மளிகைப் பொருள்பற்றிய இச்சிறு எழுத்துப்படைப்பை, மள்ளர் என்னும் சொல்லிலிருந்து தொடங்குதல், விடயத்தை விளக்குவதற்கு எளிமைதரும் என்பது எம் நினைப்பாதலின் அவ்வாறே இவண் செய்வோம்.
மள்ளர் - சொற்பொருள்
மள்ளர் என்னும் சொல் பலவிதத் தொழிலரையும் அல்லது மக்களையும் குறிக்குமென்று நம் நூல்களின்வழி அறிகின்றோம். இவர்களாவர்: உழவர், குறவர், படைவீரர், மறவர், இளைஞர், குறிஞ்சி நிலத்து வாழ்நராகிய பொதுமக்கள் ஆகியோர் எனலாம். இவர்கள் அனைவரையும் அல்லது இவர்களில் எவரையும் இச்சொல் குறித்தற்குக் காரணம், இவர்கள் எல்லோரும் உடலால் வலிமை பொருந்தியவர்களாக இருத்தல்தான். (அதாவது உடலுழைப்பால்-- உடல்வலிமையால் பிழைப்போர்). பண்டைத் தமிழர் உடல்வலிய மக்களை இச்சொல்லால் சுட்டினர் என்று தெரிகிறது. பள்ளர் என்ற சொல்லும் மள்ளர் என்று திரிதலால் ஆய்வில் சில குழப்படிகள் தோன்றுதல் இயல்பு. எனினும் இவ்வாய்வுக்குப் பள்ளர் என்னும் சொல்லை நாம் தவிர்த்துவிடுதல் நலம். *
மள்ளல் என்ற சொல் வலிமை குறித்தலால் அதனின்று தோன்றிய மள்ளர் என்ற பலர்பால் சொல்லும் உடல்வலியோர் என்ற பொதுப்பொருள் பெறுமென்பது எளிதின் உணரப்படுவதாகும்.
அடிச்சொல் நோக்கு
இச்சொல்லின் அடிச்சொல் மள் என்பதே. இகுதல் என்பது இறங்கி வருதல் என்ற பொருளுடைய சொல். மள் + இகு + ஐ = மளிகை. மள்ளர் என்ற முன் சொன்ன மக்களிடமிருந்து இறங்கும் அல்லது உண்டாகி விற்பனைக்கு வரும் பொருள் என்று அர்த்தம் வருகிறது. இகுதல் என்ற சொல், அணியியல் முறையில் இச்சொல்லில் கையாளப்பட்டுள்ளது என்று முடிக்கவேண்டும். நீர் இறங்குதல் போலும் கீழ்வருதல் என்ற ஒப்புமை.
மள் + இ + கு + ஐ : மள்ளரிடமிருந்து இங்கு (வந்து) சேர்ந்த பொருள் எனினும் ஆம். இ - சுட்டுச்சொல், இங்கு. கு - சேர்விடம் குறிக்கும் சொல். ஐ - விகுதி.
மள்ளர் எனற்பால சொல், மள் என்று குறுகி நின்றமை, "பள்ளருடைய சேரி" என்ற சொல்தொடர் பச்சேரி என்று வந்ததுபோலுமே ஆகும். இவ்வாறு இடையில் நின்ற சொற்கள் மற்றும் எழுத்துகள் மறைந்த சொற்கள் பலவாதலின், இக்குறைவுகள் பற்றி ஒன்று விரித்தற்கில்லை.
தோற்றப்பொருண்மை மறைவு
மள்ளர் விளைத்த பொருட்களை விற்கும் கடை மளிகைக்கடை. ஆனால் இன்று இப்பொருள் தொல்காப்பியர் கூறியதுபோல் விழிப்பத் தோன்றாததாகிவிட்டது எனலாம். இன்று யார் விளைத்த பொருளாயினும் விற்கும் கடை, ஆயின் பெரிதும் சமைக்காத உண்பொருள்கள், தானியங்கள் மசாலா இன்னும் பல விற்பனை செய்வோரைக் குறிக்கும். 1
"மள்" சொற்பொருண்மை அறிதல்.
