புதன், 11 அக்டோபர், 2023

தொப்புள்

தொப்புள்  என்ற சொல்லின் உள்ள தொப்பு என்பது,  உள்ளாக வயிறு தொய்தலைக் குறிக்கிறது,   தொய்வு என்பது உள்ளாகவும் வெளியாகவும் அமையலாம் ஆகையால்,    இச்சொல் உள் என்ற சொல்லுடன் முடிகிறது.  உள் என்பதை விகுதியாகக் கொண்டாலும்  ஒரு தனிச்சொல்லாகக் கொண்டாலும் இச்சொல்லின் பொருள் ஏதும் பாதிப்பு அடையவில்லை என்பதே  உண்மை  இங்கு விளக்கத்தின் பொருட்டு,  உள் என்பதை உள்ளாக என்று எடுத்துக்கொள்வோம்.

தொய் என்பது  கடைக்குறைந்தால்  தொ என்றாகும், " தொ" என்ற சொல் காணப்படாமையால்,  இதை  தொய்>  தொய்ப்பு >  தொப்பு என்று காட்டுவதே பொருந்தும்  திரிபு  ஆகும்.  உள் என்ற சொல்லை இணைக்க,  ஓர் உகரம் கெட, தொப்புள்  ஆகிறது.  யகர ஒற்று இறுதி சொற்களில் மறைதல் இயல்பு.  எடுத்துக்காட்டு:  தாய் >  தாய் + தி >  தாதி  ( தாதிமார்).   இங்கு யகர ஒற்று மறைந்தது.  இன்னொன்று:  வேய்(தல்) >  வேய்வு >  வேவு.   ( வேவு பார்த்தல்).  பெரும்பாலும் மாறுவேடத்தில் ஒற்றர் சென்று பணியாற்றியமையால்,  இது வேய்தல் அடியாக அமைந்தது.  வேய் -  வேடு >  வேடம்.  கேட்டால் விரிவாக உணர்த்தப்பெறுவீர்.

உள் என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்ற சொற்கள் பல.  நாம் நன்கு  அறிந்த விகுதி பெற்ற சொல்  "கடவுள்" என்பது.  இ( ன்னொன்று ஆயுள் என்பது.  உயிருடன் உடல் கூடிவாழ்தலே  ஆக்கம்  ஆகும். அவ்வாறின்மை என்பது அழிவு என்றறிக.  ஆக்கமுற இவ்வுலகில் உலவுதல் அல்லது இருத்தல் என்பதே ஆயுள் என்ற சொல்லால் குறிக்கப்பெறுகிறது. இச்சொல் பின்னர்  ஆயுசு என்றும் பேச்சு வழக்கில் வரும்.  ஆயுசு என்பது திரிசொல் ஆகும் என்பதறிக.  ஒரு திரிசொல்லைப் பிரித்து அடிச்சொல் கூறினால் சில வேளைகளில் தவறாக முடியும்  ஆதலின் கவனம் தேவை.

தொய்ப்பு + உள்  >  தொப்புள்,  

தொப்புள் என்பதற்கு இன்னொரு பெயர் :  உந்தி என்பது.  இதனை "கரியமால் உந்தியில் வந்தோன்"  என்று ஔவையின் பாட்டில் வருதல்கொண்டு அறிக.  தொப்புள் என்பது கொப்பூழ் என்றும் திரியும்.  இங்கு தொப்புள் என்பது " உள் கொண்ட "   ( பெரும்பாலும் உள் இழுத்துக்கொண்ட அல்லது தொய்ந்த நிலையில் இருப்பதனால்,  கொள் > கொப்பூழ் என்றும் கூறலாம் என்றாலும்,  தொப்புள் >  கொப்பூழ்  திரிபு  என்பதும் பொருத்தமே. 

கொள் >  கொள்+ பு>  கொட்பு  + உள் >  கொப்பு+ ஊழ் >  கொப்பூழ்.  இங்கு உள் என்பது ஊழ் என்று திரிந்தது.  இதிலிருந்து ஊழ் வினை என்பது மனிதனின் ஆன்மாவின் உள்ளிருக்கும் (முன்) வினை என்பதும் தெளியலாம்.

 தொ என்பது சொ என்றும் பின் சொ என்பது கொ என்றும் திரியும்.  ( தனி> சனி;  தங்கு> சங்கு ). இது பின்னும்  சேரலம் > கேரளம் என்பதாய்த் திரியும்.  ஆகவே தொப்புள் என்பது கொப்பூழ் என்று திரிவது முறைப்படியாக  அமைந்ததே ஆகும்.

தொப்புள் >  கொப்பூழ்.  ளகர ஒற்று ழகர ஒற்றானது,   இது  தமில் >  தமிழ் என்பது போலும்.  தம் இல் மொழி  தமில் > தமிழானதாய் அறிஞர்கள் கூறுவர்.

இன்னும் இவ்வாறு திரிந்தவைகளை முன்னர் வந்த இடுகைகளில் கண்டறிக.  குறிப்பெடுத்துக்கொண்டு மனப்பாடம் செய்துகொள்க.  இதனால் அடிக்கடி தேடிக்காணும் நேரம் குறையும்.

உந்தி >  ( உந்தி வெளிவருவது என்று பொருள்).

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

கருத்துகள் இல்லை: