Pages

சனி, 30 செப்டம்பர், 2023

ஆண் என்ற சொல்லமைப்பு.

இப்போது  " ஆண்"  என்னும் சொல்லை அறிந்துகொள்வோம்.   அதாவது நாம் இச்சொல் எப்படித் தமிழில் அமைந்தது என்று தெரிந்துகொள்ள முனைகிறோம்.  மற்ற விளக்கங்களை எழுதப் பலர் உள்ளனர்.  இன்னொருவர் சரியாக அமைப்பினை விளக்கியிருந்தால் அதையே மீண்டும் எழுதவேண்டியதில்லை.  அதைப் படித்தே அறிந்துகொள்ளட்டும்.  தமிழின் இனிமை நீங்கள் அறியவேண்டும் என்பதற்காகவே எழுத முனைவதால் மறு அயற்பதிவுகள்  இங்கு இடம்பெற மாட்டா.   மாறுபடின் எழுதப்படும்.

ஆண் :இதன் அடிச்சொல்  அண் என்பது.

அண் >  அணுகு என்ற ஒரு வினைச்சொல் போதுமானது.   இதே பொருளினைத் தரும் வேறு வடிவங்களைச் சொல்ல வேண்டியதில்லை.  சுருக்கம் கருதித் தவிர்ப்போம்

அண்  என்பது முதல் நீண்டு,   ஆண் என்றாகும்.   அதாவது பெண்ணை அணுகுபவன்.  தமிழனின் கலையாக்கச் சாரங்களும்  இதையே ஏற்புடையது என்று கொள்ளும் என்று அறிக.

சுடு என்பது முதல் நீண்டு,  சூடு ஆகி தொழிற்பெயரானது போல  அதே பாணியில் அமைந்ததே இச்சொல்.  அண் :  அணுகு  ( வினையாக்கச் சொல் ),    அண் -   ஆண். ( அணுகும்  வகையினன் அல்லது வகையினது  என்பது).

ஒளி குறிக்கும்  ஒள் -  ஒண்  என்ற அடிகள்.  ஓண் என்று நீண்டு,  பின் அம் விகுதி பெற்று ஓணம் என்ற நட்சத்திர  ( உடு)ப்  பெயரானது.  [ நக்கத்திரம் ].  ஒரு பகுதி ஆண் என்ற திரிபினை ஒத்தது காண்க. இது பின் திருவென் அடைமொழி ஏற்றது. இதிற் பிறந்தோர் நற்குணமுடையோராய் இருப்பார்கள்.

ஆங்கிலச் சொல்  male என்பது  maris என்பதிலிருந்து வந்ததென்பர். ( Genitive case). இது  "ஆண்மை "  உள்ளது என்று பொருள் படுவதாகச் சொல்லப்படும். என்றாலும் இது மருவுதல் என்ற தமிழ்ச்சொல்லுடன் தொடர்புடையதாகக் காட்டப்பெறுதலும் கூடும்.   மரிஸ் >  மருவு.  வு என்பது வினையாக்கம்.  பிள்ளைப் பேற்றுக்குரிய மறுபாதி உடலுடையது அல்லது "உடலன்."  பெண்மையை மருவும் பாதி.

Man என்பதும்  மாந்தன் என்பதிலுள்ள  மான் என்பதனுடன் ஒப்புடைமை தெரிவிக்கும் சொல்.  மன்> மன்+து+ அன் >  முதல் நீண்டு, மாந்தன்,   மன்+தன் > மனிதன், (மன்+ இ+  து + அன்).  இ, து என்பன இடைநிலைகள்.  அடிச்சொல் மன் என்பதே.  மன்னுதல் -  நிலைபெறுதல்.  மான்  (மேன்) என்பது இருபொருட் சொல் என்பது நீங்கள் அறிந்தது ஆகும்.

மனிதன் மண்ணிலிருந்து வந்தவன் என்ற கருத்துக்கும் மனிதன் என்பது பொருத்தமான சொல்லே ஆகும்.   மண் >  மன்.   மண்ணே நிலைபெற்றது.  0னகரம்  ணகரமாகும்.  எ-டு:  அணுகுதல் என்பதிலிருந்து,  அண்>  அன் >  அன்பு. இங்கு பு என்பது விகுதி.   அணுக்கமே அன்பின் வெளிப்பாடு.

மேன் (மான்) என்பது பெண்ணையும் குறிக்கும்.  சர்ச்சில் கூறியதுபோல்,  "Man embraces  ( includes) woman".  பல சட்டவரைவுகளில்  person என்ற சொல்லைக் காணலாம். இது உண்மையில் முகமறைப்பு  (mask) என்று பொருள்தந்த சொல்லினின்று பொருள்திரிந்து வந்த சொல் என்பர். (also see dramatis personae).

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


வெள்ளி, 29 செப்டம்பர், 2023

பாதுகை - இரண்டு ஆவது.

 பகு என்ற வினைச்சொல்,   குகரம் இழந்து,  பா  என்றாகும்.  இதற்கு நேராக ஒரு திரிபினைக் காட்டாமல் விளக்கலாம்.  ஒரு புல்தரையில் மனிதர்கள் ஒரே தடத்தில் நடக்கிறார்கள்.  அந்த இடத்தில் புல் இல்லாமை உண்டாகிறது.  இதன் விளைவு,  நடுவில் ஒரு பாதை வந்துவிடுகிறது. இதை நாம் அறிந்து கொள்கிறோம். அப்பால் இருபுறமும் பகுதலால்,  நடுவில் உள்ளது பாதை எனப்படுகிறது.

இந்தச் சொல் அமைந்த அடிநாளில் பகுதை என்றிருந்திருக்கலாம்.  இதிலுள்ள பகு என்பது பா என்று திரிந்துவிட்டது.  பகுதை என்று ஒரு சொல் இருந்ததா என்பதை இப்போது அறுதியிடமுடியாது. எந்த மொழியானாலும் பழையன கழிந்திடுதல் நடைமுறை. பழையன பாதுகாக்கப்பட்டிருந்தால் அதற்கு எழுத்து மொழியின்  நிலைக்கப்பிடித்தல் காரணமாகவேண்டும்.  எழுத்துக்கள் மிகுதி காலமும் ஏற்படாமல் கழிந்த மொழிகளில்,  என்ன உறுதி  என்றால்,  தொடக்க காலச் சொற்களை அறிந்து அறிவுறுத்தல் என்பது முற்றும் முயற்கொம்பே  ஆகும்.

