Pages

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

திரிபும் கால ஓட்டமும்

இன்று திரிபு அடைவதற்கு ஒவ்வொரு சொல்லுக்கும் எத்துணை ஆண்டுகள் கழிந்திருக்கும் என்று பார்ப்போம்.

கா என்பது காத்தல் என்று பொருள்படும் ஒரு மிக்கப் பழைய தமிழ்ச்சொல். ஒரு பழம் அழுகிவிடாமல் காக்கவேண்டும்.  அதற்கு என்ன செய்யவேண்டுமென்றால் அதை உரிய முறையில் பத்திரப் படுத்தவேண்டும் . பத்திரப் படுத்துவது என்பது ஒரு பேச்சுமொழிச் சொல்.   எழுதும்போது பலரும் பழம் கெட்டுவிடாமல் காக்க வேண்டும் என்று எழுதுவர்.

காத்துச் சூட்சிக்கணம், கஸ்தூரி மாம்பழம்

என்று ஒரு மலையாளப் பாட்டு இருக்கிறது.   பழம் கெட்டுவிடாமல் காக்க வேண்டும் என்பதே அங்கும் வழக்கு ஆகும்.

கா அல்லது காத்தல் என்பதிலிருந்து  காதல் என்ற சொல் அமைந்தது.  இந்தச் சொல்லின் பிறவினை வடிவமே காத்தல் என்பது.  ஆனால் இப்படி எந்த வாத்தியாரும் சொல்லிக்கொடுப்பதில்லை.  இதற்குக் காரணம் காதல் என்பதற்கும் காத்தல் என்பதற்கு மிடையில் உண்டான பொருள் வேறுபாடுதான்.

ஓர்  இளைஞன் ஒரு பெண்ணை விரும்புகிறான்.  தான் விரும்பிய அந்தப் பெண்ணைப் பிறர் அணுகிவிடாத படி  அவன் பாதுகாப்பான். அப்படி அவன் பாதுகாப்பதே காதல் ஆகிறது. அப்பெண்ணுடன் தான் தொடர்பு வைத்துக்கொள்வதையும் பிறர் காணாமலும் பிறரும் செய்யாமலும் காப்பான்.  அதுவே காம்  ஆகிறது.

கா என்பது காம் என்று திரிவதற்கு அல்லது நீள்வதற்கு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும்?  இது உடனே நிகழும் திரிபு அன்று.  காலம் செல்லவேண்டும்.

கா  >  காம் :  காம் என்பது கா என்பதை நோக்க ஒரு புதிய அமைப்பு ஆகும்.

காம் என்பதே போதுமானது.  உடல்வேட்கையைக் குறித்தது.  பின் அது காமம் என்று திரிய ஒரு தலைமுறையாவது சென்றிருக்கவேண்டும்.  அம் சேர்த்தபடியால் சொல்லில் என்ன புதுமை விளைந்தது.  என் கருத்து ஒன்றுமில்லை என்பதுதான்.  காம் என்று மட்டும் குறிப்பிடுவது நிறைவு அளிப்பதாய் இருக்கவில்லை போலும்.  ஓர் அம் சேர்த்து காமம் என்ற சொல் அமைந்தது.

காம் என்ற அடிச்சொல்லும் இருந்தது.  அது நிறைவு அளிக்காமையினால் காமம் என்று சொல் அமைத்

தவர்கள்  பின்னர் காமம் என்ற அந்த உணர்வுக்குரிய பெண்ணைக் காமி  என்றனர்.  அதாவது காம் அல்லது காமம் உடையவள் காமி.

காமி சத்தியபாமா கதவைத் திற வா

என்பது ஒரு பழம்பாடல்.  நாடகப் பாட்டு.

பின் காமத்தை ஆட்சி செய்வதாகக் கருதப்பட்ட கண்ணறியாத ஒருவன்  காமன் எனப்பட்டான்.  இதிலும் காம் என்ற அடிச்சொல் பயன்பட்டது.

காமத்துக்கு எல்லோரும் உரிமை உடையவர்கள் ஆகமாட்டார்கள் ஒரு குறிப்பிட்ட பெண்ணுக்கு!  உரிமை உடையவளைக் குறிக்க  ,   காமினி என்ற சொல் உண்டானது.  இதில் இன் என்னும் உரிமை குறிக்கும் உருபு இடைநிலையாகி உள்ளது.  காம் + இன் + இ =  காமினி.

கந்தனின் கருணை  என்ற தொடரில் கந்தனினின்றும் வெளிப்படும் கருணை என்ற பொருள் கிட்டுகிறதன்றோ.  இதில் இன் என்ற உருபு செய்யும் தொழிலைக் கண்டு பொருளைப் புரிந்துகொள்ளலாம்.

காமத்தை ஆட்சி செய்யும் தேவதை காமாட்சி எனப்பட்டாள். அப்படி ஒரு தேவதை இருப்பதாக மக்கள் எண்ணி இச்சொல்லைப் படைத்தனர்.  கா என்பதிலிருந்து காமாட்சி என்ற சொல்லை உண்டாக்க எத்தனை நூற்றாண்டுகளும் கருத்துவளர்ச்சிகளும் தோன்றியிருக்கவேண்டும்?

காம் தன் அடிப்படைப் பொருளை இழக்கவில்லை என்றாலும் பேச்சில் தனிச்சொல்லாய்ப் பயன்படவில்லை என்றாலும் அதற்குப் பதிலாகக் காமம் என்ற சொல் அமைந்துவிட்ட போதிலும்  அது அடிச்சொல்லாக நின்று மொழியை வளப்படுத்தியது.   அது தாய்ச்சொல் ஆகிவிட்டது.  இந்த மாற்றத்தை அடைய ஒரு தலைமுறையிலிருந்து பல தலைமுறைகள் சென்றிருக்கலாம்.

சொல் திரிபில் அடங்கியிருப்பது கால ஓட்டமாகும்.

அடிக்குறிப்புகள்.

பிழைகள் காணின் திருத்தம் பின்.  `1.2.19

Errors not found in our original:
சில பிழைகள் காணப்பட்டுத் திருத்தம் பெற்றன.  கள்ளப்  புகவர்களால்   இவை புகுத்தப்  பட்டவை. மேலும் வரக்கூடும். எமக்குத் தெரிவிக்கலாம்  அல்லது திருத்தம் செய்யப்படும் வரை பொறுமை காக்கவும்.     2.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.