Pages

வெள்ளி, 22 மார்ச், 2024

இந்து என்ற சொல்.

 வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வந்த போது அவனுக்கு இந்திய மொழிகளைப் பற்றி ஏதும் தெரிந்திருந்தது என்று நினைக்கக் காரணம் எதுவுமில்லை. நீங்கள் புதியவராக ஒரு புதுநாட்டுக்குப் போய்ச் சேர்ந்தவுடன் அங்குள்ள மொழியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்துவிடுமா? தெரியாத நிலையில் கற்பனையின் மூலம் கதையைக் கட்டிக்கொண்டு தெரிந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறான். மொழிகளை அறிந்துவிட்டதாக அவன் எழுதிவைத்தவை,  கற்பனை பலவற்றை உள்ளடக்கியவையே ஆகும்,  தமிழ்நாட்டு மக்கள்  கெட்டிக்காரர்கள். " எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்,  பாடியவன் பாட்டைக் கெடுத்தான்" என்ற அவர்களின் அறிவுரை,  உண்மையில் முதலில் வெள்ளைக் காரனுக்கே பொருந்துவதாகும்.

ஆயினும்  இது அவன் சொல்லிய அனைத்துக்கும் பொருந்துவதாகாது.  சில கருத்துகளிலே அவன் பிழைபட்டான்.

ஆரியன் என்ற இனத்தவன் உள்ளே வந்தான் என்பதும்,  படை எடுத்து வந்து வெற்றிகொண்டான் என்பதும் இத்தகைய ஆதாரமற்ற கருத்துகளே  ஆகும். இதை அவன் கூறக் காரணம் அவன் செய்த பொருந்தாத சொல்லாய்வு. நாட்டுக்குள் பலர் வந்திருக்கக் கூடும்.  ஆனால் அவர்கள் ஆரியர் என்போர் அல்லர்.   ஆரியர் என்பது ஆர் விகுதி பெறுவதற்குரிய கற்றோர் என்று கருதினால் அது சரி.  படித்தவர்கள்  அறிஞர்கள் பலர் அப்போதும் இருந்தனர்.  ஆரியர்கள்  - இது இனப்பெயரன்று. இயம் என்பது தமிழில் வாத்தியத்தையும்,  ஆரியம் என்பது நிறைவான வாத்தியத்தையும் குறித்த தமிழ்ச்சொற்கள். .ஆர்தல் - நிறைதல். ஆர் என்ற சொல் தமிழில் இருந்ததையும் அவன் அறிந்திருக்கவில்லை. பார்ப்பான் என்பது பூசாரிகள், சோதிடம் பார்ப்போர் என்ற தொழிலரைக் குறிக்கும் சொல்.  அஃது ஒரு மக்கள் தொகுதியைக் குறிக்கும் சொல்லாகப் பின்னர் பொருண்மை பெற்றிருக்கக் கூடும்.  சொல்லுக்கு இயற்கையில் பொருள் ஒன்றுமில்லை.  சொல் என்பது ஒலிகளின் கூட்டு என்பதே உண்மை.  அதற்குப் பொருள் பயன்பாட்டின் காரணமாக ஏற்படுகிறது. ஒரே ஒலியுள்ள சொற்கள் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பொருளைத் தரும்.  மா என்ற சொல் பல்பொருளொருசொல்.  அதற்குத் தமிழில் விலங்கு என்ற பொருளும் உள்ளது.  சீனமொழியில் குதிரை என்ற பொருளும் உள்ளது.  வேறு மொழிகளில் அவ்வொலிக்கு வேறு பொருண்மைகள் இருக்கலாம்,

மா மா என்று இரண்டு முறை சொன்னால் மாமனைக் குறிக்கலாம். எழுதுகையில் இது மாமா என்று எழுதப்படும்.

" இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை" -  இந்து  என்பது சைவநூலில் வரும் பாட்டில் வரும் சொல் =  .  இதற்கு நிலா என்று பொருள். இளம்பிறை என்பது அதன் வளராத பகுதி.  இதற்குத் திருடன் என்று பொருளில்லை.  ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு பொருளிருக்கும். 

இந்து என்பதற்குத் தமிழில் உள்ள பொருள்:

1  சந்திரன்

2 கற்பூர மரம்

3 சிந்துநதி

4 இந்து மதத்தான்

5 ஒரு விடம்  ( விஷம்)  கவுரிபாசாணம்

6  எட்டிமரம்   

7 தாமரைப் பூ  ( இந்து கமலம் எனப்படும்)

8 ஒரு காந்தக் கல்.  ( இந்து காந்தம்)

9 சிவன் ( இந்துசிகாமணி).  இந்துவாகிய சிகையின் அணிகலன் உடையோன்


10 இன் து அல்லது தூ.    இனிய துய்யதானது அல்லது தூயது.

11  இம் து  - இம்சையைத்  துறந்தவன். முனைவர் சிவப்பிருந்தா தேவி   எம்மிடம் தெரிவித்தது.


இவ்வாறு பல் பொருள் தமிழில் உள்ளன. இவற்றை உணர்த்துவது இச்சொல்.

இக் கூட்டுச்சொற்களில் சிலவற்றில் வல்லெழுத்து  மிக்குவரவேண்டும் என்பார் உளர்.  எ-டு: இந்துக்கமலம். 



அறிக மகிழ்க

மெய்ப்பு பின்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.