செந்தமிழ் நீண்ட இலக்கிய வரலாறு உடைய மொழி என்றாலும்,  செந்தமிழும் நாப்பழக்கம் என்பதும் உண்மையன்றோ?   ஆகவே பகு என்பது  பா என்று கு என்ற வினையாக்க விகுதியை இழந்ததா?  அல்லது பா என்பதுதான் பகு என்று குறுக்கமடைந்ததா என்பது ஆய்வுக்குரியது.  அதை இங்கு ஆராயவில்லை. இதை ஆராயமலே,  பகு என்பதும் பா என்பதும் திரிபுகள் என்று நிறுத்துவதே போதுமானது. விடுபாடுகளும் நல்ல உத்திகளாகலாம்.

இன்னும் சில கேள்விகள் எழலாம்.  அவை நிற்க.

பகுதல்,  பகுத்தல் என்பவை  என்ற  இரண்டும் பொதுவாகப் பா என்ற திரிபினை அடையத் தக்கவை.

பாதைக்கு இரு மருங்கு என்று இரண்டு ஆதலே போல,  பாதுகையும் இரண்டு உருப்படிகளாகவே  வேண்டும்.   இதுவும் பகுதுகை அல்லது பகுத்துகை என்றே தோன்றிப்  பகு என்பது பா என்றாகிப்  பாதுகை என்றாகியிருக்கும்.  ஒரு சோடியாகவே இருக்கும்.  இதை விளக்கமலே  பாதுகையின் மூலம் பகு அல்லது பா என்றே முடிவு செய்துவிடலாம். 

துகை என்பது தொகையாகவோ அன்றி  து + கை (இடைநிலை மற்றும் விகுதி) யாகவோ இருக்கட்டும்.

பா - இருபகுதிகளாகி  துகை - ஒன்றாக அணியப்படுவதனால்  பகு, பா என்பனவே  அடிச்சொற்கள்.  அக்காரணங்களை நாம் அலசவேண்டியதில்லை. தொகை - துகை  திரிபு.  அதாவது பகுதொகை -  பாதுகை  ஆனதென்பது.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்.




திங்கள், 25 செப்டம்பர், 2023

காசநோயும் பெயரும்

 காசநோய் காரணமாக இவ்வுலக வாழ்வைக் கடந்து சென்றுவிட்டவர்கள் பலர். இவர்களிற் பெரும்பான்மையோர் பல்வேறு துறைகளில் நற்சேவை புரிந்துகொண்டிருந்தவர்கள். பலர் இனிய கானங்கள் பாடி நம்மை மெய்ம்மறக்கச் செய்யும் திறனுடையார். இத்துணை இனிய குரலுக்குரியோரையும் இளமையிலே கொன்று விட்டதே இந்நோய் என்று மனம் கவல்கின்றோம்.  இன்னும் பல திறலோர் மடிந்துள்ளனர்.  உலக உடல்நலத் துறை நிறுவனம் இதிற் கவனம் செலுத்திவருகின்றமை அறிந்து நாம் ஆறுதலடைகிறோம். செல்வமுடையாரும் சிறந்த மருத்துவ அறிஞர்களும் இதற்கு ஏதேனும் செய்வார்கள் என்று நம்புவோம்.

திரிபுகள் இல்லாத மொழிகள் இல்லை என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.  எடுத்துக்காட்டாக,  ஜீசஸ் கிரைஸ்ட் என்ற ஆங்கிலம், ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு வகையில் திரித்து வழங்கப்படுகிறது.  இது ஜீசஸ் கிரைஸ்ட் என்று பலுக்க இயலாமை காரணமாக இவ்வாறு மாறிவிடுகிறது என்று சொல்லலாம் என்றாலும் மனிதர் எல்லோரும் இவ்வாறு நாவொலி எழுப்பும் திறனற்றவர்கள் என்பது  அவ்வளவு பொருத்தமுடைய காரணியாகத் தோன்றவில்லை. ஒவ்வொரு மொழியிலும் ஓர் ஒலிமரபு  உள்ளது.  தாங்கு என்பது தமிழுக்குப் பொருத்தமென்றால்  அதேசொல்லுக்கு ஈடான மரபுவழியில்  : "தாங்" என்று வெட்டுற நிறுத்துவதே  சீன மொழிக்கு பொருத்தமான ஒலிப்பு  ஆகும்.  இஃது ஒலிப்புக்கு மட்டுமே,  பொருள் எதுவாகவுமிருக்கலாம்.  ஏசு கிறிஸ்து என்பது,    ஹேஸு  க்றிஸ்டோ  என்றால்தான் தகலோக் மொழிக்குப் பொருத்தமான ஒலிப்பு முறையாகிறது.  சீனமொழியில் இது ஜேஸு  ஜிடு  : அதாவது ஏசுவானவர் நம் பாக்கியத்தால் (நற்பேற்றினால்)  நம் முன் தோன்ற நாம் அவரைத் தமிழில் "  ஏசு அவர்களே"  என்று பணிய,  நம் பக்கத்தில் நிற்கும் சீனர் "யே சூ ஜி டூ "  என்றுதான்  மொழிந்தாடுவார்.  முகம்மது நபி அவர்களுக்கு முவம்மர் என்றும் மாமூட் என்றும் அரபு  அல்லாத பிற திரிபுகள் உள்ளன.  டேவிட் என்பது டாவுட் ஆக,  ஏப்ரஹாம் என்பது இப்ராகிம்  ஆகிவிடுகிறது.  டேவிட் மார்ஷல்  என்ற பெயர்,  சீனமொழியில் தாஹ்வே  மார்சியாவ்  என்றாகிவிடுகிறது.  சோலமன் என்பது சுலைமான்  ஆகிவிடும்.  சோலமன் என்பது தமிழ்நாட்டில் சாலமன் என்றாகிறது.  இத்தகைய மாறாட்ட ஒலிப்புகளால்  புடு ஜெயில் என்பது புது ஜெயிலா பழைய ஜெயிலா (சிறை) என்று தெரியவில்லை.  மாசிலாமணி என்பதில் மா சி  என்பது சீனமொழியில் குதிரை  செத்துவிட்டது என்று பொருள்தருவதால்,  சரியில்லை  எனவே,  மணி என்றே அழைக்கப்பட்டார்.

