Pages

சனி, 15 மே, 2021

தமிழ் சமஸ்கிருத மொழி இயல்புகள்.

மொழிகளைப் பற்றிய  சிந்தனை  தெளிவு பெறும் போது,  இன்று உள்ள இந்திய மொழிகள் பலவும் இந்தியத் துணைக்கண்டத்திலே தோன்றிப் பண்பட்டவை என்ற அறிவு திறம்பெறும். ஒரு மொழியைப் புது மொழி என்றால் அது பழைய மொழிகள் என்று அறியப்பட்ட மொழிகளுடன் ஒப்புநோக்கி அவ்வாறுசொல்கிறோம் என்று பொருள்.  சிலமொழிகள் பன்னெடுங்காலமாய்ப்  பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் இருமருங்கிலும் ஒருங்கு திகழ்ந்து வந்துள்ளன என்பதும் உண்மையே.  அத்தகைய மொழிகளில் தமிழ் முன் வரிசையில்  நிற்பதாகும்.  பண்டைக் காலத்தில் எழுத்து மொழி பெரும்பாலும் செய்யுளாகவே இருந்தது.  செய்யுளே இலக்கியம் என்று போற்றப்பட்டது.  எழுத்தில் வந்தவெல்லாம் பெரும்பாலும் கவிகளேயாம்.  உரைநடை என்பது அக்கவிகட்குப் பொருள்கூறு முகத்தான் ஏற்பட்டவை.  இவற்றுக்கு ஏற்பட்ட விளக்கங்களைத் தாம் உரை என் கின்றோம்.  இக்காலத்தில்தான் உரைநடை செய்யுட்சார்பின்றி தனித்தன்மை பெற்றுக் கனிந்துள்ளது. 

இன்று கிடைத்துள்ள தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்,  ஒரு பிராமணரால் இயற்றப்பட்டதென்று  தமிழ் ஆய்வறிஞர் இப்போது நம்புகின்றனர்.  அவருக்கு முன் இலக்கணம் எழுதியவராகக் குறிக்கப்பெறும் அகத்தியனாரும் பிராமணரே என்றனர். அவ்வாறாயின் தமிழைப் பிராமணர்கள் எழுதியும் பேசியும் வந்த மொழி என்றே  முடிபுகொள்ளுதல் வேண்டும்.  இதைத் தேவநேயப் பாவாணர் வலியுறுத்த,  மறைமலையடிகள் ஒத்துக்கொண்டார் என்று அறிவோம்.  இதற்கெதிரான கருத்துடையவராய் இருந்த கா. சுப்பிரமணியப்பிள்ளை,  இவர்களின் முடிபு கண்டு மலைவு கொண்டார் என்பர்.  இதனை இப்புலவன்மார்தம் நூல்களின் வாயிலாய் அறிக.

சமஸ்கிருத மொழியில் இராமாயணம் பாடிய மூத்த பெருங்கவி வால்மிகி முனிவர்.  இவர் பிராமணர் அல்லர்.  இவரைப் பரையரென்பர்.  காட்டுவாசி, வேட்டுவத் தொழிலர் என்றும் கூறுவர்.   மகாபாரதம் பாடிய வியாசப் பெரும்புலவர் மீனவர் என்பர்.  சமஸ்கிருத இலக்கணம் எழுதிய பாணினியோ ஒரு பாணர்  -  என்றால் இவரும் பரையரே.  இவர்கள் அனைவரும் இற்றை நிலையின்படித் தாழ்ந்தவர்கள் என்று எண்ணப்பட்டாலும்,  அவர்கள் எழுதிய - பாடிய காலங்களில் அவர்கள் மேல்நிலையில்தான் இருந்தனர்.  இவர்களின் அக்கால மேலாண்மையை,  எம். சீனிவாச ஐயங்காரின் தமிழர் பண்பாடு பற்றிய ஆங்கில நூலில் கண்டு தெளியலாம்.  தமிழ் இலக்கியமும் இதை நன்கு காட்டவல்லது.  ஒரு வள்ளுவன் அரசனாய் இருக்க, அவன்முன் ஒரு பிராமணன் கவிஞனாய் நின்று பாடிப் பரிசில் பெறும் காட்சியைப் புறநானூறு தெரிவிக்கிறது.  பரையர் என்போர்,  மன்னனின் ஆயுதக் கிடங்குக்கு அலுவல் அதிகாரியாய்ப் படையினைப் போருக்குக் கிளப்பும் முதல் அதிகார  அழைப்பு விடுக்கும் நிலையில் இருந்ததையும் தமிழிலக்கியம் காட்டும்.  இவற்றையெல்லாம் நாம் பலமுறை எழுதியுள்ளோம்.  ஆகவே சமஸ்கிருதம் பரையர் புழங்கிப் பாராட்டிய மொழி என்பதில் ஐயமில்லை. 

இதில் வியக்கத் தக்கது என்னவென்றால்,  இம்மொழிகளைக் கொண்டாடிப் போற்றியவர்கள் இப்போது தம் நிலைகளில் சற்று மாறியுள்ளனர் என்று சொல்லவேண்டியுள்ளது.  இதனை மேலும் பின்னொருகால் விளக்குவோம்.

நூதனம் என்ற சொல்லை நாம் முன்னர் விளக்கியுள்ளோம்.  அவற்றை இங்குக் காணலாம்:



மொழிகளின் ஒரு சில  ஒலியொற்றுமைச் சொற்களின் அடிப்படையில் ஆரியர் என்போர் வந்தனர் என்பது  வெள்ளையர் ஆட்சியில் மக்களிடைப் பிளவுகளை உண்டுபண்ணுதற்காக உண்டாக்கிப் பரப்பப் பட்ட ஆதாரமற்ற தெரிவியல் ஆகும் (  தெரிவியல் -  தியரி).  லாத்வியாவில் வழங்கிய மொழியிலிருந்து இலத்தீன் மொழி அமைக்கப்பட்ட காலத்தில் தென்னாட்டிலிருந்து மொழிப்பண்டிதர்கள் உரோம் சென்று ஆங்கு மொழியை வளப்படுத்த உதவியுள்ளனர். இதனை வரலாற்றறிஞர் எடுத்துரைத்துள்ளனர்.  மேலும் சுமேரியா முதலிய இடங்களில் தமிழ் சமஸ்கிருத மொழிகள் பரவி இருந்தன என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்..  சமஸ்கிருதம் என்பதும் தென்னகத்தில் வளப்படுத்தப்பட்ட மொழியே ஆகும்.  ஆரியர் என்போர் யாரும் வரவில்லை. வெளிநாட்டினர் வந்துள்ளனர். இவர்கள் "ஆரியர்" அல்லர்.   ஆர் என்பதும் தமிழில் மரியாதை காட்டும் ஒரு விகுதியாகும்.  ஆர்தல் என்ற சொல்லும் நிறைவு குறிக்கும் சொல்.

நூதனம் முதலிய சொற்கட்கு நாம் எடுத்தியம்பிய ஆய்வினை நன்கு புரிந்துகொண்டு வரலாற்றினை நன்கு படித்து அதில் புகுந்துள்ள சுழல்களை
அறிந்துகொள்ளவும்

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.