மந்திரம் என்ற சொல் இந்தியாவின் பலமொழிகளிலும் வழங்கும் சொல். இச்சொல் தமிழிலும் வழங்குவதாகும்.
முன்னர் இச்சொல்லைத் தமிழாசிரியன்மார் ஆய்ந்துள்ளனர். அவர்கள் கண்டுபிடித்துச் சொன்ன விளக்கம் வருமாறு.
இதற்குப் புலவர் சிலரிடை ஏற்பட்ட மறுப்பில் உள்ளீடு ஒன்றுமில்லை. இரு சொற்கள் மன் திரம் என்று புணர்க்கப்படின், மன்றிரம் என்று வரவேண்டுமாதலால், மந்திரம் என்று வருவது தமிழன்று என்று மறுப்பு விடுத்தனர். ஆனால், பின்+தி> பிந்தி, முன்+தி > முந்தி எனச் சொற்கள் தமிழில் அமைந்துள்ளதனை அவர்கள் மறந்துவிட்டனர். மான் என்ற அடிச்சொல் மன் என்பதன் நீட்சி. அது தன் என்ற இறுதியைப் பெற்று, மாந்தன் என்று அமைதலையும் மான்றன் என அமையாமையும் காண்க. மேலும் மன் + தி என்று புணர்க்கப்பட்டு, மந்தி என்று வந்ததன்றி மன்றி என்று வரவில்லை. மந்தி எனின் மனிதன் போன்றது என்பது பொருள். மேலும் சொல்லாக்கம் வேறு, வாக்கியம் அமைத்தல் வேறு. மான் தன் என்பவற்றில் வருமொழி நிலைமொழி என்பன இல்லை. இரு சொல் துண்டுகளே உள. மான் இங்கு மன் என்பதன் திரிபு அல்லாமல் தனிச்சொல் அன்று. தன் என்பதும் த் அன் அல்லது து அன் என்ற இடைச்சொற்களின் புணர்வு ஆகும். இவை வருமொழி ஆகா. இவை பற்றி முன் எழுதியுள்ளமையால் பழைய இடுகைகள் காண்க. முன் கூறியவற்றை இன்று மீண்டும் எழுதத்தேவை இல்லை.
மான் என்பது விலங்கு அன்று, மன் என்ற வினையின் நீட்டம். அது மன்னுதல் என்ற வினையினின்று போந்த கரு வடிவம். உருவுள்ளது போல இருப்பினும் இடைவடிவம் , அமைந்துகொண்டிருக்கும் ஆகாவுரு. தன் என்பதும் சிதறல்கள் கூட்டு.. கல்லின் தெறித்த சில்கள். இவை எவ்வாறு இறுதியுருப் பெறும் என்பதே நம் முன் இருக்கும் கேள்வி. இவற்றுக்கு இலக்கணம் இல்லை.
மேலும் எந்தப் பொருளுமின்றி வெறும் இடுகுறிகளாகவும் சொற்களை அமைக்கலாம் ஆதலின் குறித்த மறுப்பு வாதங்கள் பொருளற்றவை. டிங் டாங்க் என்று சொல்லமைக்கலாம். ஒலிக்குறிப்புச் சொல். டி என்பது மொழிமுதல் ஆகாதென்பதால் திங்குடாங்கு என்று மாற்றிக்கொள்ளுமளவு தான் செல்லலாம்.
இனி மந்திரம் என்பது இன்னொரு வகையிலும் அமையும் என்பதால் இஃது ஓர் இருபிறப்பி ஆகலாம். தொடக்கத்தில் மந்திரங்கள் வரும் தொல்லைகளை மடித்துத் திருப்பிவிடுதற்காகவே ஓதப்பட்டன. தொல்லைகள் மடிந்து திரும்புவதால், அல்லது மடிந்து மீண்டுவராமல் அங்கே நின்றுவிடுதலால், மடிந்து இரும் > மடிந்திரும் > மடிந்திரம் , இது இடைக்குறைந்து ம(டி)ந்திரம் > மந்திரம் என்றும் வரும். செய்த பில்லி சூனியம் முதலியவை மீண்டு வந்து தாக்காமல் போன திசையிலே இருந்திடவேண்டும். இதற்காகவே மந்திரங்கள் ஓதப்பட்டன -- வேதகாலத்தின் முன்பே.
இதுபோலும் சொற்கள் மக்களால் அல்லது மந்திரம் சொன்னோரால் நாளடைவில் அமைப்புற்றவை. புலவர்க்கு இங்கு வேலையில்லை. இறக்கும் நேரத்தில் மருத்துவர் வருவதுபோல, விளக்கும் காலத்தில்தான் புலவர் வந்து சேர்வார். அதுவரை ரீம் கிரீம் என்பவையே ஆட்சி செய்யும்.
ஆதலால் முன் சொன்ன சொல்லமைப்புடன் இன்னொரு வழியிலும் அது விளக்குறும் என்று முடிக்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்பு.
அடிக்குறிப்பு:
(1) மன்+ திறம் : இதில் முன்னுதல் என்பதே மன் என்று திரிந்து, மன்+ திரம் என்று புனைவுண்டு, மந்திரம் என்ற சொல் அமைந்தது என்பார் தேவநேயப் பாவாணர். முன்னுதல் என்றால் ஓர் எண்ணத்தைத் தலைக்குள் முன் கொண்டு வருதல். மேற்கூறிய மன்னுதல் ( நிலைபெறுதல்) என்பதும் ஓரளவு ஒப்பமுடிந்த கருத்தேயாம்.
(2) மந்திரித்தல் - வினைச்சொல். மந்திரித்த தகடு, தாயித்து என்பது வழக்கு. மந்திரித்தல் - மன்னும்படி திரித்தல்.. ஒரு நலம் நிலைநிற்கும்படி திரித்தல். ஒரு தீமை மடியுமாறு திரித்தல், மடிந்து நிற்க அல்லது மடங்கிடத் திரித்தல். நூலும் திரித்துக் கட்டப்படுவதுண்டு.. ஆகவே மடிந்திருக்கத் திரித்தல் சுருங்கி மந்திரித்தல் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.