Pages

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

நெய்யும் நேசமும் நட்பும் நடுப்பகுதியும். பொருந்துமா?

நெய்யிலிருந்து பல பலகாரங்களைச் செய்ய அறிந்துள்ளோம்.  நெய்யிலிருந்து என்றால் அதில் தொடங்கி,  அடுத்து மாவைப் போட்டு, அடுத்து உப்பை இட்டு, அடுத்து இனிப்பினை இட்டு........ ஆகவே இருந்து என்ற சொல் தொடக்கத்தையே காட்டும்.  இருந்து என்பது அசைவற்று வைகிய நிலை; அசைவு தொடங்கியவுடன்  வரை என்பது எல்லை அல்லது முடிவு ஆகும்.

நேசம் என்றும் திரிந்துலவும் நேயம் என்பது, மிக்க அருமையாக அமைந்த சொல்.  நெய் + அம்  =  நேயம் ஆகும். இங்கு முதனிலை என்னும் முதலெழுத்து  நெடிலாகி நீண்டது  ஆதலின் முதனிலை திரிந்த பெயராகும். இப்பொழுது நெய் என்பது வினைச்சொல்லாகவும் இன்றளவும் உள்ளது.   துணி நெய்கிறார்கள் என்`கிற  வழக்கை நோக்கி இதை உணரலாம்.  நெயவில் நூல்கள்  நெருங்கிப் பிணைந்து பின்னித்தான் துணி  அமைகிறது. இதுவும் நேயம் என்ற சொல்லின் தன்மையை நன்`கு உணர்த்துவதாகும்.பிற்காலத்தில்  நேயம் என்ற சொல் நேகம் என்று திரிபுண்டு ஒரு ஸகர முன்னொட்டைப் பெற்று ஸ்னேகம் அல்லது ஸ்நேகம் என்று மாப்பூசி மயக்கிற்று.   காலத்தால் பிந்திய சொல் இதுவாகும்.  மசாலையை நல்லபடியாக நேகாக அரைக்கவேண்டும் என்று அம்மா பணிப்பெண்ணிடம் சொல்வார்.   நேகாக அரைத்தால் பிணைப்பு அதில் கூடுதல் ஆகிறது. நக்கரை புக்கரையாக அரைத்தால் துகள்கள் பெரியனவாய்ப் பிணைப்புக் குறைந்து காணப்படுமென்பர்.  நேகு > நேகம் >ஸ்நேகம் எனினும் அதுவாம்.

நீரும் மண்ணும் நெருங்கிய நிலப்பகுதியே நெய்தல்.  வெம்மையும் குளிரும் ஒன்றை ஒன்று தொட்டு நிற்கும் நிலப்பகுதியே நெய்தல். மக்களும் நெருக்கமாக வாழுமிடம் நெய்தல். கடல் பல செல்வங்களும் தருவது:  அவை கடல் பஃறாரம்  என்ப.   கடல் பலவும் தருவது என்று பொருள்தரும்.

நெய்தல் என்பதில் தல் ஒரு விகுதி;  அது பெரிதும் தொழிற்பெயர் விகுதியாய் வரக் காணலாம்.

பஃது என்பது  பத்து  ஆகும்.   பல்+ து =  பத்து அல்லது பஃது.  அகர முதலாய் 0னகர இறுவாய் முப்பஃது என்ப என்ற தொல்காப்பியத் தொடரை உன்னுக.

இரண்டு மாடுகளை ஒரு கயிற்றினால் கட்டி  இரண்டும் இருபக்கமாக இழுத்துக்கொண்டு போனால்  அவை பிரிந்து நிற்பவை என்பது சொல்ல வேண்டியதில்லை.  இரண்டும் நடுப்பகுதிக்கு வந்து ஒன்றாக நின்றால் நட்பு டையவை ஆகின்றன.

நள் >  நடு.

நள்ளிரவு;  நடு இரவு,   நள்ளாறு -  நடு ஆறு -  நட்டாறு.

இதுபோலும் அமைப்பு:   கள் -  கடு;  பள் - படு;  சுள் - சுடு என்று மொழியெங்கணும் பரந்துபட்டுள்ளன.

நடு >  நட்டல்  இது நடு+  அல்.   நாடாது நட்டலிற் கேடில்லை. நட்டபின் வீடில்லை.  ( வீட்டுக்கு வராமல் சுற்றித் திரிவான் என்பதன்று;  விட்டு விலகலாகது என்பது.)

நள் + பு  =  நட்பு.

நள் என்பதும் நெருக்கமுணர்த்து பதமே.  பொருள் பதிவு பெற்றதே  பதி + அம் = பதம்.  நன் கு வார்க்கப்பட்டதே வார்த்தை.    இனி வாய்த்தை > வார்த்தை.  எனினும் அதுவே.  இரு உதடுகள் நெருக்கமுற்றதே  வாய்.  பொருள் வருவிக்கப் படுவதே வார்த்தை.  வரு > வார்.  வருவான் -  வாரான்  என்பவற்றில் வரு என்பது வார் எனத் திரிதலுணர்க.  சொல்லின் ஒலி மட்டுமே உண்டு;  பொருளானது ஊட்டப்படுகிறது.  பொருள் அருத்தப்படுகிறது:  அருந்து > அருத்து என்பது பிறவினை.   அர் என்பது அரவம் என்று ஒலியுமாம்.
 இப் பிரிசெலவு நிற்க.

சந்திப்போம்.

நிலைப்பிசகுகளும் வருபிழைகளும் திருத்தம் பின்

ஒவ்வொரு முறையும் மீளேற்றுகையில் செலவு கூடும்.


 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.