புதன், 30 அக்டோபர், 2024

திவாகரன் என்ற பெயர்

 தீ +  ஆகு+  அரி + அன்.

தீயுமிழ்ந்து பகன்முழுமையும் ஒளிதந்து மாலையில் மறைத லுடையது சூரியன்.

சூரியனில் தீயிருப்பதும் அது தொல்லைவிலிருந்தாலும் அருகில் இருப்பதுபோலவே நம்மைச் சுடுவதும், சிலவேளைகளில் அதன் வெப்ப அலையிற் பட்டு மனிதரும் பிறவும் உயிரிழப்பதும் இன்ன பிற அனைத்தும் நீங்கள் அறிந்தவைதாம்.

இதில் உள்ள தீ என்னும் சொல்,  தி என்று குறிலாகும்.  இவ்வாறு தினம் என்ற சொல்லிலும் வந்துள்ளது  இதற்கு எடுத்துக்காட்டு:  தீ > தி >  தி + இன்+ அம்> தி+ ன்+ அம் >  தினம். இங்கு வரும் இன் என்ற இடைநிலை, தன் முதல் எழுத்தை இழக்கும்.

ஆயினும்  தீபம் என்ற சொல்லில்  தீ+ பு + அம் என, குறுகாமல் வரும்.

தீ ஆகு என்பவை திவாகு என்று,  குறுகினபின் வகர உடம்படு மெய் பெறும்.

அரி என்ற சொல்லில். அடிச்சொல் அர் என்பது. இவ்வாறு அர் என அடிச்சொல் ஏற்று,  அன் விகுதி பெறும்.

தி ஆகு அர் அன் என்பவை இணைய,  திவாகரன் என்ற சொல் உருவாகும்.

அர் >  அரியமா   > பெரிதாகிய  அரி.

அர் >  அருக்கன்  ( அர்> அரு> அரு+ உக்கு+ அன்>  அருக்கு+ அன்) > அருக்கன்.

உ- என்றால் முன். கு என்பது சேர்வு குறிக்கும் பழஞ்சொல். இப்போது உருபாகவும் தன் கடனாற்றுகிறது.

அர்> அரு> அரு+ உண்+ அன் > அருணன் என்பதில் உண் இடைநிலை வந்தது.

திவா என்ற சுருக்கச்சொல்லிலும்   தி ( தினம்),  வா- வருவோன்  என்பது காண்க.

தீ என்பது தி என்று குறிலானது.

நபோமணி என்ற சொல்லிலும்,  நாள் என்பது,  ந என்று குறுகிற்று.   நாளெல்லாம் வானில் போகும் மணி, நபோமணி.

உங்களுக்கு நேரம் போக, சொற்களைச் சுருக்கி விளையாடிப் புதிய சொற்களைப் படைத்து ஒரு விளையாட்டு உண்டாக்கினால்,  இரத்த  அழுத்தம் குறைந்து இன்பமாய் வாழலாம்.

விண்ணில் அச்சாகத் திகழ்பவன் சூரியன்.

வி > விண்.  அல்லது  விண்> வி .   

வி + அச்சு + ஆன் >  விவச்சு ஆன் > விவச்சுவான்.   இதுவும் சூரியனுக்கு இன்னொரு பெயர்.

இங்குக் கூறிய நெறிமுறைகளைப் பின்பற்றி, சூரியனுக்கு ஐந்து  பெயர் வைத்து தீபாவளியைக் கொண்டாடுங்கள்.

தீபாவளி வாழ்த்துக்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு இனி.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

 இயற்கை  காட்டினை மயக்குறக் கொளுத்தி 

எரித்தது வெண்மையில் பொரித்தும் உயிர்களை!

அயற்கை  நின்றவன் அறியான் மாந்தனே

மாந்தன்  பின்னாள் தீயினை அறிந்து

தான்தன் செயற்குப் பயன் விளைத்  தனனே

அகத்தின் இருளை அகற்றிடத்  தீபம்

மிகத்திற னுடனே ஒளிதர  வைத்தான்.

தீப ஒளிஎன மகிழ்ந்தனன்  ஆடி

நாபயன் கூட்ட நாமமும் சார்த்தினன்.

இயற்கைச் சூழலில் எழுந்த பண்டிகை

மயக்கம் தவிர்ப்பீர் பின்வர விணைய

இயைத்தனர் நயந்தரு ஏற்படு நிகழ்வே.

அன்றிருந்  தனவாம் அருஞ்சம  யங்கள்

ஒன்றுபட்  டொளியின் ஒண்மை கூட்டின.

நீள்வர லாற்றின் நேர்வன இவையாம்

கேள்கதை யாவும் நாள்தொறும் மகிழ்த்தும்.

அத்தீ பாவளி  இத்தரு   ணந்தனில்

முத்தம்  இட்டதே  முன்கத வதனை.

வருகவ   ருக தீ  பத்தொளிப் பண்டிகை.

இன்பநல் உணவு இனியப  லகாரம்

அன்புடன் கூடி அனைவரும் உண்போம்

நமது நேயர்கள் யாவரும் மகிழ்க

யாவர்ஆ யினுமே மகிழ்க இனியே

தாவறு தீபா வளிவாழ்த்  திதுபல.

காரமும் உணவும்  கொண்டு

சீர்பல பெறவே சீமையர் மிகவே. 


அரும்பொருள்:

மயக்குற -  உயிர்கட்கு மயக்கம் வருமாறு;

வெண்மையில் - சாம்பலில்

சதைகள் வேகுமாறு;

அயற்கை -  பக்கத்தில்  , அயலில்.

