Pages

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

சாமி என்பது எப்படி அமைந்த சொல்.

சாய்தல் என்பது பலவகைகளில் செயலாக்கம் படத்தக்கது  என்பதைச் சிந்தித்து உணரலாம்.  இவ் வகைகளையெல்லாம் தொகுத்து நால்வகையில் சாய்தல் கூடுமென்று கூறின் அது  சரியாகும். முன்னாகச் சாய்தல், பின்பக்கம் சாய்தல், பக்கவாட்டில் வலமாகச் சாய்தல்;  அவ்வாறே இடமாகச் சாய்தல் என்று நான்`கு அவையாம்.

சாம் என்றொரு சொல் முற்காலத்தில் வழங்கியது என்று அறிஞர் கூறியுள்ளனர். இச்சொல் பின்னர் இகர விகுதிபெற்று சாமி என்று நீண்டது.
விகுதி என்பதே  சொல்லின் மிகுதிதான்.   விஞ்சுதல் - மிஞ்சுதல் என்ற சொல் போலவே மிகுதி > விகுதி என்பதும் ஆம்.

சாமியைப் பண்டையர் முன்பக்கமாகச் சாய்ந்து தரையில் படிந்தவாறு கும்பிட்டனர்.  கும்பு இடுதல் என்பது கைகள் குவித்தலைக் குறிப்பது.  இச்சொல் கூம்பு என்பதனோடு தொடர்புடைய சொல்.   கும்பு > கூம்பு.  கூம்பு என்பது வல்லெழுத்துப் பெற்றுக் கூப்பு என்றாகும்.  கூப்பு > கூப்புதல்.

சாய்ந்து கும்பிடப் படுவது  சாய் > சாய்ம்  > சாம்  ஆனது.   சாம் என்ற சொல் பின் இகர விகுதி பெற்று சாமி ஆனது.   சாய் > சாய்ங்காலம் என்பது போன்றதே.  உகரத்தை உள்ளிடும்போது  சாயுங்காலம் என விரியும்.  சாயும் என்பது எச்சவினையின்பாற் படும்.  சாமி என்பதில் வரும் ஈற்று இகரத்தை வெறும் விகுதியாக விட்டுவிடாமல் இங்கு என்று சுட்டுப்பொருள் காண்போமாயின் சாயும் இங்கே என்று அது விரிதல் காணலாம்.   சாமி இருக்குமிடத்தில் சாய்வது பண்டை நாட்களிலிருந்தே வணங்குவதன் குறிப்பானது.

சாய்தல்  வினைச்சொல்.
சாயும் என்பது இடைக்குறைந்து  சாம்  ஆனது  எனினுமாம்.

சாய் > சாய்ம் > சாம்  எனினும்  அதுவேதான்.

சாயும் இ  >  சாம்  இ  >  சாமி என்பதும்  அமைப்பை விளக்கப் போதுமானது.

இன்னொரு சொல்லை ஒப்பிடுவோம்.

காண் > காண்பி என்பது பிறவினை வடிவம்.

இது பேச்சில் இப்படி வருவதில்லை.  காண் > காண்மி > காமி என்று ஒலிக்கப்படுவது கேட்டிருப்பீர்.

பாம்பு என்ற சொல்லிலும் பாய் > பாய்ம்பு > பாம்பு என்றாவதைக் காண்க.
வேகமாக முன்  வந்து  தீண்டுதல் அல்லது  விரைந்து நகர்தல் குறிக்கவே பாய்தல் என்ற சொல் இங்கு வருகிறது.

செத்துப்போனவன் சாய்ந்துவிடுகிறான்.  சாய் என்பதும் சா என்பதும் தொடர்புடைய சொற்கள்.

சா >  சாய் > சாய்தல்.
அல்லது   சாய் > சா > சாதல்.  இவற்றில் எப்படிப் பார்த்தாலும் தொடர்பு தெரிகிறது.

இதிலிருந்து  சா என்ற பழந்தமிழ்ச் சொல்  சாய்தலையும் சாதலையும் ஒருங்கு குறித்த பல்பொருளொரு சொல் என்பது புலப்படும்.

ஆக,   சாமி என்பதன் அடைவுப் பொருள் கும்பிடப் படுவது என்பதுதான் என்பதை உணரலாம்.  வணக்கம் என்ற சொல்  வளைவு குறித்தது முன்.
இன்று இப்பொருள் மறைவாக இருப்பதுபோலவே  சாமி என்பதும் சாய்தல் கருத்தை மறைவாகக் கொண்டுள்ளது.

 ஸ்வாமின் என்னும் சமஸ்கிருதச் சொல் வேறு.  இச்சொல் பல பொருள் உடைய சொல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.