விசாரணை என்ற சொல்லை இன்று சிந்திப்போம்.
ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு விசாரணை செய்தலை "கைந்நாற்காலி விசாரணை" ( armchair investigation ) என்று சொல்வதுண்டு. விசாரணை என்றால் விசாரிப்போன் அல்லது விசாரிப்போர் விரிந்து சொல்லுதல் வேண்டும். பரவலாகச் சென்று பல இடங்களிலும் கேட்டறியவேண்டும். இது விசாரணை என்ற சொல்லின் மூலமாக நாமறிவதாகும். இன்று அலுவலகங்கள் கொள்ளும் பொருள்: சான்றுகளைத் தேடிப் பிடித்துப் பதிவிடுதல் என்பதாகும். இந்தப் பொருள் சொல்லமைப்பில் இல்லை. வழக்கில் உணர்ந்துகொள்ளப்படுவதாம்.
விரி > விய > வியா > விசா.
விர் > விரி ஆதலின், விர் > விய் என்பதுணுர்க. பண்டைக் காலத்தில் விற்பனை செய்தோர் பொருளைத் தொலைவில் கொண்டு சென்று பரவச் செய்து அதற்கு மாற்றுப் பண்டங்களைப் பெற்றதனால் விய் என்பது பரவற் கருத்துடன் தொடர்புற்றதே. வில் என்பது எழுத்தளவில் உள்ள அடிச்சொல் என்றாலும் விய் என்பதே இன்னும் பேச்சில் உள்ளது. " காசுக்கு விய்யி" என்று பேசுவதைக் கேட்டிருப்பீர். விய் என்ற அடிச்சொல்லை அகர ஆதிகள் தனியாகப் பதிந்து பாதுகாக்கவில்லை என்றாலும் அது பல சொற்களில் அடியாகவே உள்ளது.
விர்> வில்: ரகர லகரப் போலித் திரிபு.
விர் > விய் என்பது சொல்லியலில் இயல்பான திரிபு..
எழுதி வைக்காமல் போனது பேச்சில் வாழக்கூடும். அதை ஒதுக்குவது மடமை. ஒதுக்கி வைத்தாலும் சொல்லாய்வில் அது மீட்டுருவாக்கம் பெறும்.
வியன் என்பது தமிழில் விரிவு என்று பொருள்படுவது.
விரிநீர் வியனுலகு.
கடலால் சூழப்பட்ட விரிந்த உலகம்.
வியத்தல் : விய. ஒரு காணாத பொருளைக் கண்டவுடன் கண்ணிமைகள் விரிந்துவிடுகின்றன. மனமும் விரிவு கொள்கிறது. அதனால் வியத்தல் என்பதோர் அருமையான சொல்லாகும்.
விய(ப்பு) > வியப்பித்தல் : அதிசயிக்கும்படி செய்தல்.
வியப்பு என்பது மனத்துள் விரிவுகாண்பதைக் குறிக்கிறது.
பி என்பது பிறவினை விகுதியாகும்.
ஒருவனை வேலை ஏவுகையில் குரல் ஒலி விரிந்து சென்று அவனை எட்டுகிறது.
வியம் > வியங்கோள். அழைத்தல்.
வியம் > வியமம் : துக்கம் ( நிகழ்வு கேட்டு அதனால் துயர் பரவுகிறது ). பொறாமை: பொறாமையும் இவ்வாறு பரவலாகக் கூடியது. பாராட்டு: ஒருவர் இன்னொருவரைப் பாராட்டுவதும் இவ்வாறு பரவத் தக்கது.
வியர்வை என்பதும் பரவலாக உடலில் வெளிப்படும் தணிப்பு நீர்.
வியல் = அகலம்.
விரிந்து செல்வது சிலவேளைகளில் வேறுபடும். ஆகையால் :
விய > வியவு: வேறுபாடு.
விய > விய + ஆய + அம் = வியாயம் >வியாசம். விரிந்து வரையப்படும் கட்டுரை.
விய + ஆக்கிய + ஆன + அம் = வியாக்கியானம் : விரித்துரை. அதாவது விரிவாக்கி ஆனது. இச்சொல்லில் ஆக்குதல் என்ற வினையின் எச்சம் இருமுறை வந்து சொல் நீண்டது.
இன்னும் பல.
இப்போது விசாரணைக்கு வருவோம்.
விய > விச + ஆர் + அணை = விசாரணை. ( விரிந்து சென்றறிதல் ).
"விரிந்தறிதல் " அல்லது "விரிந்தெடை " என்றொரு சொல்லைப் படைக்கலாம். எடு ஐ = எடை .எது நன்று என்பது நீங்கள் கூற வேண்டும்.
(விர் ) > (விய்).
பிழைகள் புகின் திருத்தம் பின்.
Reviewed : 12.2.2019