மளிகை என்ற சொல்லில் வரும் "மள்" அடிச்சொல், இத்தரத்து மக்கள் அனைவருக்கும் பொதுப்பண்பாகிய வலிமை என்ற பொருண்மையை உடையது. இவ்வலிமைப் பொருளை வல் > மல் > மள் என்ற திரிபுகளிற் கண்டுகொள்ளுக. இவற்றில் விளைந்த முழுச்சொற்களுக்கு எடுத்துக்காட்டு, முறையே 1 வலிமை, 2 மல்லன், மல்லு வேட்டி (துணி), மள்ளல் என்றவை. திரிபு செல்வழி: மள் > மளி> மளிகை. மள்ளர் என்பது மக்களைக் குறித்தபடியாலும் மள் என்ற அடியில் அப்பொருள் இன்மையாலும் மள்ளர் என்ற சொல்லமைந்த பின்னரே அவர்கள் விளைபொருள் என்பதைக் குறிக்க மள்ளர் + இ + கை > மள் + இ + கை > மளிகை என்று மீண்டும் குறுகியது. இது சொல்லாக்கத்துக் குறுக்கம். இப்படி அமைந்த இன்னொரு சொல் பச்சேரி --மேலே காட்டப்பட்டது. மளிகை என்ற சொல்லமைப்பின் பின்பு, மள் என்ற அடிக்கு மள்ளர் என்ற கூடுதற்பொருளும் வந்துற்றது அறிக. இதைச் சுருக்கமாக விளக்க, மள்ளர் > மள்ளரிகை > மளிகை எனின், ள் என்ற மெய் இடைக்குறைதலும், ரகர மெய் வீழ்தலும், இகரம் ளகர ஒற்றின்மேல் ஏறுதலும் ஆகிய எழுத்துமாற்றங்களை விளக்கவேண்டும். மளிகை, பச்சேரி முதலியவை பேச்சில் விளைந்த குறுக்கங்கள். மள்ளர் > மளி > மளிகை என்று காட்டுதல் எளிது. மள்ளரிகை என்பது உணர்விக்க எழுந்த கற்பனைச் சொல் அல்லது ஓர்ந்தமைவு.
திரிபுகள்
மள்ளரிடமிருந்து விளைபொருள்களை வாங்கிக் காயவைத்து விற்றுவந்த செட்டியை மள்ளர்காய்ச் செட்டி > மள்ளிகாய்ச் செட்டி > மளிகைச் செட்டி என்று திரிபால் குறித்து, பின் அதிலிருந்து செட்டியை விட்டு, மளிகை , மளிகைச் சாமான் என்று வரினும் மிகப்பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை. மள்ளர் என்ற சொல்லில் மாற்றமில்லை. சொல்லிறுதி ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளைத் தெரிவிப்பது தவிர அடிப்படைச் சொல்லின் அமைப்பில் உள்ளுறைவுகள் சிறுமாற்றங்கள் அடைவதால் அடிப்படைப் பேதங்கள் இல.
மள்ளி கையால் கொண்டுவந்து விற்ற உணவுப் பொருள் என்றும் விளக்கலாம்.
மள்ளி கை > மளிகை ( இடைக்குறைந்தது ள் ). அடிச்சொல் மள் என்பதே.
மள்ளர் பெண் : மள்ளி, பள்ளன் > பள்ளி, கள்ளன் - கள்ளி, குள்ளன் > குள்ளி போன்ற அமைப்பு. மக்கள் பேச்சில் உருவாக்கிக் கொள்வன. பேச்சுமொழி மிக்க விரிவானது ஆகும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
குறிப்புகள்
*..களம்புகு மள்ளர் (கலித்தொகை. 106). 3 படைத்தலைவன். (சூடாமணி நிகண்டு.) 4. இளைஞன். பொருவிறல் மள்ள (திருமுருகாற்றுப்படை. 262). 5. மருதநிலத்தில் வாழ்வோன். (திவாகரம்) மள்ளர் உழுபகடு உரப்புவார் (கம்பராமாயணம். நாட். 18). 6. குறிஞ்சிநிலத்தில் வாழ்வோன். (சூடாமணி.)
இதையும் வாசிக்க:
https://sivamaalaa.blogspot.com/2019/09/blog-post.html
1. உயிரற்ற பொருள்கள் , காய்ந்த பொருட்கள்.
அப்போதும் மள் > மளி என்பதே அடிச்சொல். ஆனால் விளக்கம் கொஞ்சம் வேறுபடும்.
( பச்சையாக இல்லாமல்)
மள்ளன் - மள்ளி. (பெண்பால்)
சில தவிர்க்கப்பட்ட விளக்கங்கள் சேர்க்கப்பட்டன. 29052021 0645. We could not resolve the error in spacing whilst editing. There may be a bug. Repeated attempts managed to make the Notes herein appear in the post.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.