பயன் விளைத்தனன் -  பிறகாலத்தில் தீப்பயன் அறிந்தான்

நா பயன் கூட்ட -  ( பெயரிட்டு)  நாக்கு பயன் உண்டாக்க

சார்த்தினன் -  பெயரிட்டான் ,  நாமம்

பின்வரவிணைய  - பின்னால் வந்த நிகழ்வுகளும் கதைகளும் இணைய;

அகத்தின்  -  வீட்டின்

பிற்காலத்தில் பல கதைகள் நிகழ்வுகள் தீபஒளிப் பண்டிகையில் சென்று இணைந்தன.அவற்றைத் தம்மவை என்று சொல்லிக்கொள்ள  அவற்றுட் கதைகளைக் கொண்டு  இணைத்தல் என்பது இயற்கை (அல்லது உள்ளதுதான்).

கால நீட்சியில் கதைகள் இணைதல் எல்லா நாடுகளிலும் உண்டு.

தாவறு -  குற்றமற்ற,  தவறுகள் இல்லா.

பெறவே என்பதைப் பெறுகவே என்று இணைக்க. இது கவிதையில் தொகுத்தல்.

மிகவே என்றது மகிழ்வு கூடும்படியாக என்றவாறு.

இங்கனம் பொருள் கூட்டாமல் முன் முடிந்த வரியுடன் இணைத்தும் பொருள் கொள்ளலாம்.

யாவரும் மகிழ்க என்ற நம் நேயரல்லாத நொதுமலரும் மகிழ்க என்றவாறு.

சீர்பல - நலம் பல

சீமையர் - நாட்டினர்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

திருத்தம் 03112024

திங்கள், 28 அக்டோபர், 2024

அங்கீகரித்தல்

 இந்தச் சொல்லை வேறு சொற்களால் பொருளொப்புமை செய்தல் வேண்டுமானால் அதற்குச் சில சொற்களைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்:

சுமத்தல், தரித்தல், தாங்குதல், எடுக்குதல், எடுத்துதல், ஏற்றுக்கொள்ளுதல், தூக்குதல், வேய்ந்துகொள்ளுதல், வாங்கிக்கொள்ளுதல், பற்றுதல், பொருந்துதல், தொடக்குதல், தெரிந்துகொள்ளுதல் என இவை எல்லாவற்றையும் அங்கீகரித்தல் என்பதற்கு இணையாக வல்லவர்கள் ஆளக்கூடும். போதுமான பயிற் சியில்லாதவர்க்கு இயலாமை ஏற்படலாம். ஒருபொருட்சொல் அகரவரிசைகளின் மூலம் இன்னும் பலசொற்கள் கிட்டலாம்.

இதற்கு மிக்க நேரான பொருளொருமை  " அதற்கு இணையாக ஈர்கரித்துக்கொள்ளுதல்"  என்ற சொற்றொடராக இருக்கக்கூடும்.

"அண் கு ஈர் கு அரித்துக்கொள்ளுதல்''

இதனை வாக்கியப்படுத்தினால் "அண்மிச் சேர்ந்து  ஈர்ப்பில் இணைந்து அருகில் கொணர்தல்"  என்பது பொருளொற்றுமையைச் சிலர்க்குத் தரக்கூடும். சிலருக்கு புரியாமலும் இருக்கலாம்.

இங்கு கரித்தல் என்ற சொற்பகவு ( அங்கீ - கரித்தல் ) : கரித்தல் என்ற முழுச்சொல் அன்று.  கு அரு இ - த்தல் என்ற பகவுகளின் சேர்க்கையான பகுதிச்சொல்லே ஆகும்.  அரு இ> அரி> அரித்தல் என்பது அருகிற்கொணர்தல் என்று பொருள்படுவதே  ஆகும்.  கு அரி> கரி என்பதை இதுபோன்ற சொற்புனைவுகளில் ஒரு துணைவினையாக ஏற்றுக்கொள்ளலாம். கரி என்பது ஒருவகைச் தமிழ்ச் சொற்புனைவுகளில் உண்டான ஒரு துணைவினை அமைப்பு ஆகும்.

இச்சொல்லில் அங்கு என்பது அண்மிச் சேர்ந்து என்ற பொருளாகும். அங்கு என்ற இடச்சுட்டினைத் தவிர்த்துள்ளோம், இடச்சுட்டுப் போல் தோன்றினும் இது இடச்சுட்டுடன் தொடங்கிய சொல் அன்று.  அண் கு =  அண்மிச் சேர்ந்து என்பதுதான்.

அண்குஈ  என்பது அங்கீ என்றாகும். ஈர் ( ஈர்த்தல்) என்பதில் உள்ள ரகர ஒற்று மறையும்.  அண்கீ  > அங்கீ.

இதில் மீண்டும் கு சேர்ந்துள்ளது.

பின் அரு இ என்பவும் சேர்ந்துள்ளன.

+கு+ அரு+ இ >  கரி என்றாகும்.

இப்போது அங்கீகரி என்ற முழுவுருவும் கிடைத்துவிட்டது,

இப்போது எல்லாத் துண்டுகளையும் இணைக்க:

அண் கு ஈ( ர் ) கு அரு இ > அங்கீகரி என்றாகும்.

இப்போது இச்சொல்லை எவ்வாறு அமைத்தனர் என்பதை அறிந்து கொண்டோம்.

எது சரி என்பதைவிட, எது சொல்லமைப்பாளனின் மூளையில் வேலை செய்த பகவுகள் என்பதே முதன்மையாகும். இவை நீங்கள் அறிந்துகொண்டவற்றுடன் வேறுபடலாம்,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.