை
யோன் காத்து, பின் பங்கை எடுத்துக்கொண்டான்.
அரசனாலும் காவலாளிகளாலும் வந்த நன்மை இதுதான். 
இதுவே இன்று பலவித நிறுவாகங்களாக நிலைபெற்று
உள்ளன. ( நிறுவாகங்கள் தோன்றுதல்)

இதை இங்கு கூறக்காரணம் யாதென்றால், ஆர் -ஏர் 
என்பன எப்படி மதிப்பு நிலையை அடைந்து உயர்வு
குறித்தன என்பதை விளக்குவதற்கே.

இந்த வளர்தமைந்த உயர்வு பிற்கால வரலாற்றில், 
உழவரிடமிருந்து அரசர், பூசாரிகள் முதலியோருக்கு
மாற்றப்பட்டது. இதுவே குமுகத்தில் ஏற்பட்ட ஒரு
புரட்சி ஆகும்.

தமிழில் ஆர்  அர் விகுதிகள் பன்மையையும் மதிப்பையும் 
ஒருங்கு சுட்டுவதற்கு இதுவே காரணம்.

வந்தான் (ஓருமை, மதிப்பு இன்மை)
வந்தார் (பன்மை மற்றும் பணிவு , மரியாதை).  ஆர் என்பது
மதிப்பு ஆகும்.

பழ நூல்களில் ஆரிய என்று வருவதை வெளியிலிருந்து
வந்தவர்களைக் குறிப்பதாக வெள்ளைக்காரன் எழுதி
வைத்திருப்பது அவன் தமிழ் மொழியை ஆராயாமையே
காரணம்.

இப்போது நீங்கள் இதனைப் படித்து மேலும் அறிக.
இதுவும் எம் வரைவே ஆகும்.

சொடுக்கவும்:

திங்கள், 25 டிசம்பர், 2017

சொல்லாக்கம்: வித்துவான்



வித்துவான் என்ற சொல்.

வித்துதல் என்பது வினைச்சொல்.
கல்வி என்ற சொல் “கல்லுதல்” என்ற வினையினின்று எழுதல் போல் வித்தை என்ற சொல்  வித்துதல் என்பதினின்றும்  தோன்றுகிறது. பூமியைத் தோண்டி விதைப்பதுதான் வித்துதல். ( விதைத்தல் ) என்போம். மண் தோண்டி விதைத்தல், கற்பித்தலுக்கு ஒப்பானது ஆகும்.

வித்து + ஐ =  வித்தை.

வித்து + அன் =  வித்துவன் > வித்துவான்.

அன் விகுதியும் ஆன் விகுதியும் ஒன்றே.

செய்வன்,  செய்வான் இரண்டும் ஒருபொருளன ஆதல்போல்.

வித்து+ அகம் + அன் =  வித்தகன். பணிவுப்பன்மை: வித்தகர்.

அக(ம்)+ அன் >  அக+( அ)ன் >  அகன்.
இத்தகைய சொல்லமைப்பில் மகர ஒற்றும் ஓர் அகரமும் தேவையற்றவை.

அகவர் என்பது சூதர், புகழ்வோர் என்று பொருள்தரும்
சொல்.
இனி.  விதை> வித்தை எனினுமாம்.  தொடர்புடைய வினைச்சொல்:  விதைத்தல்.

வித்துவன், வித்துவான் என்பது வித்வான் என்றும் துகரம் கெடப் பிறமொழிகளில் உளைப்புறும்.

கல்வியானது விதைபோலும் மனிதனுள் விதைக்கப்படுகிறது.  வித்து என்பது பிறமொழியில் வித் என்றாகி அறிந்தவை என்றும் பொருள்தரும்.  இச்சொல் இங்ஙனம் பரப்பாட்சி செலுத்துவது  பண்டைத் தமிழின் விரிந்த பயன்பாட்டினைத் தெளிவுறுத்தும்.

வேதமென்பது தமிழ்ச்சொல்.  அது வேய்தல் என்பதன் அடிப் பிறந்த சொல்.
வேய்தலாவது ஆக்குதல், அமைத்தல், கூரை அமைத்தல் முதலியன.  வேதமென்ற இன்னொரு சொல் சமஸ்கிருதத்தில் உள்ளது.  அது ஒலியொற்றுமை உடைய இன்னொரு சொல் ஆகும். அதை வித் என்பதினின்றும் பிறந்ததென்பர்.  "பேக்கட்" என்ற ஆங்கிலமும் பைக்கட்டு (பை+கட்டு) என்ற தமிழ்ச்சொல்லும் ஒலியொற்றுமை உடையன, அதுபோல. இன்னோர் எடுத்துக்காட்டு: காலண்டர் (ஆங்கிலம்),  காலகண்டர் (தமிழ்).  காலகண்டர் எனின் காலத்தைக் கண்டுபிடிக்க உதவும் ஏடு என்பதாம்.

சனி, 23 டிசம்பர், 2017

வருவது: வருடம்; ஆள்வது ஆண்டு. தவறாத காலம்.