காசம் என்ற சொல்லை,  காய நோய் என்பதன் திரிபு என்பது ஏற்கத்தக்கதாகலாம் .  காய என்பது காச என்றாகும்.  இந்த நோயில் காய்ச்சல் வருமாம்.   ஆனாலும் இருமல் மூலம் இரத்தக் கசிவு இருப்பதால்,  கசி+  அம் > காசம்  என்பதன் திரிபு என்பது பொருந்துவதாகும்.  இது படி+ அம் = பாடம் என்பதுபோலவே.  நடி+ அகம் என்பது நாடகம் என்பதாவது போலவுமாம்.   முதனிலை திரிந்து தொழிற்பெயர் ஆன சொல்.  முதனிலை திரிவதாவது படு> பாடு,  சுடு> சூடு என்பது போல.  ஆடுறு தேறலாவது அட்ட தேறல்.  ஆடுறல், சமையலுற்றது என்பதாகும்.. மசிக்கப்பட்ட அரைப்பு,  மசாலை.  ( மசாலா). மசிக்கப்படுவதால் ஆனது.  மசி+ஆல். இவற்றுள் வினை இறுதி இகரம் கெட்டது.

மதி அம் > மாதம் > மாசம்  ( த: ச திரிபு).  இங்கும் இகரம் கெட்டது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


வியாழன், 21 செப்டம்பர், 2023

சிப்பாய் என்ற ஆங்கிலச்சொல்.

 இன்று சிப்பாய் என்ற ஆங்கிலச் சொல்லை ஆய்வு செய்க.

பாரசீக வளைகுடா நாடுகளிலிருந்தோர், அங்கிருந்து வெளிப்போந்து பல இடங்களுக்கும் சென்றுள்ளனர். அங்கு மிங்கும் நடைபெற்ற போர்களில் சேனைச் சேவகர்களாய் வேலைசெய்து  சம்பாதிப்பதே இவர்களின் நோக்கமாகும்.  வெற்றி அடைந்தாலும் அடையாவிட்டாலும் விலையுள்ள பொருட்களைக் கவர்ந்து செல்வது பண்டை நாட்களில் படைஞர்களிடம்  பொதுவான காணப்பட்ட நடவடிக்கையாகும். இதுவே பெரிய ஊதியமெனலாம். அழகிய பெண்களைக் கவர்ந்து சென்றுவிடுவதும் பரிசுகளில் முதன்மையானதாக அவர்கள் கருதியதே  ஆகும்.

வெள்ளைக்காரர்கள் வந்துசேர்ந்த பொழுதும் அவர்கள் உள்நாட்டி லுள்ளவர்களைத் தம் படைகளிற் சேர்த்துத்தான் போதுமான ஆள்பலத்தை அடையவேண்டியிருந்தது. இந்திய நாட்டுப் படைமறவர்கள் உருவிற் சிறியவர்கள். வெள்ளைக்காரர்களின் முன் இவர்கள் சிறு பையன்களாகவே காட்சியளித்தனர்.

இந்தப் பையன்களை எவ்வாறு குறிக்கலாம் என்னும்போது " சிறு பையன்" என்றே  அழைத்தனர். சி - பை என்பதே இவர்களைக் குறிக்கும் சொல்லாகக் கையாளப்பட்டது.  இதுவே எல்லாத் தொடர்புடைய மொழிகளுக்கும் பரவிற்று.

சி - சிறு;  பை -  பையன்.  இது "சீ போய்", அல்லது "சீ பாய்"  ஆனது.  தமிழில் இது குறுகிச்  சிப்பாய் ஆயிற்று. இது ஆங்கில மொழிக்கும் பொருந்தியதாய் அமைந்தது.  சி - சிமால்,  பாய் . boy,

பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோன்ற பொருத்தம் இதுவாகும். 

பாரசீகம் வரை பரவிவிட்ட இச்சொல்லின் திரிபுகள்  வெறுந்திரிபுகளன்றி மூலங்கள் என்று கருதக் காரணமில்லை.  இந்தியச் சிப்பாய்களின் புகழ் எங்கும் பரவியிருந்தமையே இப்பரவுதலுக்குக் காரணமாகும்.

அறிக மகிழ

மெய்ப்பு பின்னர்.

மீள்பார்வை செய்யப்பட்டது: 22092023

திங்கள், 18 செப்டம்பர், 2023

"செம" : மிகுதிப் பொருள் "செம்மை" யா?

 "வட்டி  செம  ஏற்றமாக அந்த வங்கியில் உள்ளது"  என்று பேசப்படுவதை கேட்கின்றோம்.  எல்லா வங்கிகளிலும் அப்படியா,  அந்த வங்கியில் மட்டுமா என்று அவருடன் உரையாடுபவர் கேட்பதில்லை. பேசுபவர்க்கும் தெரிவதில்லை.

செம என்பது செம்மை என்பதன் திரிபாகக் கொள்ளவும் பொருட்பொருத்தம் தெளிவாக இல்லை.

சுமை என்ற சொல் இருக்கின்றது. சுமைகாரன்,  சுமைகூலி  ( செமகூலி என்ற பேச்சுவழக்கின் எழுத்துவடிவச் சொல் ).  சுமைகூலி என்பதற்கு இப்போது இன்னொரு சொல்:  " எடுகூலி". (தூக்குகூலியுமாம்).

சுமைகூலி என்பதை வலிமிகுத்து  " சுமைக்கூலி" என்றும் சொல்வதுண்டு:  "சுண்டைக்காய் கால்பணம் ,  சுமைக்கூலி முக்கால் பணம்"  (பழமொழி).  

இவ்வாறு வலிமிகுத்தும் மிகாதும் வருமென்பது  தெரிகிறது.

வலி மிகவேண்டிய இடங்களில் மிகாமல் காத்து எழுதுவது இப்போது மிகுதியாய்க் கடைப்பிடிக்கப் படுகிறது. வல்லான் வகுத்தது வாய்க்கால் என்பதில் வல்லான் ஒருவனாக இருந்த காலம்போய்,  மக்கள் என்போரை ஒருவனாயும் வல்லானாயும் கருதும் நிலை வந்துவிட்டது.  நெடுங்காலமாகப் பல திரிபுகள் முன்னர் எதிர்க்கப்பட்டுப் பின்னர் ஆட்சி பெற்றுவிட்டமையானது தெளிவாகத் தெரிகிறது.   வல்லான் ஒருவன் என்பது ஒரு கற்பனை!  அவன் ஒருவனல்லன், பலர்.

ஒரு காலத்தில் ஒன்பதுக்குத் தொண்டு  எனப்பட்டது.  பின் தொண்பது என்னும் எண் ஒன்பது ஆயிற்றென்பர்.    ஒன்+பது என்பதால்,  பத்தில் ஒன்று குறைவு ஒன்பது ஆனது என்பர்.  அஃதிருக்க,  ஒன்பதுக்கு அப்புறம்  பத்து என்று இனி ஓர் எண்ணிக்கை தேவைப்பட்ட போது, தமிழர்  பல் - பல என்ற சொல்லினின்று அதைப் படைத்துக்கொண்டனர்.   பல்து > ப+ து >  பத்து ஆனது.  பல் என்ற ஈரெழுத்துச் சொல், ப என்று கடைக்குறையானது.  இதை இன்னொரு வகையில் பல்து > பற்று> பத்து  எனலாம்.  வல்லோர் பலர்,  பற்று என்பதைப் பத்து எனலாகாது என்று போராடியிருந்தாலும் அவர்கள் எல்லோரும் தோற்றுப்போயினர்!!  பற்று என்பது பற்றிநிற்கும் ஆசையை  அன்றோ குறிக்கவேண்டும் என்ற வாதம் தோற்றுவிட்டது. பற்று என்பது பத்து என்ற எண்ணைக் குறிக்கும் நிலை காணப்படவில்லை.  இருந்திருக்கலாம், நமக்குக் கிடைக்கவில்லை.  புலவர் காலமானபின் அவர் சேர்த்துவைத்திருந்த பழம்பதிவுகள்  எறியப்பட்டமையே  இயல்புநிலை ஆகும். 

கழுத்திருத்தல் என்பது சுமை என்பதற்கு இன்னொரு வரணனைச் சொற்றொடர்.   கழுத்து+ இருத்து + அல்>  கழுத்திருத்தல். இருத்து~(தல்) -கழுத்தை அழுத்தும் சுமை வை(த்தல்)  .   கோப்பு என்பது சுமைக்கு இன்னொரு சொல். இப்போது file  என்ற ஆங்கிலத்தை மொழிபெயர்க்கப் பயன்படுகிறது.  அரத்திற்கும் அது பெயராவதுடன், ஆங்கிலத்தில் வினைச்சொல்லாகவும் பயன் தருவது ஆகும். பலவற்றையும் ஒரு பைக்குள் கொட்டினால் சுமை மிகுதலால், கொட்டியான் என்பது சுமைதூக்குவோனுக்குச் சொல்லானது. காய்கறிகளும் பைக்குள் கொட்டப்பட்டுக்  கொண்டுசெல்லப் படுதலால்   கொட்டியான் என்பது காய்கறிகளையும் குறித்தது.  அரசர்கள் இவற்றை வாங்கி அலுவலர்களுக்கு இனாமாக அளித்தனராதலால், இவை படித்தரம் ஆயின.  ( படியாகத் தரப்படுவது படித்தரம் ).   இன் என்பது  உரியது, உரியன குறிக்கும் பழஞ்சொல். ஆம் என்பது ஆவது  ஆகும் என்று பொருள்தரும்.  இனாம் -  உரிமையாகத் தரப்படுவது. Don't always think of the word : "free".  Nothing is for free,  said our Statesman Mr Lee Kuan Yew. ( Someone had to work for it to be produced). கொடுப்பவன் வணிகன் அல்லன் ஆதலால்,  விலையின்றி என்ற வருணனைச் சொல் தேவைப்படவில்லை. Among factors of production, Labour has its own dignity and importance. Capital has its own. "எனமா", "எனாமா" என்பவை தவறான திரிபுகள். அறிக.  ஆனால் ஆய்வுக்குப் பயன்படலாம்.

சுமைதாங்கி என்பதைச் செமதாங்கி என்றும் சொல்வதால்,   செம என்பது பேச்சுவடிவச் சொல்.  இது சுமை என்பதன் திரிபே ஆகும்.

Heavy என்பதும் ஆங்கிலத்தில் மிகுதி குறிப்பதுண்டு.  எ-டு:  heavy rain. மற்ற மொழிகளிலும் இதைக் கண்டறியலாம்.  எடுத்துக்காட்டு:  மரமி   - (தகலோக் மொழி)  heavy (meals).  மிகுதியாய் ( உண்ணல்).

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்னர்.



பூசுரர்

 பூசுரன் என்ற சொல்லை இப்போது கவனிப்போம்.

சொற்கள் சில ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பிரித்தறியத் தக்க உள்ளுறைவு உடையனவாய்  உள. இவ்வாறான சொற்களை அங்ஙனமே பிரித்தறிதல் அறிவுடைமை.  ஒரு பொருளையே வலியுறுத்தல் அறிவுகோடுதல்  ஆகும்.

பூ + சுரன் என்றும் பிரிக்கக் கூடும்,  பூ -  மலர்.  சுரன் =  ஊற்றாகுபவன்.. நல்லோன்.  இதனை நற்குண நற்செய்கைகட்கு வெளிப்பாடாக இயல்பவன் என் க.

பூசு + உரு +  அன்  -  பூசுரன்,    ஓர் உகரம் கெட்டது;  இரண்டாம் உகரமும் கெட்டது;   இவ்வாறு:

பூச் + உ  ,  ர் + உ,  ன் ஆண்பால் விகுதி.

பூ + சு+  ர +   ன்

பூச்+ உர  + ன்

பூசையின்போது சந்தனம் அல்லது வேறு பூசைக்குரிய அரைப்புகள் சிலைக்கு பூசப்படும் அல்லது அப்பப் படும்,  அதுபின்  நீரினால் கழுவப்பட்டு,  பூச்சுகள் விலக்கப்படும்,  இதைச் செய்வதால்,   பூசி உருக்கொடுப்பவர் என்னும் பொருளில்  பூசுரர் என்னும் சொல் உருவானது,   பின் இது வேறுவகைகளிலும் விளக்கப்பட்டது,  பூசையின்போது பூசி உருக்கொடுப்பதே இச்சொல் எழக்காரணம்  ஆகும்,  உருக்கொடுத்தல் சொல்லாலும்  நடைபெறும்.

பூச்சால் உருக்கொடுத்தல்,  சொல்லால் அல்லது அருச்சனையால் உருக்கொடுத்தல் என உருக்கொடுத்தல் இருவகை.

தமிழென்பது வீட்டுமொழி.    சமஸ்கிருதம் என்பது பூசைக்குரிய மொழி.  பூசாரிகள் பயன்படுத்தியது.  இந்தோ ஐரோப்பியமென்பது பிற்காலத்தில் வெள்ளைக்காரர்கள் இயைத்துகொண்டது ஆகும்.  ஆரியர் என்று பெயரிய வெளி இனத்தவர் யாருமிலர்.  ஆரியர் என்பது ஆர் என்ற மரியாதை விகுதி ( பன்மை விகுதி) பெறுந்தகைமை உடைய மதிக்கப்பட்ட உள்ளூரார்.  பனியால் வெளுத்த தோலர்கள் அல்லர்.  பழைய நூல்களைப் பாதுகாத்து வைத்திருந்த இலக்கியவாதிகள். இந்தக் காப்பியக்குடியினர் இல்லாமற் போனதால் பல நூல்கள் இறந்தன.

பூச்சொரிதல் என்ற சொற்றொடரையும் கருத்தில் கொள்வோம்.  சொரி + அர் = சொரர் >  சுரர் என்றும் திரியும்.  இங்ஙனம் திரிந்த சொற்கள் பல.  பழைய இடுகைகளைப் படித்து ஒரு பக்கத்துக்கு ஒருவகைத் திரிபாகப் பட்டியலிட்டுக் கொள்க. இவற்றுள்  ஒலகம் '> உலகம் போன்ற பேச்சுத் திரிபுகளைபும் இட்டுக்கொள்ளுங்கள்.  கொடி - குடி என்ற சொற்களின் தொடர்பும் அறியற்பாலதே. நாளடைவில் திரிபுப் பட்டியல்களெல்லாம் விரைந்தினிது உங்கள்பால் தொழில்கேட்டு அடிமைகளாம். இப்போது நாம் பட்டியல்கள் பார்ப்பதில்லை. அவை காணாமற்போய்விட்டன.இவ்வளவு போதும்.  இவ்வாறு பூசுரர் என்பதற்கு வேறு திரிபுகளும்  பொருந்த நிற்பன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


சனி, 16 செப்டம்பர், 2023

நீசம், நீச்சம், நீக்கற் பொருள்

 இனி,  நீசம் ,  நீசன் என்ற சொற்களையும்  ஒப்பீடாக  நீச்சன் என்ற சொல்லையும் காண்போம்.

இதில் உள்ள நீ என்ற அடிச்சொல்,  "ஏற்புடைமையின் நீங்கிய" என்று பொருள்தருவதாகும்,  நீ என்ற முன்னிலை ஒருமையும்கூட, " பிறனின் நீங்கிய முன்னிற்பவன்" என்ற பொருளுடையதாய் இருக்கிறது.  இதைச் சொல் லமைப்புப் பொருளுடன் கூட்டுவித்து வரையறுத்து உரைப்பதாயின்,  " பிறனின் நீங்கியோய்!"  என்றுதான் சொல்லவேண்டும்.  இவ்வாறுகூறவே,  நீக்கப் பொருள் முற்போந்து நீ என்பதன் பொருள் தெளிவாய் வருமென்பதறிக.

ஆ என்பதிலிருந்து  ஆசு  என்ற தமிழ்ச்சொல் பிறந்தவாறே,  நீ என்பதிலிருந்து நீசு என்ற அடிச்சொல் தோன்றுகிறது. சு என்பதொரு விகுதி.  இவ்வாறு சு விகுதி அமைந்து வழக்கத்திலுள்ள ஒரு சொல் "பரிசு".  பரிந்து தருவது அல்லது பரிவுரையின்பேரில் தரப்படுவது.  நீசு என்ற அடிச்சொல் முழுச்சொல்லாய் வழக்குப் பெறவில்லை, (அல்லது அவ்வாறு வழக்குப்பெற்ற நூல்கள் இன்று எமக்குக் கிடைக்கவில்லை.  ) அதனை இன்று நீசன் என்ற அன் விகுதிபெற்ற சொல்லினின்றே  அறியமுடியும்.   ஆனால் காத்தற்குரியது என்று  அமைப்புப் பொருள் போதரும் காசு என்ற பணம் குறிக்கும் சொல்,  சு விகுதியுடன் தமிழில் நன்கு வழக்குப் பெற்றுவிட்டது.  இதற்கு நாம் நன்றி தெரிவிப்பது  பணநாதன் என்போனுக்கே  ஆகுதல் காண்க.

இவைபோலமைந்த இன்னொரு சொல்:  ஊசு.   ஊ என்பது முன்னிருப்பவற்றில் முதலில் களையப்படும் பொருள் என்ற அர்த்தமாகும். இங்கு சு என்பது வினையாக்க விகுதியாய் வருகிறது.  ஒருகூடை பழங்களில் ஊசுவதே முன்னர் களையப்படுவது.   அதனால்தான்  ஊகாரத்தில் இச்சொல் தொடங்குகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.  இனி இதிலிருந்து ஊன் என்ற உடல் அல்லது தசை என்று பொருள்படும் சொல்லும்,  முன் களைதற்குரியது என்ற பொருளதே.  உயிர் எங்கு சென்றது என்பதை அறியாத நிலையில்,  ஊன்  -  அதாவது உடல் முன்னர் எரியூட்டப்படும் அல்லது புதைவுறும்.  இவற்றின் அடிப்படைப் பொருள் "முன் களை"  என்ற என்பதே.  காட்சிக்கும் முன்னது, களைதற்கும் முன்னது இவ்வுடலாம்.   தமிழ்ச்சொற்களின் பொருள் அறிந்து இன்புறுக.  நூல் செல்வதற்கு முன் ஆடைக்குள் சென்று நூலை நுழைப்பது - உ  > ஊசி   ஆகிறது.

பூசு என்ற வினையினின்று பூசணம்,  பூஞ்சனம் என்ற சொற்கள் வந்துள்ளன.  பூசி மெழுகியதுபோல் அல்லது  உள்ளிருந்து பூத்ததுபோல் தோற்றம். 

இங்கு சு என்று இறும்2  சில சொற்களைக் கவனித்தோம்.

நீசம் -  நீச்சம் என்றும் இச்சொல்லைப் பலுக்குவர்.

நீச்சாள் என்ற சொல்லுக்கு நீந்தும் தொழில் அல்லது பழக்கமுடையோன் என்

று  பொருள். ஏற்புடையோருள் நீங்கியோன் என்ற பொருளுடைமை  காணக்கிடைத்திலது.  நூல்களிற் கிடைப்பின் பின்னூட்டம் இடுக.

நீச்சன் நீந்துவோன் என்றும் பொருள்.  நீச்சு -  நீச்சல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்,

மேலும் அறிக:

நீசம்;

https://sivamaalaa.blogspot.com/2020/01/blog-post_10.html

2.  இறும்  -  முடிபு கொள்ளும்,  முடியும்

புதன், 13 செப்டம்பர், 2023

மிலேச்சர் (வெளிவரவினர்) சொல்லமைபு --- மற்றும் கபாலம்

 இன்று மிலேச்சர் என்ற சொல்லையும் அதன் அமைப்பையும் தமிழின் வழியாக அறிந்தின்புறுவோம்.

சொல் அமைந்த காலமும்  அதன் பயன்பாடு குன்றிவிட்ட பிற்காலமும் ஒன்றுக்கொன்று தொலைவு உடையதாய்  ஆகிவிடுவது,  கால ஓட்டத்தில் அடிக்கடி நிகழ்வதாகும். பயன்படுத்துவோர் கூட்டமும் அவர்களுக்கான சுற்றுச்சார்புகளும் சில வேளைகளில் வெகு விரைவாக மாறக்கூடியவை ஆகும். இது வெளிநாட்டினர் வருகைகளில் ஏற்படும் மாற்றங்களாலும் உள்நாட்டினர் வெளிநாட்டில் தங்கித் திரும்புதல்  அடையும் வேறுபாடுகளாலும் நிகழ்தல் இயல்பு  ஆகும்.

மிலேச்சர் என்ற சொல் பண்டை நூல்கள் சிலவற்றிலும்  சோதிட நூல்கள் சிலவற்றிலும் வருவதுண்டு.  பிறப்பாய்வுக்குரியவன்  (ஜா/)சாதகத்துக் குரியோன் ) ஒரு மிலேச்சப்பெண்ணைத் திருமணம் செய்வான் என்று கணியர்கள் கூறுவது அடிக்கடி கேட்கக்கூடியதே.

தம்மைப் போல் தோற்றமுடையரல்லாதாரையும்  தூய்மையிலும் கடைப்பிடிகளிலும் வேறுபடுவோரையும் சிலர் மென்மையாகக் கடிந்துகொண்டு,  விலகுதல் உண்டு.  இந்த மென்கடிதலிலிருந்தே இந்த மிலேச்சர் என்ற சொல் வருகிறது.  அடிப்படை  அமைப்புப் பொருள்,  மெல்லிய ஏச்சுக்குரியவர்கள் என்பதாகும்.

மிலேச்சரைத் தலையில் நெய்பெய்து அடக்கியதும் உண்டு,  அவர்கள் தமிழரசர்களை எதிர்த்து வந்த காலை,  இது இலக்கியத்திற் காணப்படுவது. ஒரு தீமையும் விளைக்காத போது,  இப்பபடித் தண்டிப்பதற்கு முயலாதவர்கள் தமிழர்.  அன்பின் வழியது உயிர்நிலை என்பதை அறிந்தோர் தமிழர்.

மேல் ஏச்சு  அர்  என்பது சொல்லாகி  நாளடைவில்   மிலேச்சர் என்று திரிந்தது. மே  -  மீ என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடைய திரிபுகள்.   மேலாயிற்று -  மிகுந்தது என்பவற்றுள் உள்ள தொடர்பினை அறிந்துகொள்க.  மே -  மீ.  ஒருவர்மேல் ஏச்சுரை செய்தல்.  ஒருவர் மீது என்றும் கூறலாம்.  இவ்விரண்டனுள் மேல் என்பது பேச்சு வழக்கில் மிகுவரவிற்று ஆகும்.  மேசை -  மிசை >  மீசை என்பனவும் ஆய்வுக்குரிய சொற்கள்.

தம்பால் ஏச்சுரை பெறும் தொகுதியின  ரென்பதே தமிழ்ப்பொருள்  ஆகும்.

மெல் என்பது மென்மையான என்ற பொருளைத் தருதல் கூடும். இது மென்மையான ஏச்சுரை என்பதைத் தருவது ஆகும்.

மேலும் அறிய:

சொல்:  கபாலம்.


உறுப்புகளிற் கடிய தன்மை உடையது எனின் அது  கபாலம் அல்லது தலையே  ஆகும்..  கடு + பால்  +  அம் = :  இது  கபாலம் என்று புனையப்பட்டது.  டுகரம் மறைக்கப்பட்டது.

இன்னொரு வழியில்:  https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_3.html

இரு வழிகளில் தமிழ் மூலமே காணப்படுகிறது.

சமஸ்கிருதம் என்பது வீட்டுக்கு வெளியில் -   பிற்காலத்தில் கோயில்களில்-- வளர்ந்த வழிபாட்டு மொழி.   இதிலிருந்து பல சொற்கள் எடுக்கப்பட்டு  இந்தோ ஐரோப்பிய மொழிகள் வளம்பெற்றன.  கோகினூர்  வைரமும் இந்தியாவிலிருந்து கொண்டுசெல்லப்பட்டதே ஆகும்.  நன்னூல் இலக்கணத்தையும் மொழிபெயர்த்து அறிந்துகொண்டனர் ஐரோப்பியர்.  இவற்றை யெல்லாம் அவர்கள் மேற்கொண்டது தம்மை நீண்ட மொழிமரபும் வரலாறும் உடையர் என்று காட்டிக்கொள்ளவே  ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்







செவ்வாய், 5 செப்டம்பர், 2023

அதிபர் திரு தருமன் சண்முகரத்தினத்தாருக்கு வாழ்த்துக்கள் (கவி)



ஊக்கமொடு சென்றுகுட வோலையிட்டோம் சாவடியில் 

ஏக்கமொன்றும் இன்றியேநல்  வாழ்வினிது காணபதற்கு

வாக்களிக்க வேண்டியது  வாழ்குடிகள் நற்கடனே

தேக்கமின்றி  முற்றுநிலைத்  திகழொளியாத் தோன்றியவர்


உலகுபுகழ் பொருளியலாய்   வாளர்திரு  தருமன்அண்ணல்  

நலங்கள்பல  மக்களுக்கே  அலுங்கலறச் செய்துயர்ந்தார்

தலங்கள்தொறும் யாவருக்கும் தந்துதொண்டு சிறந்தவரே

இலங்களிலே ஒருபெயராய்த் தமைநாட்டில்  நிலைநிறுத்தி,


எலாஉள்ளங்  களிலுமவர்  இருந்திட்ட  பெருமகனார்!

ஓபாமாவைப்  போல்தீவில் யாங்கணுமே  பெரும்புகழார்!

அபாரமாய்  நல்லுழைப்பை  அகிலத்திற் குரிமைசெய்தார்.

கபாலக்க  னப்பிலாத கருதுமுயர்  அருஞ்செயலார்


சண்முகப்பெரு மானருளால்  இரத்தினமாய்ச்  சொலித்தவரே

எண்முகஞ்செல்  புன்னகைசெய்  இன்முகமே  தாமுடையார்.

வெண்மனத்தால்  இம்முடிவை விளைத்தனர்நம்  குடிகளுமே

ஒண்மனத்தால் இதுமுடித்த உயர்ந்தபெரும்  பெற்றியரே.


வாழ்கவாழ்க  நம்மதிபர்  வளர்சண்மு-க  ரத்தினமே

தாழ்விலாத சிங்கபுரி  தளர்விலாத நடைபோட்டு

ஏழ்நிலமும்  இரும்புகழை இடைவிடாத படிஎய்தி

வாழ்கவாழ்க இவ்வுலகில் வான் திசைகள்  விளங்கிடவே.    



வாழ்குடிகள்  - குடிமக்கள்

குடவோலை -  "ஓட்டுகள்", வாக்குகள்.

திகழொளியா  -  வெற்றியாளராய்

எலா -  எல்லா (தொகுத்தல் விகாரம்)

தருமன் அண்ணல்  -  திரு தருமன் சண்முகரத்தினம்

உலகுபுகழ்-  சர்வதேசப் புகழ் உடையவர் என்பது

தலங்கள்தொறும்  -  ஒவ்வொரு தலத்திலும்  / இடத்திலும்

இலங்களிலே -  இல்லங்களிலே

ஒருபெயராய்  -  as  household name

நிலை நிறுத்தி  -  மாறிவிடாதபடி

ஒபாமா -  முன்னாள் அமெரிக்க அதிபர்

அபாரமாய்  -  மிக்க அதிகமாய்   ( அனைத்து இடத்திலும் பரவ)

கபாலக்கனம் -  மண்டைக்கனம் அல்லது தற்செருக்கு (இல்லாத)

கபாலக்க  னப்பிலாத-----கபாலக் கனப்பு இலாத  (கனப்பு - கனத்தல்)

எண்முகம் -  எட்டுத்திசை

வெண்மனத்தால் -  உண்மையுடன்,  அலையாத மனத்தால்.

கழிபெரிய -  மிகப்பெரிய

சிங்கபுரி -  சிங்கப்பூர்

ஒண்மனம் - ஒளியுடைய மனம்  ( அறிவுசார்)

ஏழ்நிலம் -  ஏழுகண்டங்கள்.

இரும்புகழ் -  பெரும்புகழ்

அதிபர் - குடியரசுத் தலைவர்.  President of country

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

"அடுதல்" என்பது எப்படிச் "சூடேற்றுதல்" பொருளை அடைந்தது? அடுப்பு, அடுக்களை

 அடுதல் என்ற சொல்  அன்றாட வழக்கில் இல்லை.  ஆனால் அடுப்பு என்ற சொல்லும்  அடுக்களை என்றசொல்லும் வழக்கில் உள்ளன.  அடுக்களைக்கு இன்னொரு பெயர், உருப்பு என்பது,  ( உறுப்பு என்பது ஒன்றன் பகுதி, இது வேறு).  அடுப்பிலிட்டு,  குழம்பு முதலியன கலக்கப்பட்டுச் சமைக்கப்படுகிறது.  அதனால் அடுக்கும் அளை என்பது  அடுக்கு+ அளை =  அடுக்கு அளை >  அடுக்களை ஆனது.    அளைதலாவது  கலத்தல்.  ஊன் அளைந்த உடல் என்பது கம்பராமாயணம்.  இன் அடிசில் புக்கு அளைந்த தாமரைக் கை என்பது கலித்தொகை.  இவற்றில் கலத்தல் பொருளைக் கண்டுகொள்க.

