கல் என்பது ஒரு பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் தமிழில் உள்ளது. பெயர்ச்சொல் என்பதில் பொருட்பெயரும் அடங்கும். கல்லுதல் என்பதில் கல் ( அல்லது கல்லு) என்பது ஏவல்வினை. (command).
மனிதன் ஒரு வேலையைச் செய்வதற்கு மரம், கல், இரும்பு, ஏனைக் கனிமங்கள் எனப் பலவற்றைப் பயன்படுத்திக்கொண்டான். ஓர் இரும்புத் தக்கைமுறுக்கியைக் ( screwdriver ) கொண்டு இரு பலகைகளை இணைக்கும்போது அவ்வாயுதம் இன்றி அதைச் செய்வது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை எனற்பாலதை உணர்கிறோம் . தக்கைமுறுக்கியை ஒரு கருவி என்கின்றோம். கருவிகள் செயல்முறைகளை எளிதாக்கித் தருகின்றன.
மரத்தாலான கருவியை மட்டுமே பயன்படுத்திவந்த மனிதன், கல்லாலான கருவியையும் செய்து பயன் கண்ட போது, அவன் வாழ்க்கை மேம்படத் தொடங்கியது. மரப்பிசினிலிருந்து ரப்பர் என்னும் தேய்வையைச் செய்யக் கற்றுக்கொண்டபின், ஓசை குன்றிய சக்கரங்களைச் செய்து, இன்னும் முன்னேறிவிட்டான். இன்று கருவிச் செய்பொருட்கள் பல்கிவிட்டன.
பெரிதும் கற்கருவிகளை மனிதன் புழங்கத் தொடங்கிய வரலாற்றுக் காலம் "கற்காலம்" எனப்படுகிறது. தமிழில் கற்காலத்தில் பயன்பாட்டுக்கு வந்த சொல்லே " கருவி" என்று இன்று நம்மிடை வழங்குகிறது.
ஒவ்வொரு முறையும் புதிய கருவியை உருவாக்கிக்கொண்ட மனிதன், அவ்வந் நிகழ்வின்போது மனம் மிக மகிழ்ந்துகொண்டான். இதனால், கலி என்ற சொல்லுக்கு மகிழ்வு என்ற அடிநிலைப் பொருள் ஏற்பட்டது. கல் + இ என்றால் கல்லினை உடைய நிலை" என்று பொருள். இலக்கிய முறையில் சொல்லாமல் சுட்டடி வளர்ச்சி முறையில் சொல்வதானால், " கல் இங்கு" என்று சொல்லவேண்டும்.
கலி என்ற சொல், தமிழ் யாப்பு இலக்கணத்தில் துள்ளலோசையைக் குறிக்கிறது. கல்லினால் கருவிசெய்ய இயல்வதறிந்த மனிதன் துள்ளலில் ஈடுபட்ட அந்தச் சென்றுவிட்ட காலத்தையே இது நன்கு நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. கலி என்பது துள்ளல் என்று தமிழ் அகரவரிசையால் இன்று பொருள்கூற இயலாவிட்டாலும், கலியோசை என்பது சரியாகத் துள்ளலையே புலப்படுத்தும். செழிப்பு, தழைப்பு முதலியவை மகிழ்வு தருவன. கல்லினால் துன்பமும் ஏற்படக் காரணங்கள் இருந்தன. மரவேலை மண்வேலைக்காரர்களின் வாழ்க்கை பாதிப்படைந்திருக்க வேண்டும். முன்னேற்றம் வந்த போது சில சாரார்க்குத் துன்பம் நேர்வதுண்டு. கலி எனபது துன்பமும் குறித்தது.
கல்லுக்கு அடுத்து வந்தது இரும்புக் காலம்.
கல்லுதல் என்பது கற்றறிவு என்பதற்கு அடிச்சொல் ஆயிற்று. கல்வி என்ற சொல் இதுநாள் வரை வழங்கிவந்துள்ளது.
யுகம் என்பது உகம் என்பதன் திரிபுதான்.. முன்னேற்றக் காலத்தை மனிதன் உகந்து போற்றினான். ஆனை > யானை என்றதுபோல், உகமே யுகமாயிற்று. கலியுகம் என்பது துள்ளிமகிழ்ந்த, மகிழ்ந்துகொண்டுள்ள யுகமாகும். காலம் என்பது நீட்சி என்பதன் அடிப்படையில் எழுந்த சொல். உகம் அல்லது யுகம் என்பது உகப்பு என்ற அடிப்படையில் எழுந்தது ஆகும்.
இனி, சுருக்கி முடிப்போம். கல் என்ற சொல்லிலிருந்தே கரு என்ற அடிச்சொல் தோன்றியது. வி என்னும் விகுதி சேர்ந்து , கருவி என்ற சொல் அமைந்தது. கருவி என்ற சொல் தமிழிற் பிறந்தது கற்காலத்தில் என்பதில் ஐயமில்லை.
அதனால்தான் "கல்தோன்றி" என்றான்.
மேலும் வாசிக்க:
https://sivamaalaa.blogspot.com/2019/04/blog-post_3.html : கலியாணம் (கல்யாணம்)
தமிழிற் பலவகையாய் விளக்குதற் கியலும் சொல்.
https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_16.html கல்யாணம்.
https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_82.html கத்தி (கல்+தி)
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.