ஞாயிறு, 2 ஜூலை, 2017

On blogs pretending to be our blog

பொய்வலைப் பூக்கள் பூத்தன இணையத்தில்;
கைவலை போலும்  கயவர் புனைந்தவை
மெய்வலம் போவதை மிதித்துத் துவைத்திட
உய்விலர் ஊத்தையர்  உவந்து விளைத்தவை.

கைவலை :   பக்கவலை;  கூடுதலாக ஏற்படுத்திய இணைய வலை;
ஊத்தை :   அழுக்கு. இங்கு தீயமனம் காட்டுகிறது;

சனி, 1 ஜூலை, 2017

தோற்புக்கரணம் > தோப்புக்கரணம்

தோப்புக்கரணம் என்பது எளிதாக அமைப்பறியக்கூடிய
சொல்தான்.

தோப்பு என்பதன் மூலச் சொல் " தொல்" என்பதாகும். இது
பழமை என்று பொருள்தருவதுடன்,  காலக்கழிவினால் இப்போது அடைய எட்டாத நிலையையும் காட்டும்.

தொல் -  தொலை.
தொலை - தொலைத்தல்.
தொலை > தொலைவு.
தொலைதல் (தன்வினை), தொலைத்தல் (பிறவினை).

தொல்லை என்பது, மிக்கப் பழமையினால் இடர்ப்பாடு ஏற்படுதலைக் குறித்தது. இப்போது இடர் என்ற பொதுப்பொருளில் மட்டும் வழங்குகிறது.

தொல் >  தோல் என்று முதனிலை நீண்டது.

தோல் - தோல்வி.  (வெற்றியைத் தொலைத்தல்).
தோல் > தோற்பு  = தோல்வி.

தோற்புக்கரணம்  > தோப்புக்கரணம்.
தோல்வியடைந்தவர் போடும் "கரணம்".

இது மிகவும் சுருக்கமான விளக்கம். பலவற்றை விடவேண்டியதாயிற்று --  நீட்டம் தவிர்க்க.

படித்து இன்புறுங்கள்.


வெள்ளி, 30 ஜூன், 2017

வந்தஎல்லாம் எழுதவேண்டும்

வந்தஎல்லாம் எழுதவேண்டும் என்னும் உள்ளம்.
வாய்ப்பில்லை  வழிவிட்டால் தானே வெல்ல?
செந்தமிழைக் கணினியிலே சீராய்ச் செய்யும்
செவ்வெழுதி ஒவ்வாமைப் போரில் தொய்யும்!
இந்தநிலை எய்தியதால்  ஏய்ந்த எல்லாம்
ஏற்றுதலோ கூற்றுவன்வாய்ப் பட்ட வல்லோ!
மந்தநிலை வந்திடாமல் மாற்றி ஆக்கம்
மலர்விக்கும் எம்முயற்சி புலரு மாமோ!


பொருளுரை:

வந்த எல்லாம் --- மனத்தில் எண்ணிய எல்லாம்;
என்னும் உள்ளம் ---  என்று மனம் சொல்லும்;
வழி விட்டால்தானே---   (கணினி) ஒத்துழைத்தால் தானே;
வெல்ல ==  வெற்றி அடைய (முடியும் ).
செவ் வெழுதி === நல்ல எழுதி (  எடிட்டர்)
ஒவ்வாமை --- ஒத்துழைக்காமல் போதல்.
போரில் --   போராட்டத்தினால்;இழுபறியால் .
தொய்யும்----இயக்கத்தில் சிறப்பு கேடு அடையும்;
ஏய்ந்த ===  வந்து சேர்ந்த;
ஏற்றுதலோ --   வலைத்தளத்தில் வெளியிடுதலோ;
கூற்றுவன் வாய்ப்பட்ட  -  அழிவிற் பட்டன;
அல்லோ - அல்லவோ;
மந்த நிலை -- இயக்கம் கெடுதல்:
புலருமோ --  ஒளியில் மேல்வருமோ.