Pages

திங்கள், 31 மே, 2021

சூலும் வசூலும்

 வசூல் என்ற சொல்லைச் சில முறைகள் கவனித்துள்ளோம்.  இதைத் தமிழிலே சில வழிகளில் அணுகலாம்.  அதிலொன்று அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளது. இதை நன்கு அறிந்துகொள்ள நாம் ஒரு 150 ஆண்டுகளாவது பின்னோக்கிச் சென்று அன்றிருந்த சூழ்நிலைகளில் உட்புகுந்து சிந்தனையில் மூழ்கித் தெரிந்துகொள்ளவேண்டும்.

வந்தான்.  வர்ரான்( பேச்சுமொழி) என்பவற்றிலெல்லாம் வ என்பது வருவதைக் குறிக்கும்.  அதுபோலவே வசூல் என்பதிலும் வ ~  என்ற முதலெழுத்து வருவதையே குறிக்கும்.  இது மிக்கப் பொருத்தமுடையது என்பதை நீங்கள் அறிவீர்கள். வரும் தண்டல் அல்லது கொடுபொருள்தான் வசூல்.  இது பெரும்பாலும் பணமாக இருக்கும்.  பிறபொருளாகவும் இருக்கும்.   வரி என்பது ஒவ்வொருவரிடமிருந்தும் வரப்பெறும் தொகை.  அதுபோலவே இதுவும். வரு>வரி.

சூல் என்பது கருக்கொள்தலையும்** குறிப்பது.  ஒரு மாதின் உடலில் உள்வந்தது தான் சூல். அது எப்போதும் உள்ளிருக்கும் நிரந்தர உறுப்பன்று.  வந்து கொஞ்ச நாளில் வளர்ந்து வெளிப்போந்து பிறந்துவிடும்.  ஆகவே வரும் தொகையைச் சூல் என்று குறிப்பிடுவது மாதின் சூல் போல் உள்வந்தது என்று அணிவகையாகக் குறிப்பிட்டு, அதற்கு ஒப்புமையாக "வசூல்" என்ற சொல்லை விளக்கலாம்.  அவ்வாறு விளக்குவதில் தவறு ஏதும் இல்லை.  அதுவும் ஒரு விளக்கம்தான்.

ஆயின், தமிழில் சூலுதல் என்பது ஒரு வினைச்சொல். அதற்குத் தோண்டி எடுத்தல் என்றும் பொருள். இன்னொரு பொருள் கர்ப்பம் கொள்ளுதல்.  பெரும்பாலும் பணத்தினைத் தவலையில் போட்டு  புதைத்து வைத்திருந்து பின் தோண்டியெடுப்பது ஒரு நூறு ஆண்டுகள் முன்வரை இருந்த வழக்கம். அப்போது வங்கி என்னும் பணவகங்கள் இல்லை ( சிற்றூர்கள் அதற்கடுத்த வட்டாரங்கள்).  நேற்றுவரை  வங்கியில் பணம்போட்டு வைத்தல் ஒரு வழக்கமாய் இருக்கவில்லை.  தவலைக்குள் போட்டுப் புதைத்து வைத்து எடுத்தலே வழக்கம் .(" புதையலெடுத்த தனம்" ).  அரசினர் அதை வரி வாங்கும்போது தோண்டி எடுத்துக்கொண்டு போவதே நடந்த நிகழ்வுகள்.  இப்படி எடுத்தவை " வசூல்"  -  வருசூல் என்பதை உணர்க.  உண்மையில் ருகரம் தேவையில்லை.  வரு > வந்தான் என்ற வினைமுற்றிலே வருதற்  குறிக்க ரு இல்லையே.  தமிழின் இயல்பு.  புரிந்துகொள்ளாமை தமிழின் குற்றமன்று.

இப்போது தோண்டி எடுக்கவில்லைதான்.  அதற்காக, பழைய சொற்களில் திருத்தம் செய்யவேண்டுமென்றால்,  மொழியையே  ( எல்லா மொழியையும்) மாற்றி அமைக்கவேண்டும். எல்லா மொழிகளிலும் பழைய சொற்களைப் புதிய சூழ்நிலைகளுக்குப் பயன்படுத்தும் நிலை உள்ளது என்று ஆய்வில் தெரிகிறது.  ஒரு வண்டியின் குதிரைவேகம் (ஹோர்ஸ்பவர்) என்று கணக்கிடக் குதிரைகளைக் கட்டி இழுக்கவேண்டாமே! நாலடித் தொலைவு என்றால் அது உங்கள் காலடியைக் கணக்கிடுவதன்று.

வசூலிலே :   இன்னும் உள்ளது. இன்னொரு நாள் சந்தித்து அளவளாவுவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

அடிக்குறிப்பு:

மேலும் அறிய:

https://sivamaalaa.blogspot.com/2017/03/vasool.html

சூலுதல் (  வினை அடி: சூல் ) பொருள்:

குடைதல், தோண்டுதல், அறுத்தல், கருவுறுதல்.

இன்னுமிரு சுவைதரு  ஆய்வு இங்குக் காண்க:

சூதும் வாதும்:  https://sivamaalaa.blogspot.com/2019/07/blog-post_21.html

சூது:   https://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_25.html

இதுவும் சமர்ப்பணம்:

https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_76.html

**  கருக்கொள்தல் இதில் கொள்தல் -  கோடல் என்று சந்தியில் வரும். அம்முறை இங்குப் பின்பற்றப்படவில்லை.  புரிந்துகொள்ளுதல் கடினமாகுமென்பதால்.

மெய்ப்பில் சில திருத்தங்களும் மாற்றங்களும்

செய்யப்பட்டன.  01062021 0438


நோய்க்கு இடங்கொடேல் என்பது நம் பாட்டியின் வாக்கு. முகக் கவசம் அணிந்து

மனித இடைத்தொலைவு கடைப்பிடித்து நலமடைவோம்.  யாவரும் நலம்பெற

எங்கள் வேண்டுதல். உலகம் உய்க.

 


ஞாயிறு, 30 மே, 2021

தயாளம்

 தயாளம் என்ற சொல்லைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.

இதில் இரண்டு துண்டுகள் உள்ளன.  தயை  என்பதொன்று.  ஆளம் என்பது இன்னொன்று.  ஆளம் என்பது ஆளின்  தன்மை என்று பொருள்படும்.  

தயை என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அதனை இங்குக் காண்க:

https://sivamaalaa.blogspot.com/2019/06/blog-post_7.html

தயை என்பதை ஆளம் என்ற ஈற்றுடன் புணர்க்குங்காலை,  தயை என்பதன் இறுதி ஐ விகுதி கெடும் ( அதாவது அவ்விகுதி களைந்துவிடுதல் வேண்டும்). ஆகவே  தய + ஆளம் என்பவை சேரும்.

வன்மை பொருந்திய செயல்களைத் தவிர்த்து இரக்கம் காட்டுவதே தயாளம்.

தயாளம் என்று புணர்ந்து விளைதலின்,  இதுபோன்ற சந்திகள் தமிழில் உளவா என்று அறிதல் வேண்டும்.  உள்ளது, அதற்கு எடுத்துக்காட்டு:

மர + அடி =  மராடி என்பது காண்க. இஃது வகர உடம்படுமெய் இல்லாத புணர்ச்சி ஆகும். உடம்படு மெய் வரின்,  மர+ அடி > மரவடி என்று வரும். அல்லது அத்துச் சாரியை பெற்று,  மரம் + அத்து + அடி =  மரத்தடி எனவாகும்.

அத்து என்னும் சாரியை உண்மையில் அது என்னும் சுட்டுப்பெயரில் தோன்றிய இரட்டிப்புச் சொல் தான்.  அது >  அத்து. ( தகர இரட்டிப்பு).   த் + த் + உ >  த்து  ஆகும்.  "அது"   இதற்கு மூலம் என்பதைக் கூறுவதில்லை. 

மெய்ப்பு பின்னர்.



வெள்ளி, 28 மே, 2021

மளிகைப் பொருள்கள் மற்றும் கடை.

 மளிகைப் பொருள்பற்றிய இச்சிறு எழுத்துப்படைப்பை, மள்ளர் என்னும் சொல்லிலிருந்து தொடங்குதல்,  விடயத்தை விளக்குவதற்கு எளிமைதரும் என்பது எம் நினைப்பாதலின்  அவ்வாறே இவண் செய்வோம். 

மள்ளர் -  சொற்பொருள்

மள்ளர் என்னும் சொல் பலவிதத் தொழிலரையும் அல்லது மக்களையும் குறிக்குமென்று நம் நூல்களின்வழி அறிகின்றோம்.   இவர்களாவர்:  உழவர், குறவர், படைவீரர்,  மறவர்,  இளைஞர்,  குறிஞ்சி நிலத்து வாழ்நராகிய பொதுமக்கள் ஆகியோர் எனலாம். இவர்கள் அனைவரையும் அல்லது இவர்களில் எவரையும் இச்சொல் குறித்தற்குக் காரணம்,  இவர்கள் எல்லோரும் உடலால் வலிமை பொருந்தியவர்களாக இருத்தல்தான். (அதாவது உடலுழைப்பால்-- உடல்வலிமையால் பிழைப்போர்).  பண்டைத் தமிழர் உடல்வலிய மக்களை இச்சொல்லால் சுட்டினர் என்று தெரிகிறது.  பள்ளர் என்ற சொல்லும் மள்ளர் என்று திரிதலால் ஆய்வில் சில குழப்படிகள் தோன்றுதல் இயல்பு.  எனினும் இவ்வாய்வுக்குப் பள்ளர் என்னும் சொல்லை நாம் தவிர்த்துவிடுதல் நலம். *

மள்ளல் என்ற சொல் வலிமை குறித்தலால் அதனின்று தோன்றிய மள்ளர் என்ற பலர்பால் சொல்லும் உடல்வலியோர் என்ற பொதுப்பொருள் பெறுமென்பது எளிதின் உணரப்படுவதாகும்.

அடிச்சொல் நோக்கு

இச்சொல்லின் அடிச்சொல் மள் என்பதே.  இகுதல் என்பது இறங்கி வருதல் என்ற பொருளுடைய  சொல்.   மள் + இகு + ஐ  = மளிகை.   மள்ளர் என்ற முன் சொன்ன மக்களிடமிருந்து இறங்கும் அல்லது உண்டாகி விற்பனைக்கு வரும் பொருள் என்று அர்த்தம்  வருகிறது.  இகுதல் என்ற சொல்,  அணியியல் முறையில் இச்சொல்லில் கையாளப்பட்டுள்ளது  என்று முடிக்கவேண்டும்.  நீர் இறங்குதல் போலும் கீழ்வருதல் என்ற ஒப்புமை.

மள் + இ + கு + ஐ  :  மள்ளரிடமிருந்து இங்கு (வந்து) சேர்ந்த பொருள் எனினும் ஆம்.  இ - சுட்டுச்சொல், இங்கு.  கு - சேர்விடம் குறிக்கும் சொல்.   ஐ -   விகுதி.  

மள்ளர் எனற்பால சொல்,  மள் என்று குறுகி நின்றமை,  "பள்ளருடைய சேரி" என்ற சொல்தொடர் பச்சேரி என்று வந்ததுபோலுமே  ஆகும். இவ்வாறு இடையில் நின்ற சொற்கள் மற்றும் எழுத்துகள் மறைந்த சொற்கள் பலவாதலின், இக்குறைவுகள் பற்றி ஒன்று விரித்தற்கில்லை.

தோற்றப்பொருண்மை மறைவு

மள்ளர் விளைத்த பொருட்களை விற்கும் கடை மளிகைக்கடை. ஆனால் இன்று இப்பொருள் தொல்காப்பியர் கூறியதுபோல் விழிப்பத் தோன்றாததாகிவிட்டது எனலாம். இன்று யார் விளைத்த பொருளாயினும் விற்கும் கடை,  ஆயின் பெரிதும் சமைக்காத உண்பொருள்கள்,  தானியங்கள் மசாலா இன்னும் பல விற்பனை செய்வோரைக் குறிக்கும். 1

"மள்" சொற்பொருண்மை அறிதல். 

