திங்கள், 8 மே, 2023

தேர்தல் வெற்றியில் தேன்போலும் வாழ்வு

 கர்நாடகா தேர்தலில் வேட்பாளர் சிலரும் அவர்களின் தாய்தந்தையரும் கூட மக்கள்முன் தோன்றிக் கண்ணீர் வடித்துக்கொண்டு,  தங்களைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.  அரசியல் களத்திலே இருப்போருக்கும்கூட,  வேலையிழப்பு,  ஊதியமின்மை என்பன இன்னல்கள் பலவற்றை உண்டாக்கிவிடுகின்றனவென்பது வெளிப்படையான உண்மையாகும். தேர்தல் வெற்றியென்றால் பல நன்மைகள் கிட்டும். சம்பளத்தோடு கிம்பளமும் கிட்டும்.  அதைக் கூறும் இப்பாடல்  வருமாறு. கிம்பளமும் அழகு என்ற சொல்லில் வைக்கப்பட்டுள்ளது.

வெண்பா:

வேட்பாள ராய்நின்று வெற்றியே பெற்றிடின்

ஆட்பட வேண்டாமே அல்லற்கு  ----   தாட்பட்டு 

மாற்றுக் குழுதன்னைத் தாம்மருவ வேண்டாமே

ஆற்றுப்  படுமா  றழகு.



வேட்பாளர் -  தேர்தலில் நிற்பவர்

ஆட்பட -  ( அனுபவிக்க)

அல்லற்கு  -   அல்லலுக்கு.

தாட்பட்டு -   பிறர் காலில் விழுந்து

மாற்றுக் குழுதன்னை  -  வேறு அரசியல் கட்சிகளில் உள்ளோரிடம்

தாம் மருவ - போய்ச் சேர்ந்து உறுப்பினராகிட

ஆற்றுப் படுமாறு  -   முறையான அரசியலாளராக வழிச்செல்லும்படியாக

அழகு  -   நலங்கள் யாவும் ஏற்படும்.


இது இயல்பான  எதிர்பார்ப்புதான்.  ஆனால் அரசியல் வாழ்விலும் பொருளிழந்தோரும் இழிக்கப்பட்டோரும் கொலைப்பட்டாரும்கூட உண்டு.

அது வேறு விடையமாகும்.

வேட்பாளர் கண்ணீர் வடிப்பது எதற்கு என்பதை இப்பாடல் கூறுகிறது.

மக்கள் சேவையே நோக்கம் என்பார்கள்.  இல்லை,  வாழ்வின் அழகே நோக்கம்.

அதாவது வேட்பாளர் மக்களிடம் வேலை கேட்கிறார்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை: