Pages

புதன், 20 மார்ச், 2024

சக்கரம், சக்கரதாரி, சக்கராயுதம், சக்கரவர்த்தி.

 வண்டியே இல்லாத காலம் ஒன்று இருந்தது.  அந்தக் காலத்திலும் தமிழும் தமிழனும் இருந்தமை  வரலாறு  ஆகும்.  "கல்தோன்றி  மண்தோன்றா"  என்ற தொடரை,  கல்லையும் மண்ணையும் கடந்து   வீடு மாடு வண்டி எல்லாவற்றையும் மேற்கொண்டு வாழ்வு முன்னேற்ற மடைந்த கால ஓட்டத்தையும் உள்ளடக்கிய மொத்த வளர்ச்சியையும் குறித்ததாகவே   கொள்ளவேண்டும்.    கற்பனை செய்தாலே கண்டுணர முடிந்த,  எல்லாம் எழுத்துக்களிலே அடங்கிவிடாத நீண்ட வரலாறு உடையோர் தமிழர் என்பதைச் சிந்தித்தே உணர்தல் கூடும்.  சொற்களை ஆய்வு செய்கையில்  இதனை மறந்து ஆய்வில் தொய்வுற்றுவிடாத திண்மை ஆய்வாளனின் பான்மையில் நிற்றல் வேண்டும்.  தமிழரின் வரலாறு பற்றிச் சொற்களின் மூலம் சில தரவுகளை நாம் உணர முற்படுகையில், ஏனை மொழிகளையும் மொழியினரையும் நாம் குறைத்து மதிப்பிடுவதாகப் பொருள்படாது என்பதை முன்பதிவு செய்துகொள்ளவேண்டும்.

சக்கரம் இல்லாதது வண்டி என்று நாம் சொல்வதில்லை.  சக்கரம் இல்லாத காலத்தில் ஒரு பொதிபெட்டி  இழுத்துச்சொல்லப்படவேண்டும்.  அல்லாது உள்ளிருக்கும் பொருளோடு தூக்கிச்செல்லப்படவேண்டும். அல்லது இறக்கை கட்டிப் பறந்து செல்லுமிடத்தைக் குறுகவேண்டும்.  பண்டையர் இவை எல்லா முறைகளையும் ஏற்புழிப் பயன்படுத்தியிருப்பர்.  கயிறு கட்டி இழுத்தும் சென்றிருப்பர்.  இழுக்குங்கால் பெட்டியின் கீழ் மரச்சட்டம் சறுக்கிச் செல்லும். இவ்வாறு சறுக்குங்கால்  அச்சட்டம் தேய்ந்து அதிக நாள் நிலைக்காது இதை மாற்றவே உருளைகள் கண்டுபிடிக்கப் பட்டன. சறுக்கும்போது தேய்மானத்தைக் குறைக்க,  சக்கரம் கண்டுபிடித்தனர்.  இதைத் தமிழ்மொழியே நன்கு  தெரிவிக்கிறது.

சறுக்கு + அரு+ அம். 

சக்கரம் சரிவளைவாக இருந்தாலன்றி உருளாது. எவ்வளவு காலத்துக்குப் பின் உருட்சி கைவரப் பெற்றனர் என்பது தெரியவில்லை. சக்கரம் சுற்றவும் கழன்று விடாமல் இருக்கவும் இரும்புப் பாகங்கள்  தேவை.   உருளாத சக்கரங்களெப்போது உருண்டன?

உருளைக்கு முந்தியது சறுக்கரம்.

திணறுதல் வேண்டாம்.

அருகு -  இது அண்மை குறிக்கிறது.   அருகில் :  இட அண்மை தெரிவிக்கிறது. அருகு என்பதில் கு என்பது வினையாக்க விகுதி.

அருகுதல்: குறைதல்.  இங்கு தொலைவு குறைதல். 

அருகுதல் என்பது கூடுதலையும் குறிக்குமாதலால்,  இடன் நோக்கிப் பொருள்கொள்ளவேண்டும் என்பதை உணர்க.

எடுத்துக்காட்டு: இறைவன் பற்றனை நோக்கி அருகில் வருகிறான்.  அப்போது அவனுக்கும் பற்றனுக்கும் உள்ள தொலைவு குறைகிறது.  அவனுக்கு அவன் வழங்கும் அருள் கூடுகிறது. உங்கள் சம்பளத்தைக் குறைத்துவிட்டால், உங்கள் பொருளியல் நெருக்கடி கூடிவிடுகிறது.  இதைப்போல்தான் சொற்களும் பொருண்மையில் கூடுதல் குறைவு காட்டுகின்றன. உலகம் இது. 