மளிகை என்ற சொல்லில் வரும் "மள்" அடிச்சொல், இத்தரத்து மக்கள் அனைவருக்கும் பொதுப்பண்பாகிய வலிமை என்ற பொருண்மையை உடையது. இவ்வலிமைப் பொருளை  வல் > மல் > மள் என்ற திரிபுகளிற் கண்டுகொள்ளுக. இவற்றில் விளைந்த முழுச்சொற்களுக்கு எடுத்துக்காட்டு,  முறையே  1 வலிமை,  2 மல்லன்,  மல்லு வேட்டி (துணி),  மள்ளல் என்றவை. திரிபு செல்வழி:  மள் > மளி> மளிகை. மள்ளர் என்பது மக்களைக் குறித்தபடியாலும் மள் என்ற அடியில் அப்பொருள் இன்மையாலும் மள்ளர் என்ற சொல்லமைந்த பின்னரே அவர்கள் விளைபொருள் என்பதைக் குறிக்க மள்ளர் + இ + கை > மள் + இ + கை > மளிகை என்று மீண்டும் குறுகியது.  இது சொல்லாக்கத்துக் குறுக்கம்.  இப்படி அமைந்த இன்னொரு சொல் பச்சேரி  --மேலே காட்டப்பட்டது. மளிகை என்ற சொல்லமைப்பின்  பின்பு,  மள் என்ற அடிக்கு மள்ளர் என்ற கூடுதற்பொருளும் வந்துற்றது அறிக. இதைச் சுருக்கமாக விளக்க,  மள்ளர் > மள்ளரிகை > மளிகை எனின்,  ள் என்ற மெய் இடைக்குறைதலும், ரகர மெய் வீழ்தலும்,  இகரம் ளகர ஒற்றின்மேல் ஏறுதலும் ஆகிய எழுத்துமாற்றங்களை விளக்கவேண்டும். மளிகை, பச்சேரி முதலியவை பேச்சில் விளைந்த குறுக்கங்கள்.   மள்ளர் > மளி > மளிகை என்று காட்டுதல் எளிது.  மள்ளரிகை என்பது உணர்விக்க எழுந்த கற்பனைச் சொல்  அல்லது ஓர்ந்தமைவு.

திரிபுகள் 

மள்ளரிடமிருந்து விளைபொருள்களை வாங்கிக் காயவைத்து விற்றுவந்த செட்டியை மள்ளர்காய்ச் செட்டி > மள்ளிகாய்ச் செட்டி > மளிகைச் செட்டி என்று திரிபால் குறித்து, பின் அதிலிருந்து செட்டியை விட்டு,  மளிகை , மளிகைச் சாமான் என்று வரினும் மிகப்பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.  மள்ளர் என்ற சொல்லில் மாற்றமில்லை. சொல்லிறுதி ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளைத் தெரிவிப்பது தவிர அடிப்படைச் சொல்லின் அமைப்பில் உள்ளுறைவுகள் சிறுமாற்றங்கள் அடைவதால் அடிப்படைப் பேதங்கள் இல.

மள்ளி கையால் கொண்டுவந்து விற்ற உணவுப் பொருள் என்றும் விளக்கலாம்.

மள்ளி கை >  மளிகை ( இடைக்குறைந்தது ள் ).   அடிச்சொல் மள் என்பதே.

மள்ளர் பெண் : மள்ளி,  பள்ளன் > பள்ளி, கள்ளன் - கள்ளி, குள்ளன் > குள்ளி போன்ற அமைப்பு. மக்கள் பேச்சில் உருவாக்கிக் கொள்வன. பேச்சுமொழி மிக்க விரிவானது ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


குறிப்புகள்

*..களம்புகு மள்ளர் (கலித்தொகை. 106). 3  படைத்தலைவன். (சூடாமணி நிகண்டு.) 4.  இளைஞன். பொருவிறல் மள்ள (திருமுருகாற்றுப்படை. 262). 5.  மருதநிலத்தில் வாழ்வோன். (திவாகரம்) மள்ளர் உழுபகடு  உரப்புவார் (கம்பராமாயணம். நாட். 18). 6.  குறிஞ்சிநிலத்தில் வாழ்வோன். (சூடாமணி.)

இதையும் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2019/09/blog-post.html

1. உயிரற்ற பொருள்கள் , காய்ந்த பொருட்கள். 

அப்போதும் மள் > மளி என்பதே அடிச்சொல். ஆனால் விளக்கம் கொஞ்சம் வேறுபடும்.

( பச்சையாக இல்லாமல்)

மள்ளன் - மள்ளி. (பெண்பால்)

சில தவிர்க்கப்பட்ட விளக்கங்கள் சேர்க்கப்பட்டன. 29052021 0645. We could not resolve the error in spacing whilst editing.  There may be a bug. Repeated attempts managed to make the Notes herein appear in the post.


வியாழன், 27 மே, 2021

இறைவனுக்குப் பூவலங்காரம்

 ஒரு வேலை இல்லாத மகனுக்கு  அவன்  தந்தை ஒரு நாளைக்குப் பத்து வெள்ளி செலவுக்குத் தருவதாகச்  சொல்லியிருந்தார்.  அதைப் போய் மகன் ஒருவாரத்துக்கும் சேர்த்து எழுபது வெள்ளி பெற்றுக்கொண்டான்..   அதன்பின் அவனுடைய ஓர் உறவுப் பெண்ணிடம் பூ வாங்கிக்கொண்டு வரும்படி கூறினான்.  அவள் இரண்டு வெள்ளிக்கு ஒரு பைக்கட்டுப் பூக்கள் வாங்கிக்கொணர்ந்து கொடுத்தாள்.  அந்தப் பெண்ணின்மேல் அவன் அளவுகடந்த அன்பு வைத்திருந்தமையால்,  அந்த எழுபது வெள்ளியையும் "நீயே வைத்துக்கொள்" என்று அவளிடம் கொடுத்துவிட்டான்.  

அதன்பின் அந்த மலர்களை இறைவனுக்குச் சாத்தி வணங்கினான்.  அப்போது  தந்தை அங்கே தாளிகை படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான். அக்கணத்தில் எழுபது வெள்ளியும் போய்விட்டதே என்று தன் செயலுக்குத் தானே திடுக்கிட்டவனாய்,  அவன் தான்  " இழந்த" எழுபது வெள்ளிக்கு  ஒரு சிறு ஈடாக, "சாமிக்குப்  பூப்போடப் பத்து வெள்ளி கொடுங்கள்" என்று தந்தையிடம் கேட்டான். தாம்  முன்னரே எழுபது வெள்ளி  ஒரு வாரத்துக்குக் கொடுத்துவிட்ட படியினால், அவர்,  உனக்கு   "எழுபது வெள்ளி கொடுத்துவிட்டேன்.  அது ஒரு வாரத்துக்கு!  வேறு காசு கொடுக்கமுடியாது" என்று சொல்லிவிட்டார்..  "இது சாமிக்கு" என்றான்.  அவர்: " எதற்காக இருந்தாலும் நான் கொடுத்ததை வைத்து நீ உன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்"  என்றார்.

"இது சாமிக்கு அப்பா!"  என்று அவன் வலியுறுத்த,   "கொடுத்ததில் ஒரு சிறு தொகையைச் சாமிக்குப் பயன்படுத்த நீ கற்றுக்கொள்"  என்று சொல்லி அவர் போய்விட்டார்.  அங்கு அவனுடைய நண்பன் ஒருவன் அப்போது வந்தான்.  "என்ன, முகம் வாடியிருக்கிறது" என்று கேட்டு, நடந்ததை அறிந்துகொண்டான்.

"எழுபது வெள்ளியை என்ன செய்தாய்?  அதில் ஒரு சிறு பகுதியையாவது சாமிக்கு ஒதுக்கி இருக்கலாமே.  இது உன்னுடைய  மடத்தனம் தான். எப்படியும் சாமிக்கும் பூ போய்ச் சேர்ந்துவிட்டது!  இனிச் சாமி பெயரைச் சொல்லி நீ எதுவும் கேட்டிருக்கக் கூடாது. சாமிக்கு வைத்ததற்கு இழப்பீடு வாங்குவது ஓர் அறியாமை  ஆகிவிடும்..  அதை இழப்பு என்று கருதும் உனக்கு எப்படி அருள் கிட்டும்? உன் அப்பன் உன்னிடமோ யாரிடமுமோ  'சாமிக்குப் பூ வாங்கித் தருவேன்' என்று சொல்லவில்லை. அந்த ஒப்பந்தம் இறைவனுடன் உனக்கு உள்ள ஒப்பந்தம்.  அதை உருண்டு புரண்டு அழுது புலம்பியாவது நீ தான் நிறைவேற்றவேண்டும்! உன் அப்பா "இதைத் தருகிறேன்" என்று சாமியிடம் சொல்லி இருந்தால் அதற்கு அவர் பொறுப்பாளி.  அவர் சொல்லவில்லை. இதற்குப் பிறரைப் பொறுப்பாளி ஆக்குவதற்கு உனக்கு இறைவன் எந்த அதிகாரத்தையும் தரவில்லை என்பதை நீ உணரவேண்டும்"  என்று சொல்ல, அம் மகன் ஒன்றும் மறுமொழி சொல்லாமல் இருந்துவிட்டான்.

ஒரு நாள் கழித்து அவனுக்கு அவனுடைய சாமியின் நினைப்பு மீண்டும் வந்தது. பூ வாங்கவோ காசில்லை. தோட்டத்தில் போய்ப் பார்த்தபோது ஒரு செடியில் மூன்று பூக்கள் இருந்தன.  அதில் ஒன்றைச் செடிக்கே விட்டுவிட்டு, இரண்டு பூக்களைக் கொணர்ந்து அவனுடைய சாமிக்கு வைத்து வணங்கினான்.

ஒரு பூ என் காணிக்கையாகவும் இன்னொரு பூ என் தந்தையின் காணிக்கையாகவும் ஏற்றுக்கொள் என்று மனமுருகி இறைஞ்சினான்.

பூ என்பது மனத்தைக் குறிக்கிறது.  பூ மலர்வதுபோல் உள்ளமும் மலரும் தன்மையது  ஆகும்.  பூ வைத்தால் 'என் மனத்தை உனக்குத் தருகிறேன்' என்பதற்கு அறிகுறி. இறைப்பற்று முதிர்ந்த நிலையில் பற்றன் தன் மனமலரை இறைவன்முன் வைத்து வணங்குவதும்   உயர்மலர்  அது ஆகும்  .  அம்மகன் பின்னர் வைத்த இரண்டில் ஒரு பூ அவன் உள்ளத்தையும் இன்னொரு பூ அவன் தந்தையின் உள்ளத்தையும் படியொளிருமாறு மனத்தில் எண்ணிக்கொண்டு,  ஏற்குமாறு கேட்டுக்கொண்டான். தொழுகையில் இது சரியானது: பிறருக்காகவும் இறைஞ்சும் உள்ளம் இவனுக்கு வந்துற்றது. செடியை மொட்டையடித்துவிடாமல் சிறிது விட்டுவைக்கும் இரக்கமும் இவனுக்கு உண்டாகிவிட்டது.  செடிகொடிகள் முதல் எல்லா உயிர்கள் பாலும் இரங்கும் மனம் ஒரு பற்றனுக்கு வேண்டும்;  அதையே இறைவனும் விரும்புகிறார் என்பது பற்றாளனின் உணர்வாய் இருத்தல் முதன்மைப் பண்பாகும்.

நம்  செயலுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். பிறருக்காகவும் இறைஞ்சுதல் வேண்டும்.  ஒரு பற்றாளன் தற்குறியாதல் கூடாது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

குரங்குக்கு மறு பெயர்கள்

 தமிழ்நாட்டின் பல இடங்களில் குரங்குகள் மிகுதியாக உள்ளன.  இவை பல்விதமாயின வேடிக்கைகளையும் குறும்புகளையும்  செய்து வருகை புரிவோருக்கு எரிச்சலையும் மகிழ்ச்சியையும் விளைவிப்பன.  இங்கு( மலேசியா),  எங்கள் வீட்டுக்கு வெளிப்புறத்தில்  வாழை மரம், மாமரம், முருங்கை எனப் பல மரங்கள் இருந்தன.  அவற்றில் வந்து அமர்ந்துவிட்டுச் சலிப்பினாலோ என்னவோ உடனே கூரைக்குத் தாவிச் சென்று அங்குள்ள ஓடுகளைப் பிய்த்துக் கீழே எரியும் குறும்பு வேலையையும் செய்துள்ளன.  இந்தத் தொல்லை கொஞ்ச காலம் நீடித்திருந்து, அவைகள் வாழ்ந்த ஆற்றோரத்தில் வீடுகள் கட்டப்பட்டு,  அங்கு வேலைசெய்த குத்தகைத் தொழிலாளிகளாலும் இயந்திரங்களாலும் அவை கொல்லப்பட்டும் விரட்டப்பட்டும் போய் இப்போது அவை இல்லையாயின.  இந்தக் கோவிட்டுக்கு முன்புவரை அங்கு அமைதி நிலவிற்று என்றுதான் சொல்லவேண்டும் . இன்னும் அங்கு போய்ப் பார்க்கப் போக்குவரத்துகள் திறக்கப்படாதுள்ளன.

