வசூல் என்ற சொல்லைச் சில முறைகள் கவனித்துள்ளோம். இதைத் தமிழிலே சில வழிகளில் அணுகலாம். அதிலொன்று அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளது. இதை நன்கு அறிந்துகொள்ள நாம் ஒரு 150 ஆண்டுகளாவது பின்னோக்கிச் சென்று அன்றிருந்த சூழ்நிலைகளில் உட்புகுந்து சிந்தனையில் மூழ்கித் தெரிந்துகொள்ளவேண்டும்.
வந்தான். வர்ரான்( பேச்சுமொழி) என்பவற்றிலெல்லாம் வ என்பது வருவதைக் குறிக்கும். அதுபோலவே வசூல் என்பதிலும் வ ~ என்ற முதலெழுத்து வருவதையே குறிக்கும். இது மிக்கப் பொருத்தமுடையது என்பதை நீங்கள் அறிவீர்கள். வரும் தண்டல் அல்லது கொடுபொருள்தான் வசூல். இது பெரும்பாலும் பணமாக இருக்கும். பிறபொருளாகவும் இருக்கும். வரி என்பது ஒவ்வொருவரிடமிருந்தும் வரப்பெறும் தொகை. அதுபோலவே இதுவும். வரு>வரி.
சூல் என்பது கருக்கொள்தலையும்** குறிப்பது. ஒரு மாதின் உடலில் உள்வந்தது தான் சூல். அது எப்போதும் உள்ளிருக்கும் நிரந்தர உறுப்பன்று. வந்து கொஞ்ச நாளில் வளர்ந்து வெளிப்போந்து பிறந்துவிடும். ஆகவே வரும் தொகையைச் சூல் என்று குறிப்பிடுவது மாதின் சூல் போல் உள்வந்தது என்று அணிவகையாகக் குறிப்பிட்டு, அதற்கு ஒப்புமையாக "வசூல்" என்ற சொல்லை விளக்கலாம். அவ்வாறு விளக்குவதில் தவறு ஏதும் இல்லை. அதுவும் ஒரு விளக்கம்தான்.
ஆயின், தமிழில் சூலுதல் என்பது ஒரு வினைச்சொல். அதற்குத் தோண்டி எடுத்தல் என்றும் பொருள். இன்னொரு பொருள் கர்ப்பம் கொள்ளுதல். பெரும்பாலும் பணத்தினைத் தவலையில் போட்டு புதைத்து வைத்திருந்து பின் தோண்டியெடுப்பது ஒரு நூறு ஆண்டுகள் முன்வரை இருந்த வழக்கம். அப்போது வங்கி என்னும் பணவகங்கள் இல்லை ( சிற்றூர்கள் அதற்கடுத்த வட்டாரங்கள்). நேற்றுவரை வங்கியில் பணம்போட்டு வைத்தல் ஒரு வழக்கமாய் இருக்கவில்லை. தவலைக்குள் போட்டுப் புதைத்து வைத்து எடுத்தலே வழக்கம் .(" புதையலெடுத்த தனம்" ). அரசினர் அதை வரி வாங்கும்போது தோண்டி எடுத்துக்கொண்டு போவதே நடந்த நிகழ்வுகள். இப்படி எடுத்தவை " வசூல்" - வருசூல் என்பதை உணர்க. உண்மையில் ருகரம் தேவையில்லை. வரு > வந்தான் என்ற வினைமுற்றிலே வருதற் குறிக்க ரு இல்லையே. தமிழின் இயல்பு. புரிந்துகொள்ளாமை தமிழின் குற்றமன்று.
இப்போது தோண்டி எடுக்கவில்லைதான். அதற்காக, பழைய சொற்களில் திருத்தம் செய்யவேண்டுமென்றால், மொழியையே ( எல்லா மொழியையும்) மாற்றி அமைக்கவேண்டும். எல்லா மொழிகளிலும் பழைய சொற்களைப் புதிய சூழ்நிலைகளுக்குப் பயன்படுத்தும் நிலை உள்ளது என்று ஆய்வில் தெரிகிறது. ஒரு வண்டியின் குதிரைவேகம் (ஹோர்ஸ்பவர்) என்று கணக்கிடக் குதிரைகளைக் கட்டி இழுக்கவேண்டாமே! நாலடித் தொலைவு என்றால் அது உங்கள் காலடியைக் கணக்கிடுவதன்று.
வசூலிலே : இன்னும் உள்ளது. இன்னொரு நாள் சந்தித்து அளவளாவுவோம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
அடிக்குறிப்பு:
மேலும் அறிய:
https://sivamaalaa.blogspot.com/2017/03/vasool.html
சூலுதல் ( வினை அடி: சூல் ) பொருள்:
குடைதல், தோண்டுதல், அறுத்தல், கருவுறுதல்.
இன்னுமிரு சுவைதரு ஆய்வு இங்குக் காண்க:
சூதும் வாதும்: https://sivamaalaa.blogspot.com/2019/07/blog-post_21.html
சூது: https://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_25.html
இதுவும் சமர்ப்பணம்:
https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_76.html
** கருக்கொள்தல் இதில் கொள்தல் - கோடல் என்று சந்தியில் வரும். அம்முறை இங்குப் பின்பற்றப்படவில்லை. புரிந்துகொள்ளுதல் கடினமாகுமென்பதால்.
மெய்ப்பில் சில திருத்தங்களும் மாற்றங்களும்
செய்யப்பட்டன. 01062021 0438
நோய்க்கு இடங்கொடேல் என்பது நம் பாட்டியின் வாக்கு. முகக் கவசம் அணிந்து
மனித இடைத்தொலைவு கடைப்பிடித்து நலமடைவோம். யாவரும் நலம்பெற
எங்கள் வேண்டுதல். உலகம் உய்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.