கரப்பான்பூச்சிகளையும் கடவுள்தான் படைத்தார். ஆனால் ஏன் படைத்தார் என்று புரியவில்லை. வீடுகட்குள் வந்தேறி பலவிதப் பொருள்கேடுகளையும் விளவிக்கின்றன. இவற்றை அவர் படைக்காமல்
இருந்திருந்தாலும் ஒன்றும் மோசமில்லை என்கிறார்கள்.
இரு பெண்கள், அவர்களில் ஒருவர் ஒரு பிள்ளையைத் தூக்கிக்கொண்டு
மருத்துவரின் கடைக்குச் சென்றுகொண்டிருந்தனர். பிள்ளை அழுது கத்திக்கொண்டிருந்ததால், அதை எப்படி அமைதியாக்குவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. சட்டென்று ஓர் ஓரப் பொந்திலிருந்து
ஒரு கரப்பான்பூச்சி அங்கு வந்துவிட்டது. அந்தப் பெண்களில் ஒருவர், உடனே: " பார், கரப்பான் பூச்சி வந்துவிட்டது, நீ இன்னும் கத்தினால்
வந்து கடிக்கும்" என்றார். உடனே பிள்ளை அடங்கிவிட்டது. இதைக்
கவனித்துக்கொண்டிருந்த யான், " கடவுள் ஏன் கரப்பான் பூச்சியைப்
படைத்தார் என்று இப்போது புரிந்துவிட்டது" என்று அருகிலிருந்த
தோழியிடம் சொன்னேன். இதுதான் காரணமாக இருந்தாலும் இருக்கலாம்.
நிற்க, கரத்தல் என்றால் ஒளித்தல். கரப்பு என்பது ஒளிந்திருத்தல்
என்று பொருள்தரும். இந்தப் பூச்சிகள் பெரும்பாலும் ஒளிந்துகொண்டு
இருளில் வாழ்பவை. இரையை, நீங்கள் உறங்கச்சென்றபின் வெளிவந்து அலைந்து தேடும். ஆனுதல் என்பது நீங்குதல்
என்று பொருள்தரும். கரப்பு = ஒளிந்திருந்து, ஆன் = நீங்கிவரும், பூச்சி =~ என்பது பொருத்தமாக உள்ளது.
கரப்பான் என்று ஒரு தோல்நோய் வகையும் உள்ளது; ஆனால் இப்பூச்சிக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.
வேண்டாதவற்றைத் தின்று அப்புறப்படுத்த இவற்றைப் படைத்தான்போலும். ஆனால் வேண்டியவற்றையும் இவை கெடுத்துவிடுகின்றன.