சில ஆண்டுகட்குமுன் நாங்கள் மருதமலை  சென்றிருந்த போது, எங்கள் பாட்டியின் வெற்றிலை பாக்கு முடிச்சைக் குரங்கு எடுத்துக்கொண்டு போய் மற்ற குரங்குகளுடன் சேர்ந்து பிய்த்து எறிந்துவிட்டன.  அப்புறம் கடைத்தெருவில் போய் மீண்டும் தேடி வாங்க வேண்டி நேர்ந்தது.

இவ்வளவு நெருக்கமாக அறியப்பட்ட  குரங்குகளைப் பற்றி எழுதுவதில் மகிழ்ச்சிதான்.  இராமாயணத்தில் ஒரு பாத்திரமாக இது வருகிறது என்று எண்ணிடினும்,  உண்மையில் அங்கு அனுமன் என்ற பெயருடன் வருபவர் ஓர் பத்தி~ ( பற்று > பற்றி > பத்தி > பக்தி ) ~மான்   மற்றும் அரசர் ஆவார்.'  வையத்து வாழ்வாங்கு வாழ்ந்தோன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுமென நாயனார் நயந்த குறளுக்கொப்ப,  இற்றை நாளில் வணங்கப் படுபவரும் ஆவார்.  நன்மையே புரிந்த இவர்தம் நாமம் போற்றி.

குரங்குக்குக் "கபி" என்ற பெயரும் உளது. "மந்தி சிந்து கனிகளுக்கு வான்கபிகள் கெஞ்சும்." என்ற பாடல்வரி நினைவுக்கு வருகிறது.  மரக்கிளையைக் குறிப்பதும் காட்டைக்குறிப்பதும் உடைய பல்பொருட் சொல் கவை என்பது.  இச்சொல்லுக்குப் பிற பொருளும் உள.  கவை + இ >  கவி > கபி .  ஐகாரம் கெட்டது.   அடுத்து வகர பகரத் திரிபு. இது மரக்கவைகளைப் பற்றித் தாவித் திரிவன என்பது பொருள். ஆனால் குரங்கு என்ற  பெயர் ,  குரல், குரை என்ற ஒலிசெய்தலுடன் தொடர்புடையது.  குர்+ அம் + கு என்ற எழுத்துகள் புணர்ந்த சொல்லுக்குப் பொருள்  "குர்ர்" ஒலியுடன் அமைந்த விலங்கு என்பதுதான்.  குரவை  ( சிலப்.  ஆய்ச்சியர் குரவை ),   குரு , குரவர் முதலிய சொற்களும் ஒலி பற்றிய கருத்துகளை உள்ளடக்கியவையே ஆகும்.

ஒலிபற்றிச் சொல் அமைந்தது  சரிதான்.  அது கொம்பேறித் தாவும் குரங்கு ஆயிற்றே.  அக்கருத்தை அடக்கிய இன்ன்னொரு சொல் உண்டா எனின், தமிழில் உண்டு.  மரத்துக்கு மரம் கடந்து வாழ்வதால்,  அது "  மரக் கடம்".  (வேங்கடம் -  கடக்கும் வெம்மைமிகு மலை).  ஆயின் இச்சொல் திரிந்து மர்க்கடம் என்று வழங்குகிறது.  இது வருத்தகம்1 என்பது வர்த்தகம் என்று மாறியது போல்வது.  கொம்புகளை த் தழுவி (மருவி)  இடம்பெயர்தல் செய்வதால்,    மருக் கடம் >  மர்க்கடம் எனினும் ஒக்கும்.  இவற்றுக்கு அடிச் சொல் மர் என்பது ஒன்றுதான். உள்ளுறையின் வரையறவு  சற்றே வேறுபட்டாலும் இரண்டும் குரங்குடன் ஒன்றிப் பொருந்துவனவே.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.  


1  வருத்தகம் >  வர்த்தகம்:   பொருள்களை வருத்துவது:  அதாவது வருவிப்பது.  அது பின்பு  பொருள் ஏற்றுமதியையும் குறிக்க விரிந்தது.

செவ்வாய், 25 மே, 2021

கேந்திரம் என்பது

இன்று இன்னொரு தமிழ்ச்சொல்லை நாம் கவனித்தறிவோம்.

பண்டை நாட்களில் போர்க்களத்தில் கொடிகள் பல்வேறு வேலைகளுக்குப் பயன்பட்டன.  அவற்றுள் ஒன்று  அழைப்பறிவித்தல் என்று சுருங்கச் சொல்லலாம்.

அதாவது ஒருவன் தன் கூட்டத்தார்  சற்று எட்ட   (சேய்மையில்)  நின்றால் அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும்  அருகில் வருமாறு அழைப்பதற்கும் கொடியசைப்புகளைப் பயன்படுத்தினான்.  தன் கூட்டத்தார் சூழ நின்ற போது இவன் பெரும்பாலும் ஒரு நடுவிடத்தில் நின்றுகொண்டே தன் கொடியை அசைத்தான்.  எல்லோரையும் சமதூரத்திலிருந்து அருகில் வரச்செய்வதற்கு ஒரு நடுவிடமே சாலச் சிறந்தது ஆகும்.  ஒலி எழுப்புவதற்கும் அத்துடன் கொடி அசைப்பதற்கும் ஏற்புடையதுமாகும்.

அழைத்தலுக்கு இன்னொருவழிச் சொலவு " கேதல்"  " கேதுதல்"  என்பனவாகும்.  கேள், கேட்டல் என்பனவும் இவற்றுடன் தொடர்புடைய சொற்கள் என்பது விளக்காமலே  தெளிவுறும்.  இது நடுவிடத்திலிருந்தே பெரிதும் நடைபெற்றதால் கே > கேந்திறம் > கேந்திரம் என்ற சொல் உருவாயிற்று.  இது பெரும்பாலும் படையணியினர் அல்லது கள்ளர்குழுவினர் அமைத்த சொல் ஆகும். கேள்திற நடுவிடமே கேந்திரம்  ஆயிற்று. இதுவுமது: கேள்திறம் > கேத்திரம், இது மெலிந்து  கேந்திரம் ஆகுமென்று கூறினும் வேறுபாடில்லை என்பதறிக.

அறிக  மகிழ்க.

மெய்ப்பு பின்னர்..


எதிலும் பண்பாட்டினை விடமுடியாது.

 பாடல்:

பிறந்தநாள் எதற்கென்று தத்தாசொன் னாலும்

பிள்ளைகளோ விடமாட்டோம் என்றார்திண் ணப்பம்

சிறந்தநிறப் பொலிவுடனே சீனிமுளை நிற்கச்

சேர்ந்துகொடு வெட்டென்றார் சீர்தட்டும் கைகள்!


இனிப்பென்றால் இக்காலம் பலருக்கும் ஏறா

தெட்டஓடி விடுகின்றார் இதுபுதுமைச் சார்பு.

பனிப்பாய்வு ஒக்கும்வளர் குளிர் அறையில் ஆடிப்

பாடுமிது இனிப்பாகும் பண்புதிகழ் அன்பே.

உரை:

திண்ணப்பம் - கேக் என்னும் மேலையர் பண்டம்.

(கேக் என்றால் திண்மையானது, கட்டி என்று பொருள்).

சீனி முளை நிற்க - சீனியை உருக்கி முளைத்துவருவது போல் அப்பத்தில்

மேற்பரப்பில் நிற்பித்தல்.

சேர்ந்துகொடு வெட்டு என்றார் - ஒன்றாக இணைந்து நின்று அப்பத்தை

வெட்டுங்கள என்றானர்.

சேர்ந்துகொடு - சேர்ந்துகொண்டு. இது ண் என்ற மெய் நீக்கிய தொகுப்பு.

(தொகுத்தல் விகாரம் ).

சீர் தட்டும் கைகள் - வணக்கம் வாழ்த்துடன் தட்டும் கைகள்.

சீர் - சீருடன்.

பலருக்கும் ஏறாது - இப்போது உணவில் சீனி முதலியவை

குறைக்கவேண்டும் என்ற மனத்திட்பம் குறிக்கிறது. எட்ட ஓடி

விடுகின்றார் என்பதும் அது.

புதுமைச் சார்பு - உணவு குறைத்து உடல்பருமன் குறைக்கும் புதுமையான

வேட்கை.

பனிப் பாய்வு ஒக்கும் - குளிரூட்டிய அறையில் பாயும் காற்று மேலைநாட்டு

தட்ப நிலையை ஒத்திருப்பது.

இனிப்பாகும் - இனிப்பை ஒத்ததாகும்

பண்பு திகழ் அன்பு - மூத்தோரை மதிக்கும் பண்பாட்டில் வரும் அன்பு.


கருத்து:   சீனியின் இனிப்பை விட்டுவிடலாகும்.  ஆனால்  அன்புடனும் பண்புடனும் நடந்துகொள்ளுவதில் வரும் இனிப்பு இருக்கிறது,  அதை விடமுடியாது.   அது பண்பாடு சார்ந்தது. இதை மறைவாகச் சுட்டுகிறது இவ்வரிகள்.



சனி, 22 மே, 2021

ஆட்டுக்கல்லுக்கு இன்னொரு பெயர்

 ஆட்டுக்கல் என்ற கற்கருவி இப்போது  பெரிதும் பயன்படுவதில்லை. எங்கள் வீடுகளிலும் ஆட்டுக்கல்கள் இருந்தன.  அவற்றைக் காசுகொடுத்து அப்புறப்படுத்த  வேண்டியதாகிவிட்டது.  ஆட்டுக்கல்லில் அரைத்து  (ஆட்டி) இட்டிலி தோசை முதலியன சுட்டால் அவை நன்றாக இருக்கும். தோசைக்கல்லிலும் ஊற்றும் மாவு பிடிக்காமல் தோசை அழகாக வரும்.  மின்குழைகளில்1 அரைத்து வரும் மாவில் உண்டாக்கிய தோசை இட்டிலிகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது எம் கருத்து. நீங்கள் இதில் மாறுபடக்கூடும்.

ஆட்டுக்கல் பற்றிச் சொல்லும் இடுகை;  விரும்பினால் படித்தறிக..

https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_7.html 

இரும்பு  பெரிதும் பயன்பாட்டுக்கு வராத முன் காலத்தில் பல கருவிகளும் கல்லினால் ஆனவையாக இருந்தன.  கத்திகள் இவ்வாறே கல்லினால்தான் வடிக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்தன.  கல்லினால் ஆன கத்தியைப் பயன்படுத்தத் திறமை சிறிது தேவைப்பட்டிருக்கும்.  அக்காலத்தில் அதற்கு அருந்திறல் உடையோர் அக்கருவியைக் கையாண்டிருப்பர்.  சொல்லாய்விலிருந்து,  கல் + தி >  கற்றி >  கத்தி,  அல்லது,   கல் > கல்தி > கத்தி (  இடைக்குறை "ல்" )  அல்லது  கல் > க  (கடைக்குறைச் சொல்,  க+தி > கத்தி என்று கத்திக்குப் பெயரமைந்திருப்பதனால் ,  கத்தி கல்லால்   முன் அமைந்திருந்தது  எனற்பாலது தெளிவாகிறது.  ஆட்டுக்கல்,  தோசைக்கல் என்று கல் கருவிகளைக் குறிப்பதிலிருந்து கல்லின்  பேராதிக்கம் தெளிவாகிறது.  இப்பெயர்கள் நாம் வாழும் இந்நாள்வரை மாற்றம் ஏதுமின்றி நம்மை வந்து எட்டியுள்ளன என்பதும் உன்னுதற் குரியது ஆதல் உணர்க.  ஆதிக்கம், என்பதோ,   ஆதி + கு + அம் >  ஆதிக்கம் என்று அமைந்தது  ஆக்கத்தின்போதே ஒரு மேலாண்மை அமைந்துவிட்டால், அதை ஆதிக்கம் என்று சொல்லவேண்டு மென்பதுதான் சொல்லமைப்பின் தரவு ஆகும். பின்னடையில் நுண்பொருள் வேறுபட்டிருப்பதும் பல சொற்களில் தெளிவாகிற உண்மையாகும்.

மேலும், கல் என்பதே கரு என்று திரியும் அடிச்சொல்லுமாகும்.  கல்> கர்>  கரு> கருவி எனக்காண்டல் எளிது.  கற்பாறைகள் பெரும்பாலும் கருப்பாய் இருந்தன.  ஆகவே கருப்பு என்னும் நிறப்பெயரும்  அதனில் தோன்றுதல் இயல்பு ஆகும்.

கல்லுதல் என்ற வினைச்சொல் தோண்டுதற் பொருளது. தோண்டும் செயலும் கருவிகளின் துணைமை வேண்டுவதாம்.

கல்குலஸ் (கணிதம் )  என்பது கல்குலுக்கு என்பதனடித் தோன்றிற் றென்பர்.

கருவி,  காரணம், காரியம்  என்ற சொற்கட்கு  கல் - கரு என்பதே அடிச்சொல்.  மண் தோன்றுவதற்குக் காரணம் கல் என்று தமிழர்கள் கருதினர். இது அறிவியற்படி சரியான கருத்தா, அன்றா என்பது தொடர்பற்ற கேள்வி. தமிழர்கள் அப்படி நினைத்தனர், அதிலிருந்து சொல்லை அமைத்துக்கொண்டனர் என்றே முடிபு செய்தல் கடன்.  அவர்களுக்குத் தோன்றிய கருத்தை அடிப்படையாக்கித்தான் அவர்கள் சொல்லாக்கம் செய்வர்.  மற்றவர்க்குத் தெரிந்தவை மேலானவையாயினும் அவ்வறிவு அமைப்புக்குத் தொடர்பு அற்றதாகிவிடும்.  எடுத்துக்காட்டாக,  அம்மை நோய் அம்மனின் ஆத்திரத்தால் அவள் ஏற்படுத்துவது என்று தமிழர் நினைத்து (நோயை ) அம்மை நோய் என்றனர். இற்றை அறிவியலார் கருத்துக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை.  அறிவியலைச் சேர்க்கும் இயைபின்மை தோன்றுமிடத்து அதைக் கொணரலாகாது.

மனிதனின் கருவிகள் பலவும் கல்லாகவே இருந்ததாலும், அவனுடைய காரணமும்  காரியமும் கல்கொண்டே நடைபெற்றதாலும்,  கல் என்ற அடிச்சொல்லிலே அவை அனைத்தும் அவன் அமைத்துக்கொண்டான்.  கல்லிலேகூட ஆண்டவனைக் கண்டு பிடித்திருப்பான்.  காரணம், கல்லினுள் தேரைக்கு அவர் எப்படியோ உணவு நாளும் ஊட்டிவிடுகிறார்.  கல் குடைவுகள் அவனுக்கு வீடுகளாகப் பயன்பட்டன.  கொடிய விலங்குகளிடமிருந்து அவனைக் காத்தன. நீர் தொலைவாக நின்ற உயர்ந்த கல் மலைகள் அவனுக்குப் பாதுகாப்பாக இருந்திருக்கும்.  இவற்றையெல்லாம் சிந்தித்து உணர்தல் சொல்லாய்வார் கடன்.

கல் ஆயுதம் ஆட்டுக்கல்லாகவும் அம்மிக்கல்லாகவும் நாம் வாழும் காலம் வரை வந்துள்ளன என்றால் கல்லாதிக்கத்தை நன்கு கருதுக.**

ககரம் சகரமாகும்.  கல் > கத்தி> கத்திரி;  கத்தி எடுத்துச் சண்டை போட்டு ஆட்சி அடைந்தவன் கத்திரியன் > சத்திரியன் என்று கண்டுகொள்க.  ககரம் சகரமானதைக் கேரலம்<> சேரலம் என்ற தொடர்பில் அறிக.  சேரல் > சேரலம் > கேரளம். க - ச திரிபுகள் பல மொழிகளில் உண்டு.  Not language specific.

இன்னும் அறிய இதைப் படிக்கலாம்:

சத்திரியர்: https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_82.html

 ஆட்டுக்கல்லுக்கு வருவோம்.  அதற்கு இன்னொரு பெயர் குலைக்கல் என்பது.  ஆட்டுவது மாவை அரைத்துத் தருகிறது.  குலைக்கல் அரிசியைக் குலைத்து ( அதாவது அரைத்து)  மாவுக்குழம்பாக்குகிறது.

கல் என்பதும் குல் என்பதும் தொடர்புடையவை.  கலை > < குலை. ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கும் ஒன்றைக் குலைப்பது,  அதைக் கலைப்பது ஆகும்.  இவற்றினின்று கல் - கலை, குல் - குலை என்பவற்றை அறிந்துகொள்ளலாம்.

இதன் மூலம் ஆட்டுக்கல்லுக்கு இன்னொரு பெயர் அறிந்தோம்.  இனி ஒரு கேள்வி.  ஆட்டுக்கல்லை  மின் குலை  என்றோ மின் குலைக்கல் என்றோ சொல்லலாமா.  உங்கள் விடையைப் பதிவு செய்யுமாறு அழைக்கின்றோம்.

அறிக நன்றி.

மெய்ப்பு பின்னர்.

குறிப்பு: 

1. மின்குழை  -  மின்னாற்றலினால் மாவு 

குழைத்துத் தரப்படுவதால் 

இப்பெயர் கையாளப்பட்டது.


இவ்விடுகையின் ஒரு பகுதி ஒரு சிறு

திருத்தத்தின்போது அழிந்தது.  அது மீட்டுருவாக்கம்

செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.




 



புதன், 19 மே, 2021

காவல் இச்சைப் பொருள் புறப்படுதல்

காதல், காமம்,  பிரேமை, மோகம் என்பனவெல்லாம் முன்னர் விளக்கம் பெற்றிருந்த இடுகைகள் தாம்.   அவற்றில் சில இங்கு பதிவு செய்யப்படுகின்றன , நீங்கள் எளிதில் அறிந்தின்புறுதற்கு:

 காதல் https://sivamaalaa.blogspot.com/2020/03/blog-post_24.html

காமம்  காமுகன், காம்  என்பன மேற்படி இடுகையில் குறிக்கப்பெற்றுள்ளன..

காமாக்கியா , காமாட்சி

இனியும் இப்பொருள் பொங்கிய இடுகைகள் இங்கிருக்கக்கூடும்.  இருப்பன அறியின்,  தொகுப்பினில் ஏற்றுக்கொள்க.

கா என்ற அடிச்சொல்லுக்குக் காத்தல் பொருள் இருப்பது காணக்கிடப்பினும்,  அவற்றின் விளைந்த மேற்கண்ட சொற்களில் ஒன்றையாவது தெளிவுறுத்தும் வண்ணம்,  காவு என்பதற்கு இச்சை என்ற பொருளில்லையே என்று  வருந்துதல் கூடும் நம் அன்பர்கள்.

காவு என்பதில் வு  எனற்பாலது விகுதியாம்.  அறிவு,  தெளிவு என்பவற்றில் வு என்பது தொழிற்பெயர் விகுதி யாயினது போலவே  காவு என்பதிலும் தொழிற்பெயர் விகுதி.  காவு கொடுத்தல் என்பதில் அது அவ்வாறு விகுதியாயினது போலுமே யாகும்.  காவு என்பதில் இதுகாறும் பொருள் காத்தல் என்பதே.  அது பின்னும் ஒரு ~தல் விகுதி பெறுகிறது.  அப்போது காவுதல் ஆகி,  இச்சித்தல் அல்லது இச்சை கொள்ளுதல் என்ற பொருளைப் பெறுகிறது.  மற்றொரு நோக்கில்,  கா + உது + அல்1 என்றும் வந்தமைந்ததாய்க் கருதவும் படுதல் கூடும்.  ஆதல் அமைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் எய்துதல் கூடும்.  ஆயின் இருபிறப்பி எனலுமாம்.

இனி இச்சை என்பதும் விளக்கம் பெற்றுள்ளது;  சொடுக்கி வாசிக்க

(இவை வெவ்வேறு சமயங்களில் வெளியிடப்பட்டவையாதலின் ,  கூறுதல் கூறுதலாய்ச் சில இருக்கலாம். பொறுப்பீராக ).


 
காவு என்பதற்குக் காத்தல் பொருளும் காவுதல் என்பதற்கு இச்சைப் பொருளும் வருமாறு கண்டு, இவற்றில் தொடர்பையும் எம் விளக்கத்தில் தெளிவும் கண்டு இன்பிறுவீராக.  உங்கள் கருத்துகளையும்  கருத்துரைப் பகுதியில் பதிவுசெய்திடுவீர்.  நன்றி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

அடிக்குறிப்பு:

1.  கா + உது + அல்  :  கா =  காத்தல்,   உது -   முன்னிருப்பது,  அல் - விகுதி.
சேர்த்திட,  காவுதல் என்று ஆகும்.  முன்னிருப்பதைத் தனக்கென்று கொண்டு,  பிறர்க்குக் கொடாமை.   ஆகவே,   இதன் பெறுபொருள்:  இச்சித்தல்,  விரும்புதல்  ஆகும்.  இஃது இன்னொரு வழியில்  புணர்த்திச் சொல்லாக்குதல்.





உன் மதமா... என் மதமா... ஆண்டவன் எந்த மதம் | EM HANIFA SONGS

Nice thoughts and nice lyrics from Nagoor Isaimurasu Haniffa. ஒரு பொதுநிலை இசை ( சமரச கீதம் )


இளையராஜா அவர்களின் இசையமைப்பு இனியதாக்குகிறது

எல்லா ஆறுகளும் கடலுக்கு ஓடுவது போல
எல்லா மதங்களும்  இறைவனை நோக்கியே செல்லுகின்றன.

என்றார் அருட் பெரியவர் ஸ்ரீ  இராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

ஞாயிறு, 16 மே, 2021

துரோகி யார்?

 இன்றைக்கு ........

இப்படி எழுதத் தொடங்கும் பொழுதே,  இன்றைக்கு என்று எழுதாமல் " இற்றை நாளில்"  என்று தொடங்கவேண்டு மென்று ஆவலாய் உள்ளது.  கடினமான சொற்களைப் புகுத்தி  எழுதுதல் கூடாது என்று நீங்கள் நினைப்பீராயின் அதுவும் சரிதான்.  கொஞ்சம் கடின நடையி லெழுதினால்தான்,  பல தமிழ்ச்சொறகள் ஓரிருவரிடமாவது புகுந்து வாழும் என்று யாம் நினைப்பதுவும் சரிதான்.  இப்போது துரோகி என்ற சொற்குள்  ( சொல்லுக்குள்) புகுந்து எதையாவது தெரிந்துகொள்வோம்.

நீங்கள் நினைப்பீராயின் ----  இல்லை, நீங்கள் நினைப்பீர்க  ளாயின்.... ஏன் அதிகம் கள்?  நீங்களில் ஒரு கள் . அப்புறம்  வாக்கியத்தின் வினைமுற்றிலும் ஒரு கள் எதற்கு?  கள் என்பதே  அஃறிணை விகுதி என்று தொல்காப்பியம் கூறுகிறது, அது தமிழ்மொழியில் இலக்கணம். இது என்ன மாறாட்டம்?   சரி, இருக்கட்டும்.

தமிழ்மொழி பெரிதும் திரிந்துவிட்டது.  நீ உண்டு என்று சொன்னாலே அது இலக்கணப்படி தவறு.  ஏனென்றால் நீ என்பது முன்னிலை ஒருமை. உயர்திணைக்குரியது அது.  உண்டு என்பது  --   உள் + து.   து என்பதோ அஃறிணை ஒன்றன்பால் விகுதி.  பொருந்துமா றெங்ஙனம்?

