Pages

திங்கள், 1 அக்டோபர், 2018

பாஸ்கரன் என்ற சொல்.

இன்று "பாஸ்கரன்" என்ற சொல்லை அறிந்து இன்புறுவோம்.

இச்சொல் பெருவழக்குடைய பெயராகத் தோன்றுகின்றது.  நாம் அடிக்கடி செல்லும் கோயிலில் ஒரு நல்ல  "பொடியன்" பாஸ்கரன் என்ற இயற்பெயர் உடையவராய் இருக்கிறார்.  ஆனால் தம் பெயர் தமிழன்று நினைத்து அப்பா அம்மாவுக்கு எழுதும் கடிதத்தில் பாற்கரன் என்று எழுதுகிறார்.

இவர் அரனுக்கு (சிவனுக்குப்) பால் கொண்டுவந்து பூசாரிகளிடத்துக் கொடுக்கிற படியால் இவர் பெயர் ஒருவகையில் நன் கு பொருந்தியுள்ளது.
அங்குள்ள சிவன் பால் குடிப்பவர் என்பது பொருளாகிறது .  பால்+ கு+ அரன் = பாலுக்குச் சிவன் என்று விரித்து,  பாலைச் சிறப்பாக ஏற்றுக்கொள்பவர் சிவபெருமான் என்ற பொருளைத் தருகிறது.  அங்கிருக்கும் மற்ற தெயவங்களும் பாலை வேண்டாமென்று சொல்வதில்லை என்பதால் இப்பொருள் முற்றப்பொருந்தும் பொருளன்று என்று வாதிடலாம். எனினும் முழுதும் ஒழிதலின்றிப் பொருந்தும் பெயர்கள் உலகில்  சிலவே ஆதலின் அதை ஒரு பெரிய தடையாகக் கொள்ளாமலும் செயல்படலாம்.

இப்போது பாஸ்கரன் அல்லது அன் விகுதி இன்றிப் பாஸ்கர் என்ற பெயரில் அயலாகத் தெரிவது ஸகர ஒற்றே ஆகும்.  கஷ்டம் இஷ்டம் முதலிய சொற்கள் ஷ் என்ற எழுத்தை  அணிந்துகொண்டிருந்தாலும் அவை கடு, இடு என்ற தமிழ் மூலங்களை உடைய சொற்களே என்பது இதுபோழ்தில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஈண்டுள்ள  முன் இடுகைகளைக் காண்க.

சொடுக்குக:





சமஸ்கிருத மொழியில் மூன்றிலொரு பங்கு, தமிழ்த் திரிபுகள் என்பதை டாக்டர் லகோவரி என்ற மொழியாய்வறிஞர் குழுவினர் கண்டுரைத்துள்ளார்கள்.ஆனால் இவர் இப்படி முடிபு கொண்டது,   ஆரியப் புலப்பெயர்வுத் தெரிவியலாலலும் சமஸ்கிருதம் வெளிநாட்டு மொழி என்ற தெரிவியலாலும் வரலாற்று ஆசிரியர்கள் கவரப்பட்டுக் கிடந்த காலத்திலாகும். இத்தகு தெரிவியல்களுக்கு இப்போது ஆதாரங்கள் இல என்பது உணரப்பட்டுள்ளது. 

 இனிப் பாஸ்கரனைப் பார்ப்போம்.  பகலில்தான் சூரியன் என்னும் சூடியனைக் காணவியலும். இரவில் எங்கிருக்கிறதென்பதை பண்டையர் அறிந்திருக்கவில்லை.   ஆகவே பகலுடன்  திரிபிலாத் தொடர்பு உள்ளது சூடியனாம் சூரியன்.  பகல் என்ற சூரியன் காயும் நாள் என்னும் வெளிச்சப் பாதி, பால் என்று திரியும்.

பகலுக்கு அவர் என்ற சொற்றொடர்,  பால்+கு+அர் என்று சுருங்கும்.  பகல்>பால்;  கு சேர்விடம் குறிக்கும் பழஞ்சொல்;  இற்றை உருபும் ஆகும். அர் = அவர்.   பலர் பால் விகுதியும்  ஆகுமிது.  பணிவுப் பன்மையில் ஒருமை உணர்த்தும்.  (  மரியாதைப் பன்மை).

இது பாற்கர் என்று வரும்.  கவினுறுத்து முகத்தான் பாஸ்கர் என்று அமைக்கப்பட்டது.  இதை விரித்தால்:  பால் > பகல்;  கு ( பகலுக்)கு.;   அர் > அவர்.உண்மையில் பகலவன் என்ற சொல்லின் ஒருவிதச் சுருக்கமே பாற்கர்  என்னும் பாஸ்கர் ஆகும்.

"பன்மையொருமையில்" மிளிரும் பாற்கர்,   அர் என்பது அவர் என்றாகும்  தன் பொருளை இழந்து,  மக்கள் மறந்துவிட்ட நிலையில் மீண்டும்  ஓர் ஆண்பால் ஒருமையாகிய  அன் பெற்று  பாஸ்கரன் என்று வந்தது வழுவாகும்; அது பெரிதும் வழக்கிலுள்ளபடியால் அதை வழுவென்று கூறி அடைவது யாதுமில்லையாதலின்,  வழுவமைதி என்றே ஏற்றல் அறிவுடைமையாகும்.

பாஸ்கரன் = பகலவன்.

பகற்கரசன் > பாற்கரசன் > பாற்கரன் (சகரம் கெட்ட இடைக்குறை)  எனினும் ஏற்புடைத்தே . பகல் என்பது பாலென்று திரிந்தும் அரசன் என்பது அரன் என்று இடைக்குறைந்தும், பாற்கரன் என்றாகி  ஒரு ஸ்கர ஒற்றிட்டுக் கவினுறுத்தப் பட்டு, பாஸ்கரன் என்று திரிந்ததெனும் முன்வைப்பும்  நன்றே ஆம்.  இப்படிக்கூற, பகலவன் என்பதன் படியாகவின்றி பகற்கரசன் என்ற அணிபெறுதல் காண்க. இவ்வாறு இருபொருள் மற்றும் அவற்றுக்கு மேலும் தரும் சொற்களும் புனைவுகளும் பல.

இதுவே பாஸ்கரனின் வரலாறு ஆகும்.

மறுபார்வை பின்பு.

--------------------
குறிப்புகள்

சில மொழிபெயர்ப்புகள்

‘சென்சஸ்’  ‘குடிமதிப்பு’ 
பேனா-தூவல்,
பவுண்டன் பேனா-ஊற்றுத்தூவல்,
ஸ்டூல்-மொட்டான்,
சிமெண்ட்-சுதைமா,  
ஏர்கண்டிஷன்-செந்தணப்பு, 
ஏஜெண்ட்-முகவர், 
(பாவாணர்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.