Pages

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

முல்லும் மூலதனமும்

 இந்நாள் வேறொரு கோணத்தில் சிந்திப்போம்.

முல் என்பதொரு தமிழ் அடிச்சொல். பழங்காலத்தில் மொழியில் புதிய சொற்கள் தேவைக்கேற்பத் தோன்றிக்கொண்டிருந்த சமையத்தில்,  விகுதிகள் சேர்க்காமல் அகத்திரிபுகளின் மூலமாகவே சொற்கள் உருவாகின.  அவ்வாறு சொற்கள் தோன்றியமையை பின்வரும் சொல்லமைப்பில் கண்டுகொள்ளலாம்.

முல்   ( அடி )  >   முன்..

முன் என்ற சொல் காலமுன்மை,  இடமுன்மை இரண்டுக்கும் உரியதாய் வரும்.

எடுத்துக்காட்டு:

நேற்று முன்  (  இது கால முன்மை).

வீட்டின் முன்  ( இது இடமுன்மை).

தந்தைக்கு முன் ( இதுவும் காலமுன்மை).

முல் என்பதிலிருந்து முன் என்பதை உண்டாக்க,  விகுதி ஏதும் இன்றியே ஓரெழுத்து மாற்றத்தின்மூலம் சொல் பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறே  ஆள் என்ற பெண்பால் விகுதியினின்று ஓர் ஆண்பால் விகுதியைப் படைக்க, ஓரெழுத்துத் திரிபே போதுமானதாய் இருந்தது.

ஆள் >   ஆன்.   ( ள் >ன்) 

வந்தாள் >  வந்தான்.

ஆள் என்பது திறச்செயல் குறிக்கும் சொல்லாகும்.   அரசி ஆள்கிறாள். அதாவது எதை எப்படிச் செய்து எவ்வாறு நடத்திமுடிக்க வேண்டுமென்பதை அரசி தீர்மானிப்பதுடன், அதற்கான செயல்பாட்டு மக்கட்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறாள். செயல் முற்றுறுவிக்கின்றாள்.   இதுதான் ஆள் என்பதன் பொருள். பெண்கள் இது செய்தமையால்,  அவள் வெறுமனே  வந்து, தந்து என்று வினைகளால் சொல்லப்படாமல்  வந்தாள், தந்தாள் என்று  ஆள் என்னும் விகுதி கொடுத்துச் சொல்லப்பட்டாள்.  பிற்காலத்தில் ஆண்மகன் செயல்களை முடித்த காலக்கட்டத்தில்  ஆள் விகுதியே ஆன் விகுதியாய் மாறியமைந்தது. அவனது செயல்முடிப்புத் திறனைக் காட்டிற்று.

ளகர ஒற்று ணகர ஒற்றாகவும் மாறும். அவ்வாறு மாறியபின், பொருண்மையிலும் சற்று மாற்றமுற்று தொடர்புடைய (அணிமைப்) பொருளுக்கு மாறிவிடும்.  இதற்கு  ( உதாரணம் : உது ஆர் அணம் அல்லது ) எடுத்துக்காட்டு:

உள் ( உட்பக்கம்)

உள் >  உண்  ( தின்பொருளை வயிற்றினுள் வாய்வழிச் செல்லவைப்பது)

எழுத்தும் மாறிப் பொருளும் தொடர்புடைய வேறு கருத்துக்கு மாறியது.

இதுபோலவே  ஆள் என்ற சொல்லினின்று ஆண் என்ற சொல் தோன்றியது.


முல் என்பது முன்னிருப்பைக் குறித்ததென்பது மேற்கூறியவற்றால் அறியப்படும். கவனிக்க:

முல் - முலை ( முன்னிருக்கும் பால்தரும் உடற்பகுதி )

முல் > மூல் > மூலை : சுவரின் முன்பகுதிகள் இணைப்பில் ஏற்படும் இடம்

முல் > மூல் > மூலம் :  காலத்தால் முற்பட்டு பின்வருவனதொடர நிற்பது.

முல்> மூல் என்பது முதனிலைத் திரிபு. ( நீட்சித் திரிபு)

முல் > மூல் > மூலிகை:  முன்னாளிலிருந்து நோய்நீங்க இயைந்த  மருந்து.

   இயை > இகை.   கை விகுதி என்றும் விளக்கலாம். 

தனமென்பது தன் செல்வம்   தன் - தனம். 

மூலதனம் எனின், முன் ஒருவன் இடும் தனம்.   முதல் எனினும் அதுவாகும்.


இவற்றை நேரம் கிட்டினால் விரித்து அறிந்துகொள்வோம்.



இப்போது இவற்றை அறிந்து மகிழ்க

இடையில் வந்து கண்டோர் பொருட்டு இருமுறை நிறுத்தவேண்டியதாயிற்று.



தட்டச்சுப் பிறழ்வு பின் கவனிக்கப்படும்.


இவற்றையும் வாசித்து அறிக:


தனம் :  https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post_23.html

முகமாவு பூசிக் கவின்பட்ட சொற்கள்: 

 https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_6.html

விபசாரி  https://sivamaalaa.blogspot.com/2017/01/how-formed.html

மூலம் https://sivamaalaa.blogspot.com/2009/05/etymology-by-mala-ref-page9-extract.html

சொல்லாய்வுகள் https://sivamaalaa.blogspot.com/2017/02/postings-on-etymology-retrieved.html

வற்சிறம் https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_20.html

காமுகம் https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_3.html

காமி  https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_32.html


  



 

1 கருத்து:

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.