சறுக்குத் தேய்மானத்தைக் குறைத்து  போமிடத்துக்கு அருகில் செல்லும்  அமைப்பு  என்று இந்த மூன்று துண்டுக்  கிளவிகளையும் வாக்கியமாக்கி இந்த வரலாற்றை உணர்ந்துகொள்ளலாம்.

சறுக்கரம் என்பது  று என்பது குன்றி அல்லது தொக்கி நிற்க,  சக்கரம் என்றானது.

சகடு என்றால் வண்டி,  சறுகி  ( சறுக்கி)  அடுத்துச் சென்று சேர்வது சறுகு+ அடு> சறுகடு >  சகடு  ஆகி,  வண்டி என்ற பொருளில் வழங்கிற்று.

சக்கரம், சகடு இன்னும் சில  சகரத்தில் தொடங்கும் சொற்கள்.  று என்பது குன்றிற்று,  இது தமிழாக்க உத்தி. இடைக்குறை ஆகும்.  கவிதையில் எதுகை மோனைக்காகக் குறைத்து இசையொடும் புணர்ப்பது கவிஞனின் உரிமை. poetical license.  பலமொழிகளிலும் உண்டு.  உங்கள் அப்பன் என்பதை ங்கொப்பன் என்பதும் குறுக்கம். ஆனால் பேச்சுக் குறுக்கம்.  எங்க ஆயி என்பதை     ஙாயி என்பதும் காண்க.

வண்டி என்ற சொல் வள் என்ற அடிச்சொல்லிலிருந்து வருகிறது.   வள்> வண். ஒப்பிட இன்னொரு சொல்: பள்> பள்ளு   ( பாட்டு).  பள் > பண்  ( பொருள் பாட்டு).

வள்> வண்> வண்+ தி>  வண்டி.    

வள் என்ற வளைவு குறிக்கும் அடிச்சொல்  வண் என்று திரியும்.  வள் என்பதற்கு வேறு பொருண்மைகளும் உள.  அவை ஈண்டு பொருட்டொடர்பு இல்லாதவை.

இந்தச் சொல்.  வளைவான உருளைகள் பொருத்தப்பட்ட செல்திறப் பளுவேந்திப் பெட்டியைக் குறிக்கிறது.  ஆகவே இது சக்கரம் கண்டுபிடித்த காலத்துக்குரிய சொல்.  இந்தப் பளு என்பது பொருட்பளு, மனிதப்பளு இரண்டினையும்  அடக்குவதாகும்.  வண்டி சுமக்கும் எதுவும் பளுவாகும்.

சக்கரம் உடைய வண்டி,  நடப்பதினும்   விரைவு உடையது..  இறைவனும் பற்றனுக்கு ( பக்தனுக்கு)த்  துன்பம் நேர்கையில் விரைந்து வருவான்.  இந்த நம்பிக்கையையும் துணிவையும் படிபலிக்கும் வண்ணமாக இறைவனுக்குச் சக்கரம் நாட்டி  அவனைச் சக்கரதாரி என்றனர்.  அவன் விழைந்த காலை அச்சக்கரம் வந்துவிடும்.  அதைத் தரித்துக்கொண்டு,  அவன் பற்றனுக்கு உதவுவான், உதவினான், உதவிக்கொண்டிருக்கிறான்.  ஆகவே அவன் சக்கரதாரி  அல்லது சக்கரபாணி  ஆயினான்.   அவனின் கருவிகளில் சக்கரம் ஒன்றானது.  இது  சக்கரமும் ஓர் மனித நாகரிகத்தில் ஒரு முக்கிய ஆயுதம் ஆனதைத் தெரியக் காட்டுகிறது.  இது மனிதப் பரிணாமவளர்ச்சியைக் காட்டுகிறது.

தமிழில் இறைவன் என்ற சொல் மன்னனையும் குறித்தது.  மன்னனும் தெய்வத்திற்கு அடுத்து மதிக்கப்பட்டான். இறைவன் கொல்லும் அதிகாரம் உடையான் அதுபோல் மன்னனும் ஒருப்படாமல் நின்றோரை ஒறுத்தான்.  சக்கரத்தை அவனும் வருவித்துக்கொண்டதால், சக்கரவருத்தி  ஆனான்.  எடுத்துக்காட்டு:  அசோக சக்கரவர்த்தி.   வருத்தி > வர்த்தி.   வருகிறான், வர்றான் என்பதுபோலும் குறுக்கமே. வரு> வர். மன்னனே மற்றோரினும் வலியோன் என்பதை இது காட்டுகிறது.

இச்சொற்கள் வீட்டுமொழியிலும் பூசைமொழியிலும் வழங்கி மொழிவளம் பெருக வகைசெய்தன.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.