Pages

புதன், 13 பிப்ரவரி, 2019

பொருளால் தாழ்ந்துவிட்ட சொற்கள்.

ஆள் என்பது முதற்கண் ஆட்சி குறித்த சொல்லன்பது கூறபட்டது. இச்சொல் இன்றும் இப்பொருளில் நன்றாகவே வழங்குகிறது.  இது வினைப் பகுதியாகவே நிற்கின்றது.

அருள் என்ற சொல்லும்  தெய்வக்கொடையைக் குறித்த சொல் என்பது நல்லபடியாகத் தெரிகிறது
இதுபோன்று வினைப்பகுதி உருவில் நின்று பணிவன்புடன் விழைதலைக் குறித்தது.  இதனைக் கருத்தில் கொள்ளுங்கள்:

வந்தருள் என்று உரைப்பாய் -  என் பாங்கி
வந்தருள் என்று உரைப்பாய்.

தெய்வ நிலையில் உள்ளோரை வந்தருள் என்பதுபோலவே  ஆட்சி நிலையில் உள்ள ஒரு மானிடப் பிறவியை " வந்தாள்.  வந்தாள்" என்று கூறினர்.  இவற்றில் உள்ள வழக்கொற்றுமை கண்டுகொள்க.   இன்றுகாறும் இது பெண்பாலாருக்கே உரித்தாய் வழங்கி வருதலால் தொடக்கத்திலும் வந்தாள் என்பது பெண்பாலாருக்கே வழங்கிற்று என்பது உணரத்தக்கது.

ஆள் என்ற ஆட்சிச் சொல் பெண்பாலார் இவ்வழக்குத் தொடங்கிய காலத்து ஆட்சிநிலையில் இருந்தமையைக் குறிப்பதறிக.  நம் குமுகம் ஒரு மாதராட்சி போற்றிய குமுகமாகும். இது ஆங்கிலத்தில் மாந்தவியலில் matrilineal society எனப்படும்.  மாந்தவியல்:  anthropology.

வந்தாள் சென்றாள் கண்டாள் என்பவை உயர் ஆட்சி நிலை குறித்து நிற்க, அந்நிலை எவ்வாறு இழிபுற்றது  என்பது ஆய்வுக்குரியது ஆகும்.  இப்படி உயர்நிலையில் இருந்து இழிபு கண்ட சொற்கள் பல.

நாற்றம்:  பண்டைப் பொருள்:  மணம்.  இற்றைப் பொருள்: தீய வீச்சம்.

தேவரடியாள்:  பண்டைப்பொருள்:  தெய்வத்தொண்டு செய்யும் பெண். இற்றைப் பொருள்:  விலைமாதர்.

வந்தாள் சென்றாள் முதலிய சொல்வடிவங்கள் இவ்வாறே  ஆட்சிநிலை குறிக்காமல் தம் பொருளிழந்தன.  ஒரு மதிப்புக்குரிய மாதை (  அரசகுமாரி என்று வைத்துக்கொள்ளுங்கள் ) வந்தாள் என்று குறிப்பிட்டால் பணிவுக்குறைவு,  (மரியாதைத் தேய்வு)  என்று உணரப்படுகிறது.    அதனால் இவ்வழக்கும் ஒரு பொருளிழிபே  ஆகுமென்பதை உணர்க.  இதை ஈடுகட்ட வந்தார் சென்றார் என்று எழுதவும் சொல்லவும் வேண்டிய நிலை உருவாகிவிட்டது. ஆர் என்பதோ உயர்வு குறிக்கும் சொல்.  அதுவும் பின் ஒரு விகுதியாயிற்று.

ஆர் என்ற அடிச்சொல்லின் பொருள் இன்று உயர்வையே குறித்ததுடன்,  ஆரியன் என்ற தமிழ்ச்சொல்லும் இன்றும் உயர்ந்தோன் என்றே பொருள்தரும்.  ஆரியன் என்ற தமிழ்ச்சொல் ஓர் இனப்பெயர் அன்று.  அது ஆதியில் ஒழுக்கத்தாலும் அறிவினாலும் உயர்ந்தோன் என்று பொருள்பட்டது.  பின்னரே இழிபு அடைந்து ஒரு கூட்டத்தினனைக் குறிக்க வழங்கிற்று, இதுவும் பொருளிழிபே  ஆகும்.   குமுகத்திற் பலவும் இழிபு அடைந்தபோது இப்பொருள் இழிபு விளைந்தது காண்க.

