Pages

வியாழன், 14 பிப்ரவரி, 2019

எண்ணுதலும் தொடர்புடைய திரிபுகளும்.

ஓர் இடுகை வரைந்துகொண்டிருக்கையில் இரு உதடுகள் என்று எழுத நேர்ந்தது.  இதை உண்மையில் ஈர் உதடுகள் அல்லது ஈருதடுகள் என்றுதான் பதியவேண்டும்.  வாக்கியத்தில் சில இடங்களில் ஈர் ஆடு என்று எழுதினால் இலக்கணப்படி சரியானதாக இருந்தாலும் மனநிறைவாக இருப்பதில்லை. இரு ஆடு என்றே எழுதி முடித்தேம்.

ஆனால் ஒரு உதடு என்று எழுதுவதில்லை.   ஓர் உதடு என்றே எழுத வேண்டும் என்பதெம் கொள்கை.

ஆருயிர் என்ற தொடரைக் கவனிப்போம்.

இது:

அ ருமை + உயிர் =  அரு+ உயிர் =   ஆர் + உயிர் =   ஆருயிர் 

ஆகும்.

அரு என்ற அடிச்சொல் ஆர் என்று உயிர் வரத் திரியுமெனினும்   அவ்வாறு உயிர் அல்லதது வரினும் திரியுமென்பது காண்க.

ஆர்  + தல் = ஆர்தல்.

அரு என்பது தனித்தே ஆர் என்று திரிந்து இன்னொரு சொல்லான பின் தல் என்னும் தொழிற்பெயர் விகுதி வருதல் மேவியதால் இதன் இலக்கணம் வேறுபடுகிறது.

ஒரு என்பதிலிருந்து ஓர் என்பதும் அவ்வாறே திரிந்தது.  ஒரு மனிதன் ஒன்றையே நினைத்துக்கொண்டே அல்லது சிந்தித்துக்கொண்டே இருந்தால்  அது ஓர்தல் ஆகும். இதன் அடிப்படைக் கருந்து ஒன்றையே எண்ணுதல் ஆதலின்  ஒன்று என்பதன் அடிப்படையில் ஓர்தல் ( எண்ணுதல்) என்ற சொல் அமைந்துள்ளது.

ஒரு மனிதன் எண்ணுவதெல்லாம் வெளியிற் சிந்துவதில்லை.  தேவையானதையும் அல்லது அறிவுக்குப் பொருந்தியதை மட்டுமே வெளிக்கொணர்கிறான்.  அவனுடைய எண்ணத் தொகுதியில் இருந்து ஒன்றிரண்டே வெளிவருகின்றது.  அறிவுக்கும் பொருந்தாதன எண்ணினும் யாவும் வெளிப்படுவதில்லை.  சில மறதியின் வாய்ப்பட்டு வெளிவருமுன் அழிந்துவிடுகின்றன.  அவற்றை அவனேகூட மீட்டெடுக்க முடிவதில்லை.
சில வெளி  வருகின்றன.  சிந்துவது வேறு.   கொட்டுவது வேறு.  பொருத்தமானது சிறிது வரின் அது  சிந்து > சிந்தி > சிந்திப்பது ஆகும்.

சில் > சில.  இதில் அகரம் பன்மைப் பொருளது.
சிலது  சிலதுகள் என்பன ஒருமை பன்மை தவறாகக் கலந்த பிழைச் சொற்கள்
.

சில் என்ற அடியினின்றே சிறுமை குறிக்கும் சொற்களும் தோன்றின.

சில்> சிறு.

சில் என்பது சின் என்றும் திரியும்.  ஒ.நோ:  திறல் > திறன்.  லகரனகரப் போலி.

சின் > சின்னவன்,  சின்னப்பையன்.
சின் >  சின்னம் ( ஒன்றைப்போல் சிறிதாகக் காட்டப்பட்ட அல்லது வரையப் பட்ட உருவமுடையது ).
இது பின் பெரிதாய் அமைந்த போலுருவுக்கும் பொருள்விரிந்தது.

சில் என்பதில் சிற்றுருவக் கருத்தும் எண்ணிக்கையிற் குறைவுக் கருத்தும் அடங்கியுள்ளமை புலப்படும்.

எனவே சிந்தித்தல் என்பது:  1. கொஞ்சம் கொஞ்சமாக எண்ணுதல். 2.  சில கருத்துகளை வெளியிடுதல்.  3  விரிவாகவன்றி  எண்ணுதல்.

இப்பொருள் மறைந்து,  பொதுவாக எண்ணுதலை இப்போது சிந்தித்தல் என்பது குறித்தது.

சின்+ தி =  சிந்தி.
சின் + து = சிந்து  ( சிறிதான கவி அல்லது இசை.  அளவடி அல்லாதது.)
சிந்து நதி :  அகலம் குறைவான நதி.  சிந்து என்பது ஒரு சிறுவகை நூல் குறித்ததென்பதும் அந்நூல் அங்கு விற்பனை செய்யப்பட்டது என்றும் அதனால் ஆறு அப்பெயர் பெற்றது என்றும் வரலாற்றாசிரியர் சீனிவாச ஐயங்கார் கூறுவார்.
சிந்தன்:  சராசரி உயரத்துக்குக் குறைவான மனிதன்.

எண்ணுதல்: ஒன்றன்பின் ஒன்றாக மனத்துள் உருவாகுதல்.
சிந்தித்தல் :  சிறிது சிறிதாக எண்ணுதல்.  அவ்வாறு வெளிப்பட்டவை சிந்தனை.
ஓர்தல் : ஒன்றையே எண்ணுதல்.

ஓர்மை:  நினைவு என்று மலையாளத்திலும் பொருள்தரும்.

நினைவு: முன் நிகழ்வை இப்போது எண்ணுதல்.      பொதுவாக எண்ணி அதை மனத்துள் வைத்திருத்தல்.

பிழைபுகின் திருத்தம் பின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.