சரி,  துரோகி என்ற சொல்லுக்கு வருவோம்.  ஒருவன் மற்றவனுக்கு நண்பனாய் இருந்துகொண்டே  அவனுடைய மனைவியிடம் போய்  ஆசை வார்த்தைகள் பேசுகிறான் என்றால்,  அந்த ஒருவனுக்கும் அவன் மனைவிக்கும் இடையிலுள்ள புனிதமான தொடர்பில் " துருவிச் செல்ல"  முனைகிறான் என்று அர்த்தம்.  இவ்வாறு பிறர்தம் நேரிய தொடர்பில் துருவக் கூடாது.  அத்தகைய துருவுதல் அல்லது நுகர்தல்  ஓங்கிவிடுமாயின்,  அது  துரு + ஓங்கு + இ  >  துரு + ஓகு + இ   = துரோகி  ஆக்கிவிடுகிறது அவனை.  ஓங்கு என்பது இடைக்குறைந்தால் ஓகு ஆகிவிடும்.  ஒன்றில் ஓங்கி நிற்பவன்,  ஓகி.   மனத்தை நிலை நிறுத்தி எண்ணங்களை  ஆழ்ந்துசெல்லுமாறு செலுத்தி ஒன்றன் தன்மையை உணர்ந்துகொள்ளுபவன்,  ஓங்கு > ஓகு > ஓகி > யோகி.. இத்திரிபு  ஆனை> யானை போல.  ஓகி என்ற தனிச்சொல் திரிந்தாலும்  துரு என்பதனுடன் அடைவு கொண்டுள்ள ஓகி என்பது அப்புறம்  திரியவில்லை.

துருவுதல் என்ற சொல்லின் அடிச்சொல்லாகிய துரு என்பதும்  ஓதியவன் என்று பொருள்படும் ஓது+ அன்+ அன் >  ஓதனன் என்பதும் சேர்த்து,   துரு+ ஓதனன் > துரியோதனன் ஆகி,  எல்லாம் நன்றாகப் படித்துத் தெரிந்தவன் என்ற பொருளைத் தந்து,   அவனை நல்லவனாகக் காட்டுகிறது.  அவனும் துறக்கத்திற்குச் சென்றான் என்பது கதை.  எதையும் நன்கு துருவித் துருவி ஓதி அறியவேண்டும்.

ஆனால் எவ்விடையத்தையும் வேண்டாத துருவல்கள் செய்து அதில் முன்னிற்கும் கேடுடையான்  துரோகி.

துருவு ,  இது இடைக்குறைந்து  துவ்வு  ,  துவ்வுதல் என்பது நுகர்தல் என்று பொருள்தரும் சொல்.  பருப்பு என்பதை பப்பு என்றதுபோலும் இடைக்குறைச் சொல் இதுவாகும்.  (பப்பு வேகாது என்று ஏளனமாகச் சொல்வது கேட்டிருக்கலாம்.)

இனி ஓர் இடுகையில் சந்திப்போம். வேறு பொருண்மையும் உண்டு. அதைப் பின் எழுதுவோம்.  *

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.


இதையும் காண்க:

*இது இன்னொரு விளக்கம்:

துரு ஓங்கிய  துரோகம்   

சனி, 15 மே, 2021

தமிழ் சமஸ்கிருத மொழி இயல்புகள்.

மொழிகளைப் பற்றிய  சிந்தனை  தெளிவு பெறும் போது,  இன்று உள்ள இந்திய மொழிகள் பலவும் இந்தியத் துணைக்கண்டத்திலே தோன்றிப் பண்பட்டவை என்ற அறிவு திறம்பெறும். ஒரு மொழியைப் புது மொழி என்றால் அது பழைய மொழிகள் என்று அறியப்பட்ட மொழிகளுடன் ஒப்புநோக்கி அவ்வாறுசொல்கிறோம் என்று பொருள்.  சிலமொழிகள் பன்னெடுங்காலமாய்ப்  பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் இருமருங்கிலும் ஒருங்கு திகழ்ந்து வந்துள்ளன என்பதும் உண்மையே.  அத்தகைய மொழிகளில் தமிழ் முன் வரிசையில்  நிற்பதாகும்.  பண்டைக் காலத்தில் எழுத்து மொழி பெரும்பாலும் செய்யுளாகவே இருந்தது.  செய்யுளே இலக்கியம் என்று போற்றப்பட்டது.  எழுத்தில் வந்தவெல்லாம் பெரும்பாலும் கவிகளேயாம்.  உரைநடை என்பது அக்கவிகட்குப் பொருள்கூறு முகத்தான் ஏற்பட்டவை.  இவற்றுக்கு ஏற்பட்ட விளக்கங்களைத் தாம் உரை என் கின்றோம்.  இக்காலத்தில்தான் உரைநடை செய்யுட்சார்பின்றி தனித்தன்மை பெற்றுக் கனிந்துள்ளது. 

இன்று கிடைத்துள்ள தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்,  ஒரு பிராமணரால் இயற்றப்பட்டதென்று  தமிழ் ஆய்வறிஞர் இப்போது நம்புகின்றனர்.  அவருக்கு முன் இலக்கணம் எழுதியவராகக் குறிக்கப்பெறும் அகத்தியனாரும் பிராமணரே என்றனர். அவ்வாறாயின் தமிழைப் பிராமணர்கள் எழுதியும் பேசியும் வந்த மொழி என்றே  முடிபுகொள்ளுதல் வேண்டும்.  இதைத் தேவநேயப் பாவாணர் வலியுறுத்த,  மறைமலையடிகள் ஒத்துக்கொண்டார் என்று அறிவோம்.  இதற்கெதிரான கருத்துடையவராய் இருந்த கா. சுப்பிரமணியப்பிள்ளை,  இவர்களின் முடிபு கண்டு மலைவு கொண்டார் என்பர்.  இதனை இப்புலவன்மார்தம் நூல்களின் வாயிலாய் அறிக.

சமஸ்கிருத மொழியில் இராமாயணம் பாடிய மூத்த பெருங்கவி வால்மிகி முனிவர்.  இவர் பிராமணர் அல்லர்.  இவரைப் பரையரென்பர்.  காட்டுவாசி, வேட்டுவத் தொழிலர் என்றும் கூறுவர்.   மகாபாரதம் பாடிய வியாசப் பெரும்புலவர் மீனவர் என்பர்.  சமஸ்கிருத இலக்கணம் எழுதிய பாணினியோ ஒரு பாணர்  -  என்றால் இவரும் பரையரே.  இவர்கள் அனைவரும் இற்றை நிலையின்படித் தாழ்ந்தவர்கள் என்று எண்ணப்பட்டாலும்,  அவர்கள் எழுதிய - பாடிய காலங்களில் அவர்கள் மேல்நிலையில்தான் இருந்தனர்.  இவர்களின் அக்கால மேலாண்மையை,  எம். சீனிவாச ஐயங்காரின் தமிழர் பண்பாடு பற்றிய ஆங்கில நூலில் கண்டு தெளியலாம்.  தமிழ் இலக்கியமும் இதை நன்கு காட்டவல்லது.  ஒரு வள்ளுவன் அரசனாய் இருக்க, அவன்முன் ஒரு பிராமணன் கவிஞனாய் நின்று பாடிப் பரிசில் பெறும் காட்சியைப் புறநானூறு தெரிவிக்கிறது.  பரையர் என்போர்,  மன்னனின் ஆயுதக் கிடங்குக்கு அலுவல் அதிகாரியாய்ப் படையினைப் போருக்குக் கிளப்பும் முதல் அதிகார  அழைப்பு விடுக்கும் நிலையில் இருந்ததையும் தமிழிலக்கியம் காட்டும்.  இவற்றையெல்லாம் நாம் பலமுறை எழுதியுள்ளோம்.  ஆகவே சமஸ்கிருதம் பரையர் புழங்கிப் பாராட்டிய மொழி என்பதில் ஐயமில்லை. 

இதில் வியக்கத் தக்கது என்னவென்றால்,  இம்மொழிகளைக் கொண்டாடிப் போற்றியவர்கள் இப்போது தம் நிலைகளில் சற்று மாறியுள்ளனர் என்று சொல்லவேண்டியுள்ளது.  இதனை மேலும் பின்னொருகால் விளக்குவோம்.

நூதனம் என்ற சொல்லை நாம் முன்னர் விளக்கியுள்ளோம்.  அவற்றை இங்குக் காணலாம்:



மொழிகளின் ஒரு சில  ஒலியொற்றுமைச் சொற்களின் அடிப்படையில் ஆரியர் என்போர் வந்தனர் என்பது  வெள்ளையர் ஆட்சியில் மக்களிடைப் பிளவுகளை உண்டுபண்ணுதற்காக உண்டாக்கிப் பரப்பப் பட்ட ஆதாரமற்ற தெரிவியல் ஆகும் (  தெரிவியல் -  தியரி).  லாத்வியாவில் வழங்கிய மொழியிலிருந்து இலத்தீன் மொழி அமைக்கப்பட்ட காலத்தில் தென்னாட்டிலிருந்து மொழிப்பண்டிதர்கள் உரோம் சென்று ஆங்கு மொழியை வளப்படுத்த உதவியுள்ளனர். இதனை வரலாற்றறிஞர் எடுத்துரைத்துள்ளனர்.  மேலும் சுமேரியா முதலிய இடங்களில் தமிழ் சமஸ்கிருத மொழிகள் பரவி இருந்தன என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்..  சமஸ்கிருதம் என்பதும் தென்னகத்தில் வளப்படுத்தப்பட்ட மொழியே ஆகும்.  ஆரியர் என்போர் யாரும் வரவில்லை. வெளிநாட்டினர் வந்துள்ளனர். இவர்கள் "ஆரியர்" அல்லர்.   ஆர் என்பதும் தமிழில் மரியாதை காட்டும் ஒரு விகுதியாகும்.  ஆர்தல் என்ற சொல்லும் நிறைவு குறிக்கும் சொல்.

நூதனம் முதலிய சொற்கட்கு நாம் எடுத்தியம்பிய ஆய்வினை நன்கு புரிந்துகொண்டு வரலாற்றினை நன்கு படித்து அதில் புகுந்துள்ள சுழல்களை
அறிந்துகொள்ளவும்

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர். 

வெள்ளி, 14 மே, 2021

கொரனா வாய்க்கட்டு அவிழ்க்கும் நாள்

 போய்விட்டாய் என்றன்றோ நினைத்தி  ருந்தோம்

போனதிசை கண்ணிற்குள், அதன்முன்  வந்தாய்!

ஆய்விட்ட  வேலைசில,   இனியும்  உண்டோ?

அவைமுடித்துப் போவதற்கே இவண்நீ வந்தாய்!

நோய்கொட்டிக் கொல்லுறுத்தும் கொர னாப்    பேய்நீ

நூதனமாய்  இனிஎன்நீ  செயப்போ  கின்றாய் 

வாய்கட்டி வழிச்செல்லும்  வழக்கம் மாற்றி

வாழ்நாளும் விடிகாலம்  வருமெந் நாளோ? 


பொருள்

இனிஎன்நீ  -   இனி என்ன நீ

இவண் -   இங்கு

கொல்லுறுத்தும் -  சாவுகளைக் கூட்டும்

வாய்கட்டி -  முகக் கவசம் இட்டு

குல் > குள் : ஒன்றுசேர்தல் காட்டும் அடிச்சொற்கள்.

 அடிச்சொற்கள்  ஆராய்ச்சியில் ஈடுபடுவதால் இந்தக் கொரனா என்னும் முடிமுகிக் காலத்தில் ஒரு பெருநலம் உண்டு என்பது சொல்லாமலே புரியக்கூடியது  ஆகும்.  நம் ஆய்வு  " கு"  என்பதிலிருந்து  தொடங்கவேண்டும்..

மன்னன் மதுரைக்குப் போனான்.

என்னதான் அவன் மன்னனாக இருந்தாலும் மன்னன் தான் மதுரைக்குப் போகவேண்டி நிகழும். இதற்குக் காரணம், மதுரை எந்தக் காரணங்கொண்டும் மன்னனைத் தேடிப் போகாது.  இது ஓர் அப்பட்டமான, சொல்லவேண்டாத உண்மை.  இதில் மன்னனை மதுரையுடன் சேர்த்துவைக்கும் தமிழ்ச்சொல் "கு" என்பதுதான். தமிழில் கு என்பது தனிப்பெயர்ச் சொல்லாகவோ வினைச்சொல்லாகவோ இல்லாமல்,  உருபாக உள்ளது.  உருபுகளெல்லாம் இடைச்சொற்கள்.  அவை தனிச்சொற்களாக எந்தக் காலத்திலோ வழங்கியது. அதைக் கண்டுபிடிக்கும் அளவைகளும் கருவிகளும் இப்போது இல்லை,  இனிமேல் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புவோம்.

