சில வேளைகளில் சில காரியங்கள் நடக்கின்றன. வேறு சில வேளைகளில் அக்காரியங்கள் நிற்கின்றன. காரியங்கள் நடக்குங்கால் அவற்றை நடப்புகள் என்கிறோம். அவை நிற்குங்கால் அவற்றை நிலை ,நிலைமை என்று குறிக்கிறோம். நாய், பூனை மனிதன் ஏனை விலங்குகள் நடத்தலும் நிற்றலும் போல் காரியங்களும் நடக்கவும் நிற்கவும் செய்கின்றன . நடக்குங்கால் நிற்குங்கால் என்று எழுதும்போதே காரியங்களுக்கும் கால் முளைத்து விட்டனவோ என்று எண்ணத்தோன்றுகிறது. ( கால் = காலம் ) .ஆனால் எல்லா மொழிகளிலும் இதுபோன்ற சொற் பயன்பாடுகளும் சொல்லாக்கங்களும் உள்ளன. Situation என்ற சொல்லைக் கேட்கும்போது காரியங்கள் உட்காருவதும் உண்டுபோலும் என்று எண்ணத் தோன்றுகிறதா ? ஆனால் situare என்ற இலத்தீன் சொல் ஓரிடத்தில் வைத்தல் , இடுதல் என்ற பொருளில் situation என்ற சொல்லைப் பிறப்பித்தது. Status என்பது நிற்பது stare என்பதிலிருந்து வருவதால் அதை நிலை , நிலைமை என்று மொழி பெயர்த்தால் சொல் அமைப்புப்படி சரியாக இருக்கும் என்றாலும் பொருந்துவதாகவும் இருக்கவேண்டும். . Legal standing, standing in society ஆகிய வழக்குகளிலிருந்து என்ன உணர்கிறோம்.?
மலாய் மொழியில் நிலைமையைக் குறிக்க keadadaan என்பது வழங்குகிறது.ada
என்பது இரு(த்தல்) என்று பொருள்படும். keadadaan இருப்பு என்பது சொல்லமைப்புப் பொருள் எனினும் அதை நிலை என்றே கூறவேண்டும்.
நிலைமை என்பதைக் குறிக்க பல சொற்களைச் சீன மொழி கையாளுகிறது. அவற்றுள் இருக்கை seat 场所 [chǎngsuǒ] {noun} என்பதும் ஒன்றாகும்.
நடப்பும் நிலையும் தொடர்பு உள்ளவை. இளைஞன் ஒருவன் உவதி (யுவதி)(உவப்புத் தருபவள் ) ஒருத்தியைக் காதலிக்கும்போது அது நடப்பு. காதல் மாறாமல் இருந்தால் அது நிலை அல்லது நிலைமை ஆகிவிடுகிறது. மேலும் ஒரு மாற்றம் அடையாமல் காதல் நிற்கிறது. நட > நடப்பு. நில் > நிலை. நிலை + மை = நிலைமை. நிலமை என்று பேச்சில் வந்தாலும் அதைப் பிழை என்பார் தமிழாசிரியர். கவிதையில் ஏற்ற இடத்தில் எதுகை நோக்கி ஐகாரக் குறுக்கமாகக் கையாளலாம் என்றாலும் அது கவிஞன் தீர்மானிப்பது.
நடப்பு, நிலை ,நிலைமை என்பவற்றை நடப்பு , நிற்பு என்றும் சொல்லலாம்.
ஆனால் நிலை, நிலைமை என்பவற்றை நிற்பு எனல் பேச்சு வழக்கில் இல்லை. என்றாலும் நிலை என்பது நிற்பு என்பதே ஆகும்.
இனி நிபுணன் என்ற சொல்லை ஆய்வு செய்வோம். நிற்பு எனற்பாலது
நிபு என்று இடைக்குறைந்து இயலும். நிபு உணர்ந்தவரே நிபுணர்.
நிபு + உணர் . நிலை உணர்ந்தோர். உணர்வு குறித்த இச்சொல் அவ்வுணர்வு உடையோனைக் குறித்தல் ஆகுபெயர். நிபுணர் என்பதே அர் என்று முடிந்ததனால் அதன்மேல் இன்னோர் -அர் புணர்த்தப் படவில்லை. அர் இன்றியே அர் உள்ளதுபோல் இயன்று பணிவுப் பன்மைபோல் பேச்சில்
வழங்கியது.
அதுபின் நிபுண என்று செதுக்கப் பட்டு, நிபுணன், நிபுணர் என்று ஒருமை பன்மையாய் இயன்றமை உணர்க. நிற்பு உணர்ந்தோனே நிபுணன் ஆவான். நிபுண + அத்து + அம் = நிபுணத்துவம்.
செந்தமிழ் இயற்கை கெடாமல் வரவேண்டின் நிற்புணர்நன் > நிபுணர்நன் என்று வந்திருக்கலாம். அப்படி வந்தாலும் நாளடைவில் ர், ந என்ற அடர்வுகள் தொலைந்து நிபுணன் என்றே திரிந்திருக்கும் .ர் , ந தங்கி ஆகப்போவது ஒன்றுமில்லை. சொல்லொழுக்குத் தடையே மிஞ்சும் .
சிலர் நி + புண் என்று பிரித்து, பொருள் கூறுவர் . எனின் புண் என்பது புண்ணியம் என்பதன் பகுதி.. மேலும் புண் எனற்பாலது புள் என்பதன் திரிபு. புள்ளியம் என்பதே புண்ணியம் என்று திரிந்தது. Something that is capable of
good points. இதிலும் நி என்பது நில் என்பதன் கடைக்குறைதான் . ஒரு நிபுணனுக்குப் புள்ளி கொடுப்பான் அவனினும் பெரியவன் ஆதல்வேண்டும்.
சிலர் இதை விரும்பலாம் . எனினும் புண்ணியத்திற்குப் புள்ளி கொடுப்பான்
இறைவன் . நிபுணனுக்கு ?
புள்ளி கொடுப்போனே நிபுணன் ! பெறுவோன் அல்லன் எனல் கூடும் .
நிபுணர் பலராதலும் உலகில் உண்டு.