எழு என்பது அழகான செந்தமிழ்ச் சொல். இதிலிருந்து எழும்பு என்ற வினைச்சொல் பிறந்தது. ஒரு வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினைச்சொல் தோன்றியுள்ளது இதிலிருந்து அறியலாம். பு என்ற விகுதியும் வினைச்சொல்லாக்கத்திற்கு உதவுவதை இது தெளிவிக்கிறது . எழும்பு என்பது சில தமிழ்க்குடிகளிடை "ஒழும்பு" என்று வழங்குகிறது. எகர ஒகரத் திரிபு முன் அறியப்பட்டதே எனினும் எழும்பு என்பதே பெரிதும் தமிழ்ப் பேச்சினரிடையே பெருவரவினதாகும்.
இந்தப் பாடல் வரியைப் பாருங்கள்:
"அலைகடல் சேரும் வான்போல எழும்பும்
நாமே பார்மேல் ஈடிலா காதலர்"
என்பது காண்ணதாசன் சொல்லழகு. ( எதுகை மோனை அழகை விடுத்துக் கருத்தழகு ஒன்றையே கொண்டு இவ்வரி செல்கிறது. எழும்பு என்ற சொல் இங்கு கவின் சேர்க்கிறது. மண்டி என்ற சொல்லைப் பாரதி பயன்படுத்திய பாங்கு போன்றது இது. " ( .......வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.....)."
படுக்கையிலிருந்து எழுவதையும் எழும்பு என்பர். பு விகுதி இன்றி எழு என்று மட்டுமே இதைக் குறிக்கலாம். எ-டு: எழு - விழி - நட" என்ற தொடர் காண்க. ( "விழி - எழு - நட" என்பதுமது.
எழு என்பதிலிருந்து எழுந்திரு என்ற கூட்டுச்சொல் அமைந்து, அது பின் எழுந்திரி என்று மாறிவிட்டதுடன், மேலும் எந்திரி என்றும் திரிந்தது. இங்கு திரிபுகள்: இரு என்ற ஈற்றுச்சொல் இரி என்று மாறியது. அஃதேயன்றி ழுகரம் மறைந்து இடைக்குறையுமானது. எழுத்துத் தமிழை நோக்கப் பேச்சில் வரும் திரிபுகள் மிகுதியே ஆகும்.
ழுகரம் மறைந்து மேலும் திரிபுகளால் தாக்குண்ட இன்னொரு சொல்லை இங்குக் காண்பதும் விளக்கத்திற்கு உதவும்.
ஒரு வாதத்தில் ஒருவன் சரிவு அடையுமாறு இழுத்தல் சர்ச்சை ஆகும். இது சரி ( சரிவு ), இழு ( இழுத்தல் ), விகுதி ( சை ) முதலியன வந்த சொல்லாக்கம்.
சரி + இழு + சை > சரி + இ + சை > ச(ர் இ) ( இ ) சை > சர்ச்சை.
ரிகரத்தின் ஈற்றில் நின்ற இகரம் வீழ, சரி என்பது சர் ஆனது.
வருத்தகம் என்பதில் ருகரத்தின் உகரம் வீழ்ந்து வர்-- ஆனது போலுமிது.
(வருத்தகம் > வர்த்தகம்). வருத்துதல் > பொருள் வரச் செய்தல். வரு> வருத்து என்பது வரத்து என்று திரிந்து வருந்து - வருத்து என்ற பிறவினையுடன் வேறுபடும். எ-டு: நீர்வரத்து, போக்குவரத்து. வரு என்பதே பகுதி.
இழுச்சை என்பதிலும் ழு முன்பே ஒழியப் பின் இகரமும் மறைந்தது.
மனம் இடுதலைக் குறிக்கும் இடுச்சை என்பது இச்சை ஆனது காண்க. ழு, டு என்பன மறைதல் இயல்பு.
வழுக்கணை என்பது வக்கணை ஆனதும் காண்க. ( அணைப்பதும் அணைத்து வழுக்கிச் செல்லும் பேச்சு)
வக்கணைப் பேச்சுக் காரி பெரிய வாய்வீச்சுக் காரி என்பதுண்டு.
இரு என்பது இரி எனச் சேரலர் பேச்சில் வரும்.
இன்னும் திரி என்று முடியும் பதங்கள் பல உண்டு எனினும் இத்துடன் முடிப்போம். நீங்கள் ஓய்வு பெற்றபின் தொடரலாம்.
தட்டச்சுப் பிழைகள் பின் திருத்தம் பெறும்.
,