அடிச்சொற்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதால் இந்தக் கொரனா என்னும் முடிமுகிக் காலத்தில் ஒரு பெருநலம் உண்டு என்பது சொல்லாமலே புரியக்கூடியது ஆகும். நம் ஆய்வு " கு" என்பதிலிருந்து தொடங்கவேண்டும்..
மன்னன் மதுரைக்குப் போனான்.
என்னதான் அவன் மன்னனாக இருந்தாலும் மன்னன் தான் மதுரைக்குப் போகவேண்டி நிகழும். இதற்குக் காரணம், மதுரை எந்தக் காரணங்கொண்டும் மன்னனைத் தேடிப் போகாது. இது ஓர் அப்பட்டமான, சொல்லவேண்டாத உண்மை. இதில் மன்னனை மதுரையுடன் சேர்த்துவைக்கும் தமிழ்ச்சொல் "கு" என்பதுதான். தமிழில் கு என்பது தனிப்பெயர்ச் சொல்லாகவோ வினைச்சொல்லாகவோ இல்லாமல், உருபாக உள்ளது. உருபுகளெல்லாம் இடைச்சொற்கள். அவை தனிச்சொற்களாக எந்தக் காலத்திலோ வழங்கியது. அதைக் கண்டுபிடிக்கும் அளவைகளும் கருவிகளும் இப்போது இல்லை, இனிமேல் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புவோம்.
கு என்ற சொல்லை ஒரு சொல் என்று தகுதிதந்து சொல்லத் தமிழ்மொழி இயலார் தயங்கினாலும் ஆய்வின் பொருட்டு, அதை இங்கு நாம் சொல்லென்றே குறிப்பிடுவோம். மொழியின் இலக்கணம் சொல்லென்று விதந்து சொல்வது வினைச்சொற்களையும் பெயர்ச்சொற்களையுமே. இடைகளையும் உரிகளையும் அவ்வாறு புலவர் குறிக்க விரையாமைக்குக் காரணம், அவை தனியாக நின்று பொருளுணர்த்துவன அல்ல. மொழியெனப்படுவதே பொருளுணர்த்து கருவியாகலின், தனித்து நின்று பொருள் தூக்கும் திறத்தின அல்லாதவற்றைச் சொல் எனல் எற்றுக்கென்பது அவர்கள் கருத்து. அந்தக் கருத்து இலக்கணத்துக்குச் சரி, ஆய்வுக்கு சரியில்லை ; ஆதலின், நாம் கு என்பதனைச் சொல்லென்றே குறிக்கவேண்டும். பல இலக்கணியர் விதந்து கூறா விடினும் கு என்பது போல்வனவற்றையும் சொல்லென்றெ குறிக்கவேண்டிவந்தது. அது வேறு குறிப்பின்மையினால்.
கு என்ற சேர்வு குறிக்கும் பண்டைக் கிளவி, நீண்டு குல் என்று ஆனது, பின் இன்னும் சொற்களைத் தோற்றுவிக்கக் குள் என்றுமானது. அப்புறம் குழ் என்றுமானது. இப்போது இவற்றிலுள்ள சேர்வுக் கருத்துகளைக் காண்போம்.
குழ் > குழாம். ( அம் இறுதி) குழ் > குழ + அம் > குழாம்.
குழ் > குழை ( ஐ ) குழைக்கப்படுவது சேர்ந்திருக்கும்.
குழ் > குழு ( உ)
குழ் > கூழ். ( மாவு நீரில் வேவித்துக் கூழாவது).
இனிக் குவி என்ற சொல்லில் சேர்வுக் கருத்தை கண்டுகொள்ள முடிகிறதா என்று பாருங்கள்.
கு : குடு என்பதில் சேர்வுக் கருத்து உள்ளதா? கூடு என்பதில்?
இவற்றுள் குலாலன் என்பது அழகான தமிழ். குல் - சேர்த்தல். ஆல் - கருவி யுருபு. அன் ஆண்பால் விகுதி. எல்லாம் சேர்த்துக் குயவனுக்கு மறுபெயராய் அமைந்துவிட்டது.
பற்பல சொற்கள். அவற்றை அவ்வப்போது கண்டு இன்புறுவோம்.
அறிக, மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
பொருள்:
எற்றுக்கு - எதற்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.