Pages

வெள்ளி, 20 டிசம்பர், 2019

பல்வேறு சொற்புனைவுகள். இவற்றுள் "இரு(2)" எப்படி வந்தது?

இருக்கிறான் இருந்தாள் முதலிய முற்றுக்களில் முன்நிற்கும் இரு என்னும் வினை இன்று இடம் குறிக்கும் உருபாகவும்  இல்லம் குறிக்கும் சொல்லாகவும் உள்ள "இல்" என்பதினின்று வந்தது என்பதே முடிபு  ஆகும்.

இல் >  இரு.  (வினைச்சொல் : இருத்தல்).

இடமென்ற சொல்லும் இடு என்பது மிகுந்தானதே  ஆகும்.   இடு + அம் = இடம் என்பதறிக.  இஃது அம் என்னும் விகுதியேயன்றி ஐ என்னும் விகுதியும்  (<மிகுதியும்) பெறும். இடு + ஐ = இடை. அப்போது  இரு இடங்கட்கு இடைப்பட்டது -  நடுவிலது -  என்றொரு சிறப்புப் பொருளையும் உணர்த்தவல்லது. தமிழின் ஏனை  இனமொழிகளில் (திராவிட மொழிகளில் ) இஃது இடம் என்றே பொதுப்பொருள் கொண்டிலங்கு மென்பதும்  அறிக.

இடைபடுதல் ("மூக்கை நுழைத்தல்" என்பது அணியியல் வழக்கு) என்ற வினைச்சொல்லும் உளது.  இடைப்படுதல் என்பது இடையே  வந்திருத்தல் என்பதுபோல் பேச்சில் வருதல் அறியலாம்.

இடு > இரு என்பவற்றின் அணுக்கமும் உணர்க. மடி > மரி என்பது  போலவே இத்திரிபுமாம்.

ஒன்றினோடு இன்னொன்று (வந்து) இருக்குமாயின் அது ஒன்றிற்கு அடுத்த
"  இரு "  அல்லது இரண்டு ஆகும்.  இருத்தல் என்ற வினையடியாகவே இரண்டிற்கும் எண்ணுப்பெயர் வந்துள்ளது காணலாம். ஒன்றை அண்டி இருப்பதே இரு+ அண்டு =  இரண்டு ஆகும்.  அண்டி இரு ( ஒன்றை அண்டி இரு) என்பது முறைமாற்றிச் சொல் அமைந்துள்ளது.  இவ்வாறு  சொல் அமைத்தல் பிற்காலத்தில் பல சொற்களில் பின்பற்றப்பட்டுள்ள முறையாகும்.  தொல்காப்பியனார் காலத்திலே " தாரம் தப்புதல்"  ( மனைவியை இழத்தல் ) என்பது " தப்பு + தாரம் "  > தபுதாரம் என்று குறிக்கப்பட்டது.  ( தப்பு > தபு  என்பது தொகுத்தல் அல்லது இடைக்குறை).   அவிழ்க்கும் இரு கைகளை உடைய பெண்டிரின் சட்டை,  இரு+ அவிழ் + கை >  இரவிக்கை ( ழகர ஒற்று இடைக்குறை)  ஆனது காண்க.  நிறுவாகத்தைக் காக்கும் இல்லமானது  :  கா + இல் >  இல்+ (ஆ) + கா = இலாகா ஆனது திறமையே. பலராலும் உணர்ந்திட முடியாத மறைவுப்புனைவு ஆகுமிது.  { இல்லம் ஆகும் காப்பதற்கு > இல்  ஆ கா}

ஆசு பட இருக்குமிடம்  :   இரு+ ஆசு + இ = இராசி.   இதுவும் முறைமாற்றுப் புனைவே. கிரகம் -  கிருகம் என்பது  இரு+ அகம் >  இரகம் > கிரகம் அன்றி வேறில்லை.  இரகம் என்பது சிரகம் என்று மாறிப் பின் சி என்பது  "கி" ஆகி,     கிரகமானது என்று விளக்கினும் அதுவே.  இராசிநாதன் இருக்கும் இடமே இரு அகம் > கிரு அகம் > கிரகம்.  (  இறகு > சிறகு ).(சேரல் > கேரளம்)

ஆசி என்பது நன்மை நடக்குமாறு  பற்றுக்கோட்டினை வழங்குவதே.  ஆசீர்  என்பது சீராகுக என்பதன் முறைமாற்றுப் புனைவு.  இதன் ரகர ஒற்று மறைந்து ஆசி ஆனது.  ஒரு  முண்டு ( துண்டு, துண்டுத்துணி)  தலையினை ஆசுபடப் பற்றி நிற்க,  அது முண்டாசு ஆகும்.  ஆசீர்வாதம் என்பதில் வாதம் என்பது வாதநோயைக்  குறிக்காது.  வருக தமக்கு ஆகும் சீர் என்பது வாக்கியம். இது  ஆ + சீர் + வா + தம் ஆனது.  வா = வருக; தம் = தமக்கு;  ஆ  =  ஆகும் ;  சீர் = நன்மை.

ஆகும் சீர் :  ஆசீர்,  இது ஆகு + ஊழ் =  ஆகூழ் என்ற பழம்புனைவு போன்றது.  ஆகுபெயர் என்பது இலக்கணக் குறியீடு.

வட்டமாகவோ நான்மூலையாகவோ மாவால் உருச் செய்து அதை சுடுகல்லில் ஒட்டி எடுப்பது:  உரு+ ஒட்டி =  உரொட்டி >  ரொட்டி. இது வேறுவழியிலும் விளக்குறலாம் ஆகையால் இருபிறப்பி ஆகும்.  வகர உடம்படு மெய் சொல்புனைவில் வேண்டியதில்லை.  சொல்லுருவில் துய்யது உரு+து மொழி,  அரபு கலந்தமையின். து விகுதி எனினும் ஒக்கும். படைவீடுகளில் பேசப்பட்டது என்பது கதை.  தெற்குக் கணத்தில் வழங்கிய மொழி தெற்காணம் = தெக்காணம், > தக்காணம் > தக்காணி.

பல்வேறு சொல்லாக்க முறைகளை அறிந்தோம்.

எழுத்துப் பிசகுகள் பின் திருத்தம்பெறும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.