ஆர் :  வினைப்பகுதி.
ஆர்தல் -  தொழிற்பெயர்.
ஆர் + இய + அன் =  ஆரியன்.  (  அல்லது:  ஆர்+ இயன் ).    இயல்> இயன். லகரனகரப் போலி.  ஒ.நோ:  திறல் > திறன்.
பொருளாக்கம்:  உயர்வில் அல்லது உயர்வினால் இயன்றோன்.

இதை விளக்க அயல் வழக்குகள் தேவையில்லை  யாதலறிக.

மேலையர் ஆய்விலும் ஆரியன் என்பது சங்கதத்திலும் இனப்பெயர் அன்றென  சொல்லப்படுவதை இதற்கு ஆதரவான கருத்தாகவே கொள்ளவேண்டும்.

ஆள் என்பதும் விகுதியாகிற்று.
ஆர் என்பதும் விகுதியாயிற்று.

ஆதியில் ஆன் விகுதியிலும் இதுபோலவே  பொருளிழிபு நிகழ்ந்துள்ளது..  முருகன் வந்தான் என்று தெய்வத்தைக் குறிக்க வழங்கும் போது பணிவில் குறைவாக எண்ணப்படுவதில்லை ஆதலால் இதுவும் இத்தகைய வரலாற்றுக்கு உட்பட்டதே ஆகும். மனிதனைக் குறிக்கும் போது மட்டும் மரியாதைக் குறைவு என்று எண்ணப்படுகிறது.

சேரலத்தில் ( கேரளத்தில் ) வழங்கிய பேச்சில் இத்தகைய மாறுபாடுகள் நிகழாமலும் எச்சங்களே முற்றுக்களாக நிற்றலும் கண்டு ஒப்பீடு செய்துகொள்க.

வந்தாள் -   மலையாளம்:  வந்நு   ( = வந்து :  எச்சவினை)
வந்தார் -  மலையாளம் :   வந்நு  (  = மேற்படி)
வந்தான் - மலையாளம்:  வந்நு  ( = மேற்படி ).

வந்தான்,  வந்தாள் :   முற்றுவினைகள்.
வந்து ( தமிழ்) :  எச்சவினை.
வந்நு ( மலையாளம் ) - முற்றும் எச்சமும் ஆகும்.

வந்து நிற்பவள் ஆணா பெண்ணா என்று கண்ணுக்குத் தெரியும்போது அதற்கு ஒரு விகுதி எதற்கு என்று இத்தகைய விகுதிகள் வழங்காத மொழியினர் கேட்பர்.  மொழி கடுமையாகிவிட்டது.  சீனம் முதலிய மொழிகளில் இல்லை.

சுசீலா பாடினார். (தமிழ்)
சுசீலா பாடி ( மலையா.)

சுசீலா பெண் என்பது தெரிய விகுதி எதற்கு? பெயரிலும் காட்சியிலும் கண்கூடு அன்றோ?

டிய டாத்தாங்க,   இய டாத்தாங்   ( மலாய்).   விகுதிகள் இல்லாமலே இந்தோவிலும் மலேசியாவிலும் சக்கைபோடு போடுகிறார்கள்.  தகலோக் மொழியைக் கூர்ந்து கவனித்துப் பின்னூட்டமிடுங்கள். 

ஆகவே மொழியை வேண்டுமென்றே யாரும் கடினப்படுத்துவதில்லை. இவை வரலாற்றுச் செலவில் ஏற்பட்டவை ஆகும்.

தமிழ்போல சங்கதமும் கடினமொழியே.  பிற்காலத்து இந்தோ ஆரிய மொழிகளை ஒப்பிடுக.

எச்சவினையே முற்றுவினையாகவும் நிற்றல் ஒப்பத்தக்கதே ஆயினும் இவ்விகுதிகள் தேவையில்லாமல் மொழியில் புகுந்தன என்று கொள்ளல் அறிவுடைமையாகது.  பெண்ணாட்சி இருந்து பின் அது பிறழ்வு அடைந்ததே காரணம் என்பது உணர்க.

சிந்தித்து மகிழ்க!

பிழைபுகின் திருத்தம் பெறும்.
எமது இலத்தீன் ஆசிரியர்  அமரர் REV BRO VALAERIAN அவர்களுக்குத் தாழ்ந்து பண்வினைத் தெரிவித்துக்கொள்கிறேம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.