ஆட்டுக்கல் என்ற கற்கருவி இப்போது பெரிதும் பயன்படுவதில்லை. எங்கள் வீடுகளிலும் ஆட்டுக்கல்கள் இருந்தன. அவற்றைக் காசுகொடுத்து அப்புறப்படுத்த வேண்டியதாகிவிட்டது. ஆட்டுக்கல்லில் அரைத்து (ஆட்டி) இட்டிலி தோசை முதலியன சுட்டால் அவை நன்றாக இருக்கும். தோசைக்கல்லிலும் ஊற்றும் மாவு பிடிக்காமல் தோசை அழகாக வரும். மின்குழைகளில்1 அரைத்து வரும் மாவில் உண்டாக்கிய தோசை இட்டிலிகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது எம் கருத்து. நீங்கள் இதில் மாறுபடக்கூடும்.
ஆட்டுக்கல் பற்றிச் சொல்லும் இடுகை; விரும்பினால் படித்தறிக..
https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_7.html
இரும்பு பெரிதும் பயன்பாட்டுக்கு வராத முன் காலத்தில் பல கருவிகளும் கல்லினால் ஆனவையாக இருந்தன. கத்திகள் இவ்வாறே கல்லினால்தான் வடிக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்தன. கல்லினால் ஆன கத்தியைப் பயன்படுத்தத் திறமை சிறிது தேவைப்பட்டிருக்கும். அக்காலத்தில் அதற்கு அருந்திறல் உடையோர் அக்கருவியைக் கையாண்டிருப்பர். சொல்லாய்விலிருந்து, கல் + தி > கற்றி > கத்தி, அல்லது, கல் > கல்தி > கத்தி ( இடைக்குறை "ல்" ) அல்லது கல் > க (கடைக்குறைச் சொல், க+தி > கத்தி என்று கத்திக்குப் பெயரமைந்திருப்பதனால் , கத்தி கல்லால் முன் அமைந்திருந்தது எனற்பாலது தெளிவாகிறது. ஆட்டுக்கல், தோசைக்கல் என்று கல் கருவிகளைக் குறிப்பதிலிருந்து கல்லின் பேராதிக்கம் தெளிவாகிறது. இப்பெயர்கள் நாம் வாழும் இந்நாள்வரை மாற்றம் ஏதுமின்றி நம்மை வந்து எட்டியுள்ளன என்பதும் உன்னுதற் குரியது ஆதல் உணர்க. ஆதிக்கம், என்பதோ, ஆதி + கு + அம் > ஆதிக்கம் என்று அமைந்தது ஆக்கத்தின்போதே ஒரு மேலாண்மை அமைந்துவிட்டால், அதை ஆதிக்கம் என்று சொல்லவேண்டு மென்பதுதான் சொல்லமைப்பின் தரவு ஆகும். பின்னடையில் நுண்பொருள் வேறுபட்டிருப்பதும் பல சொற்களில் தெளிவாகிற உண்மையாகும்.
மேலும், கல் என்பதே கரு என்று திரியும் அடிச்சொல்லுமாகும். கல்> கர்> கரு> கருவி எனக்காண்டல் எளிது. கற்பாறைகள் பெரும்பாலும் கருப்பாய் இருந்தன. ஆகவே கருப்பு என்னும் நிறப்பெயரும் அதனில் தோன்றுதல் இயல்பு ஆகும்.
கல்லுதல் என்ற வினைச்சொல் தோண்டுதற் பொருளது. தோண்டும் செயலும் கருவிகளின் துணைமை வேண்டுவதாம்.
கல்குலஸ் (கணிதம் ) என்பது கல்குலுக்கு என்பதனடித் தோன்றிற் றென்பர்.
