வியாழன், 25 நவம்பர், 2010

நலம்் குலவு தமிழினில்....

உலகு படைத்தவன் ஊழி முதல்வனாம்
நிலவு வேணியன் நிறுவிய அமைப்பினில்
அலவு இலாதவை அழகு மிகநலம்்
குலவு தமிழினில் கூறி விளக்கினீர்.

அலவு இலாதவை - குழப்பமிலாதவை.

This poem praises a writer for his good work.

புதன், 24 நவம்பர், 2010

some lines on my cat


 புதுக்கவிதை

இது எங்கள் பூனை,
இது எங்கள் பூனை.
எது பக்கம் வந்தாலும்
ஏதும் பயந்து ஓடுவதில்லை!

என்ன அங்கே வருதோ என்று
இருந்த படியே ஆய்வு செய்யும்.
கண்ணை விரித்துப் பார்த்து விட்டுக்
கலங்கிடாமல் நடந்து போகும்.

மியாவ் என்று நான் சொன்னாலே
மியாவ் என்று தானும் சொல்லும்.
குரலில் என்றன் உணர்வு தெரிந்து
மியாவில் பலவகை மீட்டிக் காட்டும்.

உடலோ கொஞ்சம் கனத்துப் போச்சு!
உட்கார்ந்து நேரம் கழிக்க லாச்சு!
உலகம் அமைதி என்றே நினைத்து
உறங்கிக் காலையில் விழிக்க லாச்சு.

போர்த்திப் போட்டேன் தூங்கு! என்றேனே
போர்வைக் குள்ளே கிடக்கும் சோம்பல்
நேர்த்தி என்று நினைத்தி டாமல்
நீட்டி மேலே தூங்கும் பூனை!

கிழடு ஆன போதும் இன்னும்
கிழட்டுப் பற்களில் பழுதோ இல்லை!
தோலும் முகத்தில் சுருங்க வில்லை,
வாலின் ஆட்டமும் அடங்க வில்லை.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

இறையின்பம்

தனித்தலையாய் இறையின்பம் தினைத்துணையே நன்மை!
பனித்தூய்மை அடியரொடும் இனித்திடுமா றாழ்ந்து
நினைத்தமர்ந்து நிலைப்படுத்தி நிறைவினையே காணல்
அனைத்துலக அடியவரும் பனைத்துணையென் றேற்பர்.


இதன் பொருள்:

தனித்தலையாய் = தானே தனியராய்; இறையின்பம் = இறைவன் பால் பத்தி (பக்தி) கொண்டு அவனை நாடிச்சென்று இன்புறுவது;
தினைத்துணையே நன்மை! = சிறிதளவே நன்மை தருவதாகும்;

பனித்தூய்மை அடியரொடும் = பனியைப் போல தூயவரான அடியார்களுடன், இனித்திடுமாறு =இன்பம் உண்டாகுமாறு ; ஆழ்ந்து நினைத்து = தியானம் செய்து;
அமர்ந்து நிலைப்படுத்தி = உட்கார்ந்து மனத்தை நிலைப்படுத்தி; நிறைவினையே காணல் = அத்தியானத்தின் வெற்றியைக் காணுவது;
அனைத்துலக அடியவரும் = ஏனை மதங்களின் அடியார்களும் பனைத்துணையென் றேற்பர். =பெருநன்மை பயப்பது என்று ஏற்றுக்கொள்வர்.,கூட்டு முயற்சி ஆதலினாலே. என்றவாறு.