பழங்காலத்தில் மனிதர்கள் மழையை நம்பித்தான் பூமியின் பல இடங்களில் வாழ்ந்தனர். இது உண்மையென்பதைத் திருக்குறளின் வான்சிறப்பு என்னும் அதிகாரம் நமக்கு நன்றாகவே உணர்த்துகிறது.  இவ்வரிய நூல்தவிர இன்னும் பன்மொழியிலுள்ள நூல்களும் இதனை நமக்குணர்த்தும். இப்போது புதிய பல தொழில் நுட்பங்களும் தோன்றிக் கடல் நீரைக் குடிநீராக்குதல், அழுக்கு நீரைத் தூய நீராக்குதல் போன்ற புதுமைகளும் மனிதர்தம் வயப்பட்டுள்ளன.

வருடம் என்ற சொல் மழையின் காரணமாக ஏற்பட்ட சொல் என்று முன்னாளில் ஆய்வாளர்கள் சிலர் கருத்துக் கொண்டிருந்தனர். ஆகவே தமிழில் வழங்கும் வருடம் என்ற சொல் மழையின் காரணமாய் அமைந்தது என்றனர். இதற்குக் காரணம் வர்ஷ என்ற மழையென்று பொருள்படும் சங்கதச் சொல் வருடம் என்ற தமிழில் வழங்கும் சொல்லுடன் ஒலியொற்றுமை உடையதாய் இருப்பதுதான்.

அடிச்சொல் வருதல்:

வர்ஷ என்பதும் வருடம் என்பதும் வருதல் என்னும் தமிழ்ச்சொல்லின் அடியாய்ப் பிறந்தவையே ஆகும்.  மழையென்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் வந்து பொழிகிறது. சிலவேளைகளில்  தவறி ஏரி குளங்கள் முதலியவை வற்றிவிட்டாலும், பெரும்பாலும் தவறாமல் வருகிறது. ஆகவே பெரும்பான்மை கருதி , வருதல் என்ற சொல்லினின்று வர்ஷ என்பதை அமைத்துக்கொண்டனர். மனிதனால் இயற்கையைத் தடுக்கமுடியாது. வரு > வர் > வர்ஷ.

வருடமாகிய ஆண்டும் பூமியின் சுழற்சியால் வருகின்றது. அதுவும்  ஓர் இயற்கையை முன்னிட்ட காலக்கணக்கு ஆகையால் தவறுவதில்லை. வந்தே ஆகிறது. ஆண்டு அல்லது வருடமானது ஐம்புலன்`கட்கு அப்பால்பட்ட காலம் ஆனால் ஒரு பொருளைபோலவே  வருடம் போனது, வருடம் வந்தது, வருடம் பிறந்தது, சென்ற வருடம் என்றெல்லாம் நாம் பேசுகிறோம். ஒரு மனிதனைக் குறிப்பதுபோல் அல்லவோ குறிப்பிடுகிறோம்.  மொழிகளின் வழக்கு அப்படி!  எனவே வரு + உடம்  என்ற இரு சொற்களையும் இணைத்து இச்சொல் புனையப்பட்டுள்ளது.  உடம் என்பது உடன் என்பதன் இன்னொரு வடிவம். உடம்படுதல், உடம்படு மெய் என்பன கண்டுணர்க. திறம் -  திறன் என்பதுபோல உடம் - உடன் என்ற திரிபுகளுமாம். உடன்வருவது காலம்தான்! அது முடிவதில்லை. நாம் முடிந்துவிடுகிறோம். வருகின்ற காலத்தை நாம் உடன் கொண்டுள்ளோம்.  அதுவே நம்மை உடுத்துக்கொண்டுள்ளது. உடு > உடல்; உடு > உடம்> உடம்பு.
நம்மை உடுத்து உடன்வருவது வரு+ உடம் என்று அமைந்தது மிக்கப் பொருத்தமுடைத்தே ஆகும்.

வரு + உடம் என்பதில் உள்ள இரு உகரங்களில் ஒன்று கெட்டு வரு+ டம் என்று அமைந்தது. இரு உகரங்களில் முன்னது கெட்டதா பின்னது கெட்டதா என்பது வீண்வழக்கு. பேச்சில் வரு என்பது வர் என்று திரியும்:  வருகிறாயா > வர்றியா என்பது காண்க.  வரு > வர். (வர்ஷ)(வருட)

வாரம் என்பதும் வார் என்ற சொல்லால் அமைந்தது.  வந்தே ஆகும் காலக்கணக்கு. வரு > வார் என்று திரியும். வா> வாராய். வார் > வாரான்.  வாருமே.

குறித்த காலத்தில் ஆற்று நீர் வருகிறது. ஆகவே அதுவும் மழைபோல வாரி என்பட்டது. (வரு>வர்>வார்)  பின் இது கடலுக்கும் பயன்படுத்தப்பட்டது. (வரு>வார்>வாரி: ஆறு , கடல்). வாரி என்பது மாரி என்றும் திரிந்தது.  வ- ம திரிபு.

இந்தச் சொல்லமைப்புகளிலெல்லாம் வருவது என்றால் தவறாமல் வருவது   என்பதே அடிப்படைப் பொருள் ஆகும்.  கிழமை என்பது உரிமை என்ற பொருளதாகும்.  நாம் காலத்தால் ஆளப்படுகிறோம். ஆதலின்  ஆள் > ஆள்+து > ஆண்டு.  ஆள் = ஆளுதல்; து-  உரியது.  காலமே மனிதனை ஆள்கிறது.

year < jear:   proto-Germanic: jeram.  Perhaps also from a word meaning something fixed.

மேற்கண்டவை இங்கும் விளக்கம் பெற்றுள்ளது காண்க.

https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_27.html 

அறிந்து மகிழ்க.