கு என்ற சொல்லை ஒரு சொல் என்று தகுதிதந்து சொல்லத்  தமிழ்மொழி இயலார்  தயங்கினாலும்  ஆய்வின் பொருட்டு,  அதை இங்கு நாம் சொல்லென்றே குறிப்பிடுவோம்.  மொழியின் இலக்கணம் சொல்லென்று விதந்து சொல்வது வினைச்சொற்களையும் பெயர்ச்சொற்களையுமே.  இடைகளையும் உரிகளையும் அவ்வாறு புலவர் குறிக்க விரையாமைக்குக் காரணம்,  அவை தனியாக நின்று பொருளுணர்த்துவன அல்ல.  மொழியெனப்படுவதே பொருளுணர்த்து கருவியாகலின்,  தனித்து நின்று பொருள் தூக்கும் திறத்தின அல்லாதவற்றைச் சொல் எனல் எற்றுக்கென்பது அவர்கள் கருத்து.  அந்தக் கருத்து இலக்கணத்துக்குச் சரி,  ஆய்வுக்கு சரியில்லை ;  ஆதலின், நாம் கு என்பதனைச் சொல்லென்றே குறிக்கவேண்டும். பல இலக்கணியர் விதந்து கூறா விடினும்  கு என்பது போல்வனவற்றையும் சொல்லென்றெ குறிக்கவேண்டிவந்தது. அது வேறு குறிப்பின்மையினால்.

கு என்ற சேர்வு குறிக்கும் பண்டைக் கிளவி,  நீண்டு  குல்  என்று ஆனது,   பின் இன்னும் சொற்களைத் தோற்றுவிக்கக் குள் என்றுமானது. அப்புறம் குழ் என்றுமானது.  இப்போது இவற்றிலுள்ள சேர்வுக் கருத்துகளைக் காண்போம்.

குழ் >  குழாம்.  (  அம் இறுதி)  குழ் > குழ + அம் >  குழாம்.

குழ் > குழை   (  ஐ )  குழைக்கப்படுவது சேர்ந்திருக்கும்.

குழ்  >  குழு   (  உ)

குழ் >  கூழ்.  ( மாவு நீரில் வேவித்துக் கூழாவது).

இனிக் குவி என்ற சொல்லில் சேர்வுக் கருத்தை கண்டுகொள்ள முடிகிறதா என்று பாருங்கள்.

கு :  குடு என்பதில் சேர்வுக் கருத்து உள்ளதா?   கூடு என்பதில்?

இவற்றுள் குலாலன் என்பது அழகான தமிழ்.  குல் -  சேர்த்தல்.  ஆல் -  கருவி யுருபு.  அன்  ஆண்பால் விகுதி.  எல்லாம் சேர்த்துக் குயவனுக்கு மறுபெயராய் அமைந்துவிட்டது.  

பற்பல சொற்கள். அவற்றை அவ்வப்போது கண்டு இன்புறுவோம்.

அறிக, மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


பொருள்:

எற்றுக்கு -  எதற்கு.







புதன், 12 மே, 2021

கொரனா பரவல்

 கொரனா என்னும் கோவிட் 19,  இன்னொரு சுற்றைத் தொடங்கி உள்ளது என்று தெரிகிறது.  கொஞ்சம் ஓய்ந்தவுடன்  இறுதியை அடைந்துவிட்டதாகச் சில நாடுகள் எண்ணிவிட்டன,  அது தவறு என்பதை யாரும் உணர்ந்திருக்கவில்லை. இப்போதுதான் அறியத் தொடங்கி உள்ளோம்.

இது யாரும் எதிர்பார்க்காததுதான். கொரனா என்பது முன் நாம் அறியாத ஒன்று ஆகும்.  எந்தக் கொம்பனுக்கும் தெரிந்திருக்க  வாய்ப்பில்லை. கணிக்க முடியாத காலன் இந்தக் கொரனா,

மலேசியாவில் 1722 பேர் இறந்துள்ளனர். 

சிங்கப்பூரில் சில இடங்களில் பரவியுள்ளது.

இது பற்றித் தனிமனிதன் தான் கவனமாக இருக்கவேண்டும்.

மந்திரிகள் வந்து நமக்குக் கவசம் அணிவித்துவிடமாட்டார்கள்.  அது அவர்கள் வேலை இல்லை.






செவ்வாய், 11 மே, 2021

மந்திரம் என்ற சொல்லுக்குத் தமிழ் விளக்கம்.2

 மந்திரம் என்ற சொல் இந்தியாவின் பலமொழிகளிலும் வழங்கும் சொல். இச்சொல் தமிழிலும் வழங்குவதாகும்.

முன்னர் இச்சொல்லைத் தமிழாசிரியன்மார் ஆய்ந்துள்ளனர். அவர்கள் கண்டுபிடித்துச் சொன்ன விளக்கம் வருமாறு.

மந்திரம் என்பது   மன் +திறம்(1) என்று பிரிக்கத் தக்கது.  இவற்றுள் திறம் எனற்பாலது ஒரு விகுதியாகி,  றகரம்  ரகரமாய்  மாற்றுண்டு,  
ஏனைச் சில சொற்களிற் போல,  ~திரம் என்று நின்றது; எனின்,  ஆய்வுக்குரியது பெரிதும் மன் என்பதே.  மன்னுதல் என்னும் வினை,  நிலைபெறுதல் என்னும் பொருளுடைத்து.   ஆதலின்,  மன் + திரம் >  மந்திரம் என்பதன் பெறுபொருளாவது, அடுத்தடுத்து வேண்டுதல் மொழிபல  பலுக்கி,  ஒருவன் தன் மேற்கொண்ட எண்ணத்தை நிலைப்படுத்தி  வெற்றி எய்துவது என்பது  என்று கொள்ளப்  பொருள் நன்கு  அமைகின்றது..

இதற்குப்   புலவர்  சிலரிடை ஏற்பட்ட மறுப்பில் உள்ளீடு ஒன்றுமில்லை.  இரு சொற்கள்  மன் திரம் என்று புணர்க்கப்படின்,  மன்றிரம் என்று வரவேண்டுமாதலால், மந்திரம் என்று வருவது தமிழன்று  என்று மறுப்பு விடுத்தனர்.   ஆனால்,  பின்+தி>  பிந்தி,   முன்+தி >  முந்தி  எனச் சொற்கள் தமிழில் அமைந்துள்ளதனை அவர்கள் மறந்துவிட்டனர்.  மான் என்ற அடிச்சொல் மன் என்பதன் நீட்சி.    அது  தன் என்ற இறுதியைப்  பெற்று,  மாந்தன் என்று அமைதலையும்   மான்றன் என  அமையாமையும்  காண்க.  மேலும் மன் + தி என்று புணர்க்கப்பட்டு,  மந்தி என்று வந்ததன்றி  மன்றி என்று வரவில்லை.  மந்தி எனின் மனிதன் போன்றது என்பது  பொருள். மேலும் சொல்லாக்கம் வேறு,   வாக்கியம்  அமைத்தல் வேறு.  மான் தன் என்பவற்றில் வருமொழி நிலைமொழி என்பன இல்லை.   இரு சொல் துண்டுகளே உள. மான் இங்கு மன் என்பதன் திரிபு அல்லாமல் தனிச்சொல் அன்று.  தன் என்பதும் த் அன் அல்லது து  அன் என்ற இடைச்சொற்களின் புணர்வு  ஆகும்.  இவை வருமொழி ஆகா.  இவை பற்றி  முன் எழுதியுள்ளமையால்  பழைய இடுகைகள் காண்க.  முன் கூறியவற்றை இன்று மீண்டும் எழுதத்தேவை இல்லை.

மான்  என்பது  விலங்கு அன்று,    மன் என்ற வினையின் நீட்டம்.  அது மன்னுதல் என்ற வினையினின்று போந்த கரு வடிவம். உருவுள்ளது போல இருப்பினும் இடைவடிவம் ,  அமைந்துகொண்டிருக்கும்  ஆகாவுரு.  தன் என்பதும் சிதறல்கள்  கூட்டு.. கல்லின் தெறித்த சில்கள்.  இவை எவ்வாறு இறுதியுருப் பெறும் என்பதே நம்  முன் இருக்கும் கேள்வி.  இவற்றுக்கு இலக்கணம் இல்லை.

மேலும் எந்தப் பொருளுமின்றி வெறும் இடுகுறிகளாகவும் சொற்களை அமைக்கலாம்  ஆதலின் குறித்த மறுப்பு  வாதங்கள் பொருளற்றவை. டிங் டாங்க்  என்று சொல்லமைக்கலாம்.  ஒலிக்குறிப்புச் சொல்.  டி என்பது மொழிமுதல் ஆகாதென்பதால்  திங்குடாங்கு என்று மாற்றிக்கொள்ளுமளவு தான் செல்லலாம்.

இனி மந்திரம் என்பது இன்னொரு வகையிலும் அமையும் என்பதால் இஃது ஓர் இருபிறப்பி  ஆகலாம்.  தொடக்கத்தில் மந்திரங்கள் வரும் தொல்லைகளை மடித்துத் திருப்பிவிடுதற்காகவே  ஓதப்பட்டன.  தொல்லைகள் மடிந்து திரும்புவதால்,   அல்லது மடிந்து மீண்டுவராமல் அங்கே  நின்றுவிடுதலால்,  மடிந்து இரும் >  மடிந்திரும் >  மடிந்திரம் ,  இது இடைக்குறைந்து  ம(டி)ந்திரம்  > மந்திரம் என்றும் வரும்.  செய்த பில்லி சூனியம் முதலியவை மீண்டு வந்து தாக்காமல் போன திசையிலே இருந்திடவேண்டும்.  இதற்காகவே மந்திரங்கள் ஓதப்பட்டன -- வேதகாலத்தின் முன்பே.

இதுபோலும் சொற்கள் மக்களால் அல்லது மந்திரம்  சொன்னோரால் நாளடைவில் அமைப்புற்றவை. புலவர்க்கு இங்கு வேலையில்லை. இறக்கும் நேரத்தில் மருத்துவர் வருவதுபோல,  விளக்கும் காலத்தில்தான் புலவர் வந்து சேர்வார்.  அதுவரை ரீம் கிரீம் என்பவையே  ஆட்சி செய்யும்.

ஆதலால்  முன் சொன்ன  சொல்லமைப்புடன் இன்னொரு வழியிலும் அது விளக்குறும்  என்று முடிக்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.

அடிக்குறிப்பு:

(1) மன்+ திறம் :  இதில்  முன்னுதல் என்பதே மன் என்று திரிந்து,  மன்+ திரம் என்று புனைவுண்டு, மந்திரம் என்ற சொல் அமைந்தது என்பார்  தேவநேயப் பாவாணர். முன்னுதல் என்றால் ஓர் எண்ணத்தைத் தலைக்குள் முன் கொண்டு வருதல். மேற்கூறிய மன்னுதல் ( நிலைபெறுதல்)  என்பதும் ஓரளவு ஒப்பமுடிந்த கருத்தேயாம்.

(2)  மந்திரித்தல் -  வினைச்சொல்.  மந்திரித்த தகடு,  தாயித்து  என்பது வழக்கு.  மந்திரித்தல் -  மன்னும்படி திரித்தல்..  ஒரு நலம் நிலைநிற்கும்படி  திரித்தல்.  ஒரு  தீமை மடியுமாறு  திரித்தல்,  மடிந்து  நிற்க அல்லது மடங்கிடத் திரித்தல். நூலும் திரித்துக் கட்டப்படுவதுண்டு..  ஆகவே மடிந்திருக்கத்  திரித்தல்  சுருங்கி  மந்திரித்தல்  ஆகும்.


திங்கள், 10 மே, 2021

சந்தர்ப்பம் கழிசறை - திரிசொற்கள்.

எந்த மொழியானாலும் அது வளர்ந்து வருகின்ற காலத்தில் புதிய பதங்கள் தோன்றுவதும் பழைய பதங்கள் தேய்வதும் அழிவதும் இயல்பாக நடைபெறுவதொரு நிகழ்வு ஆகும். இடப்பெயர்களும் மாறி அமைவதும் இல்லாமற் போய்ப் புதுப்பெயர்கள் உண்டாவதும் என்றும் நடைபெறுவன ஆகும். எடுத்துக்காட்டாக செங்கமாரி ஆறு என்று தமிழர்கள் குறிப்பிட்ட ஆறு சிங்கப்பூரில் எங்கு இருக்கிறது என்றால், இன்றைய வரைபடங்களில் பார்த்து அதைக் கண்டுபிடிக்க முடியாது போகலாம். இருபது வயதை எட்டிவிட்ட இற்றைநாட் பிள்ளைகட்கு இது தெரிந்திருக்காது. காலாங் ஆறு என்பதை அவர்கள் கண்டுபிடித்துவிடுவர். இதற்குக் காரணம் அது எழுத்தில் இருப்பதுதான்.