கருவி, காரணம், காரியம் என்ற சொற்கட்கு கல் - கரு என்பதே அடிச்சொல். மண் தோன்றுவதற்குக் காரணம் கல் என்று தமிழர்கள் கருதினர். இது அறிவியற்படி சரியான கருத்தா, அன்றா என்பது தொடர்பற்ற கேள்வி. தமிழர்கள் அப்படி நினைத்தனர், அதிலிருந்து சொல்லை அமைத்துக்கொண்டனர் என்றே முடிபு செய்தல் கடன். அவர்களுக்குத் தோன்றிய கருத்தை அடிப்படையாக்கித்தான் அவர்கள் சொல்லாக்கம் செய்வர். மற்றவர்க்குத் தெரிந்தவை மேலானவையாயினும் அவ்வறிவு அமைப்புக்குத் தொடர்பு அற்றதாகிவிடும். எடுத்துக்காட்டாக, அம்மை நோய் அம்மனின் ஆத்திரத்தால் அவள் ஏற்படுத்துவது என்று தமிழர் நினைத்து (நோயை ) அம்மை நோய் என்றனர். இற்றை அறிவியலார் கருத்துக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அறிவியலைச் சேர்க்கும் இயைபின்மை தோன்றுமிடத்து அதைக் கொணரலாகாது.
மனிதனின் கருவிகள் பலவும் கல்லாகவே இருந்ததாலும், அவனுடைய காரணமும் காரியமும் கல்கொண்டே நடைபெற்றதாலும், கல் என்ற அடிச்சொல்லிலே அவை அனைத்தும் அவன் அமைத்துக்கொண்டான். கல்லிலேகூட ஆண்டவனைக் கண்டு பிடித்திருப்பான். காரணம், கல்லினுள் தேரைக்கு அவர் எப்படியோ உணவு நாளும் ஊட்டிவிடுகிறார். கல் குடைவுகள் அவனுக்கு வீடுகளாகப் பயன்பட்டன. கொடிய விலங்குகளிடமிருந்து அவனைக் காத்தன. நீர் தொலைவாக நின்ற உயர்ந்த கல் மலைகள் அவனுக்குப் பாதுகாப்பாக இருந்திருக்கும். இவற்றையெல்லாம் சிந்தித்து உணர்தல் சொல்லாய்வார் கடன்.
கல் ஆயுதம் ஆட்டுக்கல்லாகவும் அம்மிக்கல்லாகவும் நாம் வாழும் காலம் வரை வந்துள்ளன என்றால் கல்லாதிக்கத்தை நன்கு கருதுக.**
ககரம் சகரமாகும். கல் > கத்தி> கத்திரி; கத்தி எடுத்துச் சண்டை போட்டு ஆட்சி அடைந்தவன் கத்திரியன் > சத்திரியன் என்று கண்டுகொள்க. ககரம் சகரமானதைக் கேரலம்<> சேரலம் என்ற தொடர்பில் அறிக. சேரல் > சேரலம் > கேரளம். க - ச திரிபுகள் பல மொழிகளில் உண்டு. Not language specific.
இன்னும் அறிய இதைப் படிக்கலாம்:
சத்திரியர்: https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_82.html
ஆட்டுக்கல்லுக்கு வருவோம். அதற்கு இன்னொரு பெயர் குலைக்கல் என்பது. ஆட்டுவது மாவை அரைத்துத் தருகிறது. குலைக்கல் அரிசியைக் குலைத்து ( அதாவது அரைத்து) மாவுக்குழம்பாக்குகிறது.
கல் என்பதும் குல் என்பதும் தொடர்புடையவை. கலை > < குலை. ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கும் ஒன்றைக் குலைப்பது, அதைக் கலைப்பது ஆகும். இவற்றினின்று கல் - கலை, குல் - குலை என்பவற்றை அறிந்துகொள்ளலாம்.
இதன் மூலம் ஆட்டுக்கல்லுக்கு இன்னொரு பெயர் அறிந்தோம். இனி ஒரு கேள்வி. ஆட்டுக்கல்லை மின் குலை என்றோ மின் குலைக்கல் என்றோ சொல்லலாமா. உங்கள் விடையைப் பதிவு செய்யுமாறு அழைக்கின்றோம்.
அறிக நன்றி.
மெய்ப்பு பின்னர்.
குறிப்பு:
1. மின்குழை - மின்னாற்றலினால் மாவு
குழைத்துத் தரப்படுவதால்
இப்பெயர் கையாளப்பட்டது.
இவ்விடுகையின் ஒரு பகுதி ஒரு சிறு
திருத்தத்தின்போது அழிந்தது. அது மீட்டுருவாக்கம்
செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.