Pages

புதன், 4 டிசம்பர், 2019

சுவர் என்ற சொல்லின் தோற்றம்.

தமிழ் மொழியில் உள்ள மூலவடிச் சொற்களில் " சுல் " என்பதும் ஒன்றாகும்.

சுல் என்பதே து என்னும் வினையாக்க விகுதியைப் பெற்று  சுல்+து = சுற்று என்ற வினைச்சொல் பிறக்க வழிசெய்தது.

சுவர் என்ற   சொல்லும் இம்மூலத்தினின்றே தோன்றியதாகும்.

சுவர் என்பதை "  சு + அர் " என்று பகுத்தால் இடையில் நிற்கும் வ் என்ற மெய் உடம்படு மெய் என்பது துலங்கும்.  அர் என்பதோவெனின்  அரு> அருகு > அருகுதல்  என்பதிற் காணும் நெருங்கி நிற்றல்,  இடைவெளியைக் குறைத்தல் என்னும் பொருளிய அடிச்சொல் என்பது புரிந்துகொள்ளலாம். இன்றும் அருகில் என்ற சொல்லில் இத்தொலைவின்மைக் கருத்து பளிச்சிடுகின்றது அறியலாம்.  அர் என்பது மூலமாக, ஈற்று உகரம் (அர்+ உ)  "  நெருங்கி முன் (நிற்றல்)  என்ற பொருளை வருவிக்கிறது.  உ(  சுட்டு ) : முன்.

சுவர் என்பது கூரையுடன் நெருங்கி அதை மேலணைத்தவாறு சுற்றி நிற்கிறது. இவ்வளவையும் இப்பகுப்பாய்வே தெரிவிக்கிறது.  இடர்ப்பாடு ஒன்றில்லா இனிமை இதுவாம்.

சுல்  > சு  (கடைக்குறை).

அர் என்பதிற் பொருள் காணாமல் வெறும் விகுதி என்று மட்டும் கொண்டால்,
சுவர் என்பது வீட்டைச் சுற்றி நிற்பது என்று மட்டுமே பொருள் கொண்டதாக ஏற்படும்.

சுவரில் ஒட்டிய கீரைக் குழம்பைச் "சுவத்துக் கீரை" என்றனர்.  ( பண்டித வி. சேகரம் பிள்ளை (1938). புதிய உலகம் மாத இதழ்). கோழிக்கறியை எதிர்பார்த்துச் சாப்பிட உட்கார்ந்த கணவன், கீரைக்குழம்புதான் தட்டிலுண்டு என்றறிந்து கோபம் கொண்டு,   வைத்த அக்குழம்பினைத் தூக்கிச் சுவரில் அடித்தானாம். வேறொன்றும் இல்லை என்று மனைவி கூற, "சுவத்துக்கீரையை வழித்துப் போடடி சுரணை கெட்ட பொண்டாட்டி" என்று வைதானாம்.  சுவத்தில் என்பது பேச்சு வழக்கு.

சுவர் என்பதே இப்போது கிட்டும் சொல்லாகும்.  இது சுவறு என்றிருந்தாலே பேச்சில் சுவத்தில் என்று வரவேண்டும். சுவறு என்பதை மீட்டுருவாக்கம் செய்தால்  " சுற்றி அடைக்கப்பட்டது"   (சு + அறு ) என்ற பொருள் கிட்டும். அறுக்கப்பட்டது அறை எனல்போலவே  வெளிச்சுற்றாக எழுப்பப்பட்டதுமாகும்.   எனல் ஒக்குமாறு,  சுவறு என்ற மற்றொரு வடிவம் மொழியில் இருந்து அஃது இறந்திருக்கலாம். இவ்வாறு கொள்வதிற் கடினம் ஒன்றுமில்லை காண்க.

பழையன கழிதலென்பது வழக்கமான நிகழ்வே.

தட்டச்சுப்பிழைகள் பின் திருத்தப்பெறும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.