இப்போது தமிழாசிரியர்களும் வேற்றுநாட்டினராயிருப்பின் இந்த ஆற்றுப்பெயரை எங்காவது கேள்விப்பட்டிருந்தாலே அவர்கள் அறிந்திருக்கக் கூடும்.


இவ்வாறு மறைந்துவரும் தமிழ்ப்பெயர்கள் பல உள்ளன. இங்கிருந்து பினாங்கு வரை இவற்றைத் தேடிப் பத்திரப்படுத்தலாம். ஆனால் இதற்கு விலை ஏதும் கிடைக்கப்போவதில்லை.


இருப்பினும் சொற்களில் ஏற்படும் திரிபுகளைக் கவனிக்குங்கால், மறைந்துவிட்ட பல்வேறு சொல்வடிவங்களும் அனைத்தும் கிடைப்பதில்லை. கிடைத்த வடிவங்களை மட்டும் குறிப்பிட்டு நிரல்செய்து காட்டுங்கால் புரிந்துகொள்ளச் சற்று கடினமாகத் தோன்றக்கூடும். இவ்வாறு தோன்றும் சொற்களில் " சந்தர்ப்பம் " என்ற சொல்லும் ஒன்றாகும். இது " அமைந்து தருகின்ற சுற்றுச்சார்பு" என்றே வாக்கியப்படுத்தி விளக்கவேண்டியுள்ளது. அம் என்பது அமை என்றும் சம் என்பது சமை என்றும் பழங்காலத்திலே திரிந்து சொற்களாகிவிட்டன. சம் என்பது இதுபோழ்தில் தனித்து வழங்கவில்லை. ஆனால் அமையம், அமயம், சமையம், சமயம் என்பன நம்மிடத்தே நின்று நிலவுவன; இச்சொல்லுடன் தொடர்புள்ளவை ஆகும். இவற்றிலும் அமைதற் கருத்தே அடிப்படைக் கருத்தாய் ஓங்கி உள்ளது. ஆகவே இத்தொடர்பினை ஒருவாறு விளக்கி முன் வெளியிட்டோம். அவற்றை ஈண்டுக் காண்க. நாம் இழந்தவை பல வடிவங்கள் என்றாலும் எல்லாவற்றையும் இன்னும் இழந்துவிடவில்லை என்பதறிக.


சந்தர்ப்பம் என்ற சொல்லுக்குத் தொடர்புகள்:


https://sivamaalaa.blogspot.com/2017/06/blog-post_9.html

https://sivamaalaa.blogspot.com/2012/06/getting-closer-in-yesteryears-what-it.html


இன்னொரு சொல்லையும் அறிவோம். இது கழிசடை என்ற சொல் இது முன்னர் கழிகடை என்று இருந்தது. கழிந்த அல்லது தள்ளுப்பட்டவற்றில் கடைத்தரமானது என்று பொருள். இச்சொல் பின்னர் கழிசடை என்று திரிந்தது. இதில் "சடை" ஒன்றுமில்லை. அதாவது ஜடை என்ற சடை ஒன்றுமில்லை. கடை ( கடைத்தரம்) என்பதே சடை என்று மாறிவிட்டது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்லவேண்டுமானால் சேரலம் என்பது கேரளம் என்று திரிந்ததைச் சொல்லவேண்டும். இது க- ச திரிபுவகை. இது போலும் திரிபு பிற மொழிகளிலும் உளது. சீசர் என்பது கைசர் என்பதுபோல் எழுதப்படுவது காணலாம். ஆங்கிலத்தில் சிஎச் வருமிடத்து க என்ற ஒலி எழுவதையும் காணலாம். சேரக்டர் என்பதுபோலும் எழுத்தில் வர அது கேரக்டர் என்றே உளைத்தல் ( உச்சரிப்பு) பெறும். இது அதிக விளக்கம் வேண்டாத திரிபு. இனிக் கழிசடை என்பது கழிசறை என்றும் திரியும். இது எவ்வாறு என்றால் சடை என்பது சறை, சரை என்று எவ்வாறும் திரிதல் கூடும். மடி ( செத்துப்போ ) என்பது மரி என்று ( அதேபொருள்) வருதல் போலுமே இது. இவ்வாறு திரிந்த சொற்களைப் பழைய இடுகைகளில் கண்டு குறித்துக்கொள்ளலாம்.


மொழி என்றால் மாறிக்கொண்டிருப்பது. என்னதான் மாறாமை போற்ற இலக்கணம் இலக்கியம் இருந்தாலும் எப்படியோ மாற்றம் வந்துவிடுகிறது. நாம் அறிந்து விலக்குமுன் இத்தகு மாற்றங்கள் இடம்பிடித்துவிடுதலும் மறைந்து இருந்த இடம் தெரியாமல் போவதும் மொழிகளில் பொது இயல்பு ஆகும்.


திருவள்ளுவர் என்ற புலவர் பழங்காலத்தில் திருவுள்ள தேவர் என்றுதான் அறியப்பட்டாராம். திருவுள்ளவர் என்பதே திருவள்ளுவர் என்று திரிந்துவிட்டதாம்! இதைச் சொன்னவர் கருத்தை நோக்கினால் வு என்பதில் வந்த உகரம்தான் ளு என்ற எழுத்தில் மாறிவிட்டதாம். திருவள்ளுவர் என்று இவரைக் குறிப்பவர்கள் பேதையர் என்பதுதோன்ற ஒரு திருவள்ளுவ மாலைப் பாடலும் உண்டு. இவர் குறிசொன்னவர் அல்லர். அதற்கான அகச்சான்றுகள் இல்லை. அமைச்சர்களாய் இருந்தோருக்குத் தேவர் என்ற பட்டம் உண்டு. இவர் இயற்பெயர் அறிய இயலாததாய் உள்ளது. சொற்றிரிபுகளே இல்லாவிடின் இதுபோலும் ஐயங்கள் இரா.


சனி, 8 மே, 2021

நல் அடிச்சொல்லுக்கு ஒத்துப்போகாத "நலி(வு)" சொல்.

 இப்போது நாம் ஒரு அடிச்சொல்லுடன் முரண்பட்ட ஓர் சொல்லமைப்பை அறிந்துகொள்வோம்.

நலம் என்ற சொல்லின் அடி  "நல்:"  என்பதுதான்.  நல் என்றாலே கெடுதல் ஒன்றுமில்லாதது என்பதுதான் நாமறிந்த,     தமிழுலகறிந்த பொருளாகும்.

நல்  +  அம் =   நலம் என்பதே சரியான புனைவு.  நலி  +  அம் =  நலம்  என்று  வந்தது என்று தமிழாசிரியர் கூறார்

ஆதியில்----  - அதாவது கல்தோன்றி மண்தோன்றாக்  காலத்து  முன்தோன்றித் தமிழ்  உருவெடுத்த  நிலையில்    -----    அ, இ,    உ   என்ற  முச்சுட்டுகளே மொழியில் சொற்களாகப்  புழங்கக்  கிடைத்த   நிலையில்  -----  மனிதன் அவனுக்குத்    தோன்றிய   கருத்துக்களை   அடுத்து  நின்றவனிடம்  தெரிவிப்பதற்கு  ,  இங்கே  என்று  குறிப்பதற்கு   அவனிடம்  இ   மட்டுமே இருந்தது.  இங்கே  என்று   சொல்ல  " இ " என்று   குறித்தாய்  !     அப்புறம்   இல்லை என்பதற்கு   இன்னொரு சொல்  வேண்டுமே,   என்ன செய்வாய்?  இந்த மாறாட்ட நிலையை  தமிழால்   விளக்க  முடியும்.  சுட்டுக் கருத்தை  ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளிலும்  காணலாம்.   ஆங்கிலம் என்ற எங்கிலோ  செக்ஸன்  மொழியில் கூடக் காணலாம்.   "ஹி"  என்பதில் வரும்  ஹ்  என்பதை எடுத்துவிட்டுப்  பார்த்தால்    இ  என்பது  இருக்கிறது.   சுட்டு   ஒளிந்துகொண்டு  இருக்கிறது.   திருடனைக்  காவலன்  பிடிப்பதுபோல்   பிடித்துக்கொள்ளுங்கள்.  மலாய்  என்ற   Austronesian (Malayo-Polynesian)  மொழியில் பார்த்தால் கூட,  டி-ஸீனி  என்பதில்  ஸி  -   இ   இருக்கிறது.   ஸானா  என்பதில்   ஆ(   அ -  ஆ - அங்கே)   என்ற சுட்டு  உள்ளது.  ஆனால் வேறு  ஒலிகளுடன் கலந்து உள்ளமைக்குக் காரணம்  அது  தோற்றகாலத்  தாயினின்று வெகு காலத்தொலைவு  பயணித்து  வந்துவிட்டதுதான்.

மாறாட்ட நிலையென்று  மேல் குறித்த நிலைக்குத் திரும்புவோம்.   இல்லை என்று குறிப்பதற்கும்  "இ"  என்றுதான் குறிக்கவேண்டும்.  இதைப் போலவே,  இல்  (  இருக்கிறது  என்று குறிக்க ) என்பதும்   இல்  (  இல்லை  என்று  குறிக்க)  என்பதும்  ஒரு  சொல்லே (  அல்லது  ஒரொலிச் சொற்களே )   இருபொருளையும்  தெரிவிக்கிறது.   இல்  என்பது இன்று இடப்பொருள் குறித்தாலும்  அதன் பண்டைப் பொருள்  இருக்கிறது  என்பதுதான்.   இரு என்ற சொல்லே  இல் என்ற அடியிலிருந்து  வந்ததுதான்.   இல் >   இரு  ஆகும்.  இதேபோல  புல்  >  புரு  ஆகும்.  மல்>  மரு ஆகும்.(  புருடன்  என்ற  சொல்லுக்கு யாமெழுதிய விளக்கத்தை   முன் வந்த இடுகையில் காண்க ).

இலத்தீன்(    maxim சட்டமுதுமொழி  )  வாக்கியம்  Ubi jusibi remedium  என்பதில்  இபி  -  என்ற சொல்லில் இகரச் சுட்டு கலந்துள்ளது. hic என்பதிலும் உளது.  இவற்றைப்  பிரித்துணர வேண்டும்.  உள்ளது  குறிக்கும் உ மற்றும் இ என்ற  சீனமொழிச் சொல்லும் இதை  விளக்கவல்லது.  இ மாய் -  இவளுக்கு வேண்டாம்  என்பதிலும் காண்க.

சிலவிடத்து  ஓரொலிச் சொல்  (ஒலியொருமைச் சொல்)  மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்க இயல்வதுண்டு.  ஒரு கதையில்  இதை விளக்கலாம்.  ஆனால் அதை இன்னொரு நாள் பார்க்கலாம்.

நல்-நலி  என்றவற்றில் உண்டான  அடிச்சொல் எதிர்மறையை  வேறு வகையிலும் விளக்கலாம்.   நலி என்பதில்  வரும் ஈற்று  இகரம் ,  இல்லை என்பதன் கடைக்குறை  எனலாம்.  அப்படிச் சொல்வதற்கும் இடம் இல்லாமல் இல்லை.

இவ்வாய்வை இடுகை இன்னொன்றில் காண்போம்.

அறிக மகிழ்க

மெய்ப்புபின்



  


வியாழன், 6 மே, 2021

அனங்கம் மன்மதன் உடலற்றோன் அனல்


முன்னுரை:

 எங்காவது ஒரு முன்மை (முக்கியம்) வாய்ந்த மனிதரைப் பார்க்கப் போகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  அவர் இருக்கும் ஊருக்குள் நுழைந்தவுடன்,  அங்கு அந்த மனதரைப் பார்ப்பதற்கு முன்னோ பின்னோ,  நமக்குத் தெரிந்தவர்கள் எத்தனை  பேர் இருக்கிறார்கள் என்று நம் கண்ணும் வாயும் மனமும் தேடத்   தொடங்கி  விடுவதுண்டு.  நமக்கிருக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கூடுமானவரை சில நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுதல் நன்று நாம் அவ்வாறு நினைப்பது இயல்புதான். அதுதான் இயல்பு என்று நாம் நினைப்பதும் சரியேயாகும்.  கொஞ்சம் தொலைவிலுள்ள நகரில் வாழ்பவரானால் அதற்காகக் கொஞ்சம் காலத்தை ஒதுக்கி வைத்துக்கொள்ளுதல் நன்மை பயக்கும்.