களை என்பதற்குப்  பறித்த களை முதலியவற்றை அரித்துவந்து காயவைத்து நெருப்பு எரித்துச் சமைக்குமிடம் என்று வாதடவும் இடந்தரலாம்.  ஆனால் பழங்காலைத்தில் இவ்வாறு நெருப்பு உண்டாக்கிச் சமைத்தனரா என்று ஆராயவேண்டும்.  இந்த ஆய்வினை நீங்கள் மேற்கொள்ளலாம்.  அவ்வாறானல் களைகொண்டு அடும் இடம் என்றால்  இச்சொல்  முறைமாற்று  அமைப்பு  உடையதாகும்,

உணவுப் பொருளைக் கலத்தலும்  களைகளை எரித்தலும் தொழில்கள் அல்லது செயல்கள்.  இச்செயல்கள் இடத்திற்கு ஆகி வந்துள்ளன, எனினும் இவை இடத்திற்கே பெயர்களாகத்  தோன்றிய சொற்களாகத் தெரிகின்றன.  ஆதலின் இவை ஆகுபெயர்கள்  ஆகமாட்டா. இவற்றுக்குச் சமைப்பிடம் என்று அடிப்படைப் பொருள்.  அதற்கு டிங்டோங் என்று பெயரிட்டால் என்ன, சிங்சோங் என்று பெயரிட்டால் என்ன,  அதை அடுப்படிக்குப் பெயராய் இட்டு அழைத்தால்,  அது ஆகுபெயர் ஆகாது.  பொருள் சமையற்கட்டு என்பதுதான்.
இனி அடுதல் என்ற சொல்லுக்கு வருவோம்.   அடுதல் என்பது சூடு ஏற்றுதல் என்று பொருள் படும்,   "அடினும் ஆவின்பால்  தன்சுவை குன்றாது."  இதில் அடினும் என்றால் சமைத்தாலும் என்று பொருள்.

சட்டியை  நெருப்புக்கு மிக்க அருகில் வைத்தால்தான் சூடு ஏறுகிறது.  அடுத்தல் என்பது அருகில் வைத்தல் என்ற அடு என்ற சொல்லுடன் தொடர்பினது ஆகும்.  அடுத்து வைத்துச் சூடு கொடுப்பதால்,  அடு என்பது சுடு என்று பொருள்பெற்றது.  மனிதன் சமைக்க அறிந்துகொள்வதற்கு முன் நெருப்பை அடுத்து வைத்தல்  வேண்டும் என்று புரிந்துகொண்டான்,  அதையும்  அதுபோல் பிறவற்றையும் அறியவே,   அடு என்ற சொல், இன்னொரு பொருளைப் பெற்று மிளிரலாயிற்று.  அடுத்துச் சொல்லுதல் என்ற பொருளுடைய சொல்,  சூடேற்றுதல் என்ற கூடுதல்  பொருளையும் பெற்றது.

தமிழ்ச் சொற்களை ஆராய்ந்தால்  அவை உங்களை  மனித வளர்ச்சியின் முதல் படிக்கே கொண்டு சென்று,  சமையல் எவ்வாறு உருவானது என்றே காட்டுகின்றன.  இதுபோலும் சொற்பண்பினை  வேறு மொழிகளிலும் ஆய்வு செய்து, மனித நாகரிக வாழ்வின் முதற்படியை அறிந்துகொள்ள உதவுகின்றனவா என்று நீங்கள் சிந்திக்கவேண்டும்.   அதற்காகவே இதை எழுதுகிறோம்.

இவ்வாறு சிந்திக்கவே,  தமிழின் ஆதியமைப்பு உங்களால் அறிந்துகொள்ளத் தக்கதாகிவிடும், இவ்வாறே ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு பண்பு வெளிப்படும், உருது மொழிக்கு அதன் இசைப்பண்பு  உள்ளது,  சீனமொழிக்கு அதன் பொருள் உணர்த்தும் குறுக்கம் முதன்மை ஆகிறது, இன்னும் பலபண்புகள் வெளிப்படலாம்.

சூடு வேண்டுமென்றால் அணுக்கம் முதன்மை.  "  அகலாது  அணுகாது " இருக்கவேண்டிய நிலைகளும் இருக்கலாம்.  சமைப்பதற்கு அணுகியும்  தீக்காய்வதற்கு கொஞ்சம்  அகலவும் இருக்கவேண்டும்,  அகலம் அதிகமானால் சூட்டினை நுகர்தல் இயலாது.

அறிக மகிழ்க
மெய்ப்பு  பின்பு.
இந்த இடுகையில்  புள்ளிகள் இல்லாத எழுத்துக்களின்
மேல்புள்ளியிட்டும் சொற்கள் மாறியும் இருந்தன.  இவற்றை
இயன்றமட்டும் திருத்தியுள்ளோம்.  

These changes could have been made in consequence of the readers entering
the compose mode and moving their mouse across the write-up.  Please do not enter
the compose mode .  You could cause unwanted changes in the text by moving your
mouse across a posted text.  Or possibly done by  a virus. Kindly report changes. 
Mischief- makers are aplenty.

Last edited on 06092023.

 

சனி, 2 செப்டம்பர், 2023

தேர்தல் வாக்களிப்பு நம் கடமை

 வெண்பா


மக்களாட்சி  என்பதுவோ  மன்றிலேகி நிற்போர்க்குத்

தக்கபடி  சென்றுமது  வாக்களித்தல் ----  ஒக்குமிது

உம்கடனே என்பதை  ஓர்ந்திடுக  எந்நாளும்  

நம்நிலனே  நன்மை  குறி.


மன்றில் ஏகி  நிற்போர்   --- தேர்தல் விருப்பாளர்களாக நிற்போர்

சென்றுமது -  சென்று உமது

ஒக்குமிது -  யாவரும் ஒப்புக்கொள்ளும் இது

ஓர்ந்திடுக -  நினைவில் வைக்க

நம் நிலனே -  நம் நாடே

நன்மை -  நன்மை செய்யும்

குறி =  குறிக்கோளும் ஆகும்.

செய்யும்,  ஆகும் என்று இயைத்து உரைக்க.

நன்றாம்  குறி  என்று முடிக்கலாம் எனினும் முனையவில்லை.  



இன்னும் இருநாட்களில்  இங்கு அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது.  குடிமக்கள் மக்களாட்சிக்கு ஏற்றபடி   தங்கள் வாக்கை அளிப்பது நம் கடமை,

இதை எழுதியது 31.8.2023இல்  ஆகும்.  ஆனாலும் நாளை மறுநாள் தேர்தல் தினமாதலால்  இது 4ம் தேதி செப்டம்பர் மாதம் வெளிவரும்.