அணுகுதல் கருத்து:  "அண்"

"நகரை" அணுகினோம் என்றால்,  அங்கிருக்கும் மனிதர்தம்மை அணுகிச் சென்றோம் என்பதே உண்மை.  அணுகிச் செல்லாவிடில் நாம் யாருடனும் நட்புடைய நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது கடினம்.  சில சொற்கள் தமிழில் அன்பையும் அணுக்கத்தையும் காட்டுவனவாக உள்ளன.  அன்பு என்ற சொல்லே அணுக்கம் காட்டுகிறது.    அண் >  அன்;   அன்> அண். இவ்வாறு எப்படியும் அது கருத்து வளர்ச்சி பெற்றிருக்கும் திசை புலப்படுகின்றது.

காலமுன்மை

முச்சுழி ணகரத்துக்கு  இருசுழி னகரம்  காலமுன்மை உடையது.  அதைச் சுழிகளின்  எண்ணிக்கையினால் அறிந்துகொள்ளலாம். அதனால்  அன் என்ற சொல் அண்  என்பதன் முந்துவடிவம் ஆகும்.  அண் என்ற அடிச்சொல்,  அண் > அணை என்று நெருக்கத்தைக் காட்டுகிறது  எனற்பாலது  புரிந்துகொளல்  வேண்டும்.

என்றாலும்  அண் என்பதிலிருந்தே இதை விளக்கின் தெளிவு தோன்றும். அதனால்  அவ்வாறே ஈண்டுச் செயல்பெறும்.

அண் >  அன்:   இங்கு ணகர -  னகரத்   திரிபு.  (  அல்லது  னகர > ணகரத்   திரிபு எனினும் இழுக்கிலது ).

அன் + பு:  பு விகுதி. பெற்றது.  ஓர் ஈடற்ற முன்மையுள்ள பயன்பாட்டுச் சொல் இங்குத் தோற்றுவிக்கப்பட்டது. 

அன்பு உண்மையில் பண்டைத் தமிழனுக்கு அணுக்கத்தினால் உண்டான விருப்பினைக் காட்டியது என்பது இப்போது இச்சொல் ஆய்வு  தெளிவிக்கிறது.

அனங்கம்:

அன்புடன் நடந்துகொள்வதே அறிவுடைமை என்று  நம் பண்டைத் தமிழர் எண்ணினர்.  அது எப்படி வெளிவருகிறது   பாருங்கள்:

அன் +  நன்கு  + அம் >    அனங்கம்  :   பொருள்  :   அறிவு.    இது  சந்தியில்  அன்னங்கம் என்றுதான் வரும்  என்று  வாதிட்டாலும்,   இடைக்குறை என்ற வசதி தமிழில் இருப்பதால் பின்  பயன்பாட்டில் சுருங்கிவிடும்.  சொல்லாக்கத்தில் வாக்கியத்துக்குரிய இலக்கணம் புகுதற்கிடமில்லை. அன் என்பது நிலைமொழியும் அன்று;  பு என்பதோ  நன்கு என்பதோ வருமொழியும் அன்று.  இங்குக் களம் வேறு.

அன்னங்கம் >  அ(ன்)னங்கம்  >  அனங்கம்   ஆகும்.  வாதிடுவது  எடுபடாது.

அன்பில் எப்போதும் தோய்ந்து ஊறிக் கிடப்பவன்  அனங்கன்.  அதனால் அவனுக்கும் இங்கு   ஒரு பெயர் கிட்டியது.   அவன் தான்  மன்மதன். 

மன்மதன்:

   மன்மதன்  படைப்பு   என்றாலும்  பரந்து விரிந்து நிற்கின்ற பரமன் என்றாலும் சொல்லில் உள்ள இனிமையைப்  பாருங்கள்:

மன்  -   நிலைபெற்ற,   அழிவற்ற.  மாற்றமில்லாத.

மது  -   மயங்குவதைத் தரும் தேறலைத் தருகின்ற.

ம(யங்குவ)து  >   மது.   சில எழுத்துகள் விட்ட இடைக்குறை.

அன் -   அவன்.

முன்னைப்    பொருளுடன் பின்னல் உறும்  இயைபு,  இதில் தோண்டவும் வேண்டாத  துய்ய  நிலையில் கிட்டுகிறது.

உரு:

அப்படியானால்  அப்பரமனுக்கு  உடலம் உண்டோ என்ற கேள்விக்கு அச்சொல்லிலே  பதிலும்  பதிந்து வைக்கப்பட்டுள்ளதே.  எப்படி?

அன்மை + அங்கம் +  அன்

>  அன் ( மை)  +  அங்க(ம்)  +  அன்:   ( பிறைக்கோட்டுக்குள் உள்ள எழுத்துக்கள் புணர்ச்சியில் கெட்டன அல்லது மறைந்தன ).

> அன் + அங்க+  அன் =  அனங்கன். (   தோற்றம் அல்லாத வழியில் நிற்பவன், அவன் அரு.---   உரு  இல்லை ).  அரு  என்பதும் அகரத்தில் தொடங்கி   அல்(அல்லாமை)க் கருத்தையே முன் தரும்.  அ(ல்)  +  ( உ ) ரு=  அரு.  இது இருபகவொட்டுச் சொல்.

அவனுக்கு உண்மையில் உடலம் இல்லை  ஆதலின்,  அவன் பகிரும் மது  ஒரு ஆன்மிக மதுவாகும்.  எண்ணப்  போதை.

அவன் "சக்தி"  அல்லது சத்தி  என்பதோ  அணுக்கம் அல்லது  அடுத்தல்  தாராத சக்தி அல்லது ஆற்றல்.   ( சக்தி என்ற சொல் தோன்றிய விதம் )

அடுத்திட இயலாமை: " அனத்தசக்தி"

இவ்வளவு மதுவையும் தந்தவனிடம்  அடுத்துச் செல்லலாம் என்றால் முடிவதில்லை.

அன் அற்ற சக்தி >  அன் அத்த  சக்தி >   அனத்த  சக்தி.

அற்ற எனற்பாலது  அத்த  எனவாகும்.  அனத்தசக்தி  என்பது இறையாற்றல்.

சக்தி என்பது முன் விளக்கப்பட்டுள்ளது.  தன் தி  >  தன்னிலிருந்தே வெளிப்படுவது  தன் + தி >  த  + தி >  ச+ தி >   சத்தி >  சக்தி.    தி என்ற இறுதி  (விகுதி)  திரும்பி வெளிவரற்     குறிப்பு.  தகர சகரப் போலிச் சொல்.

அனல்:

அனல்  <  அன் அல்  :( அணுகுதலுக்கு அல்லாத பொருள் ).  இப் படிச் சொல்லை அமைத்த தமிழன் வல்லவன். அனல் என்ற சொல்லை அமைத்த போது அவன்  கருதிய அடிப்படைப் பொருள்  தன்னால் நெருங்க இயலாமைதான்.  தீயிலிருந்து அவனை வந்து தொடுவது எது என்ற கருத்து,  பின்புலத்து மறைவு எய்தியது.

முடிவுரை

சொற்கள் இவ்வாறு தோன்றித் தமிழ்  வளம் ஒளிர்கிறது.

அளத்தல் மிகுதி இவற்றின் தொடர்பு  பின் விளக்கப்படும்.  இணைந்திருங்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்




 


செவ்வாய், 4 மே, 2021

முகத் தடைத்துணி

இத்தனை பேருக்குக் கொரனா என்றால்

எவரும்  அணிந்திலரோ ---- முகத் தடைத் துணி?

இத்தனை பேர்கள் இறந்தனர்  என்றால்

எத்தனை பேர்கள் உண்டனர்  மருந்துகள்? -----தினமும்?


இந்திய நாட்டின் கணக்கினைப்  பார்த்தால்

யாரும் படவில்லையோ சிறு கவலை?

யாவரும் மகிழ்ந்துகூத்   தாடுதல் போன்ற

காத்தல் நினையாமை கடுந்துயர் தோன்றும்.


முகத் தடைத்துணி- முகக் கவசம்.

காத்தல் நினையாமை -   காத்தல் நினையாமையால்.*   ஆல் உருபு தொக்கது.


Admin note:   This is a new style poem.  Not a traditional one.


*Edited:  05052021  2124hrs

சனி, 1 மே, 2021

இல் எல் எல்லோன் பழமைத் தொடர்பு

 சிலுவையில் அறையப்பட்டிருந்த ஏசு பிரான், அக்கடைசி நேரத்தில் " இலோய், இலோய்,  லாமா சbaக்தனி?"  என்று கூவினார்.   இது தமிழில்"இறைவா, இறைவா, எனைக்   கைவிட்டனையோ?"  என்று பொருள்படும். இலோய் என்ற அரமாயிக் மொழியின் சொல்லுக்கு  "  இறைவன்,  கடவுள் என்பதே பொருள்.  கடவுள் என்பதை  இல்,  எல்,  என்றெல்லாம் சொல்வர்.  

இல் என்பது தமிழில் பல்பொருள் ஒருசொல்.  இதற்குள்ள பல பொருட்களில் மரணம் இல்லாத நிலை என்ற பொருளும் உள்ளது.  இறைவன்  அல்லது இறைமை,   இதற்கும்  பொருத்தமான தன்மையை உணரலாம்.

தமிழில் எல் என்ற  சொல்லும்  உள்ளது.  ஓன் என்ற ஆண்பால் விகுதி  சேர்த்து  " எல்லோன் " என்றும்  தமிழில் இச்சொல் உருக்கொள்ளும்.  எல்  என்பது  வேறு அர்த்தங்களும் உள்ள சொல் என்றாலும்,  இதற்கு   ஒளி,  சூரியன் என்ற பொருளும் இருக்கின்றது. இயற்கையைப் பழங்காலத்தில் வணங்கியவர்கள்,  சூரியனையும் வணங்கியுள்ளனர்.  சூரிய வணக்கம் அல்லது நமத்காரம் என்பது  யோக முறையிலும் உள்ளதொன்றாகும்.

இறுதல் என்பது முடிவு என்றும் பொருள்தரும்.  இதிலிருந்து இறுதி என்ற சொல் அமைந்தது என்பது உங்களிற் பலரும்  அறிந்தது.   இந்த இறு என்ற  அடிச்சொல்லினின்றே   இறைவனைக் குறிக்கும்  இறை என்ற  சொல்லும்  அமைகிறது.   இறு >  இறு+ஐ  >  இறை   ஆகும்.  இறை +  அன் என்பது  வகர உடம்படுமெய் பெற்று  இறைவன்  என்றானது : இறை  +  வ்+   அன் =  இறைவன்.

இறைவன் என்பது எல்லாவற்றிலும்  இறுதிநிலையினன் என்பதை நமக்குத் தெளிவாக்குகிறது.   

இல்  என்ற சொல்லும்  இறு  என்று  திரியும்.   இதற்கு  நேரான இன்னொரு திரிபு புல் -புரு  என்பதாகும்.   புரு>  புருடு >புருடன் .புல்>புரு என்பது  அம் விகுதி பெற்றுப்  புருவம் என்ற சொல்  அமைந்தது.   புல்லுதல் -பொருந்துதல்.  ஆகவே புருவம் என்பது கண்ணுடன் பொருந்தி நிற்கும் இடம் என்று பொருள்தரும். தரவே  புருடன் என்பது  பெண்ணுடன் பொருந்தி வாழ்வோன் என்ற  பொருளைத் தருகிறது. புரு>புரை >புரைதல் என்பது  பொருந்தி நிற்றலையும் குறிக்கும். புரைத்தல் என்பது உட்புகுதல் குறிக்கும்.  புல்> புன்>  புனர்  (  புனர்  வாழ்வு )  >    புணர்  என்பன பொருந்துதலின்  பொருள்வளர்ச்சியைக் காட்டுகிறது.   புண்  என்பது  மேல் பொருந்தி நிற்கும்  காயம்  குறிக்கிறது.  

இதுபோலும்  திரிந்தவை பல.  

இல் எல் என்பவற்றுடன்  இறு > இறை என்பன எவ்வாறு தொடர்பு  உடையவாய் உள்ளன என்பதைக்  காட்டவே சில சொற்களைக் காட்டினோம்.

பழங்கால மொழிகளுடன் தமிழுக்கு உள்ள  தொடர்புகள்பல.  

அறிக     மகிழ்க.

மெய்ப்பு பின்.