Pages

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

பாதுகை - இரண்டு ஆவது.

 பகு என்ற வினைச்சொல்,   குகரம் இழந்து,  பா  என்றாகும்.  இதற்கு நேராக ஒரு திரிபினைக் காட்டாமல் விளக்கலாம்.  ஒரு புல்தரையில் மனிதர்கள் ஒரே தடத்தில் நடக்கிறார்கள்.  அந்த இடத்தில் புல் இல்லாமை உண்டாகிறது.  இதன் விளைவு,  நடுவில் ஒரு பாதை வந்துவிடுகிறது. இதை நாம் அறிந்து கொள்கிறோம். அப்பால் இருபுறமும் பகுதலால்,  நடுவில் உள்ளது பாதை எனப்படுகிறது.

இந்தச் சொல் அமைந்த அடிநாளில் பகுதை என்றிருந்திருக்கலாம்.  இதிலுள்ள பகு என்பது பா என்று திரிந்துவிட்டது.  பகுதை என்று ஒரு சொல் இருந்ததா என்பதை இப்போது அறுதியிடமுடியாது. எந்த மொழியானாலும் பழையன கழிந்திடுதல் நடைமுறை. பழையன பாதுகாக்கப்பட்டிருந்தால் அதற்கு எழுத்து மொழியின்  நிலைக்கப்பிடித்தல் காரணமாகவேண்டும்.  எழுத்துக்கள் மிகுதி காலமும் ஏற்படாமல் கழிந்த மொழிகளில்,  என்ன உறுதி  என்றால்,  தொடக்க காலச் சொற்களை அறிந்து அறிவுறுத்தல் என்பது முற்றும் முயற்கொம்பே  ஆகும்.

செந்தமிழ் நீண்ட இலக்கிய வரலாறு உடைய மொழி என்றாலும்,  செந்தமிழும் நாப்பழக்கம் என்பதும் உண்மையன்றோ?   ஆகவே பகு என்பது  பா என்று கு என்ற வினையாக்க விகுதியை இழந்ததா?  அல்லது பா என்பதுதான் பகு என்று குறுக்கமடைந்ததா என்பது ஆய்வுக்குரியது.  அதை இங்கு ஆராயவில்லை. இதை ஆராயமலே,  பகு என்பதும் பா என்பதும் திரிபுகள் என்று நிறுத்துவதே போதுமானது. விடுபாடுகளும் நல்ல உத்திகளாகலாம்.

இன்னும் சில கேள்விகள் எழலாம்.  அவை நிற்க.

பகுதல்,  பகுத்தல் என்பவை  என்ற  இரண்டும் பொதுவாகப் பா என்ற திரிபினை அடையத் தக்கவை.

பாதைக்கு இரு மருங்கு என்று இரண்டு ஆதலே போல,  பாதுகையும் இரண்டு உருப்படிகளாகவே  வேண்டும்.   இதுவும் பகுதுகை அல்லது பகுத்துகை என்றே தோன்றிப்  பகு என்பது பா என்றாகிப்  பாதுகை என்றாகியிருக்கும்.  ஒரு சோடியாகவே இருக்கும்.  இதை விளக்கமலே  பாதுகையின் மூலம் பகு அல்லது பா என்றே முடிவு செய்துவிடலாம். 

துகை என்பது தொகையாகவோ அன்றி  து + கை (இடைநிலை மற்றும் விகுதி) யாகவோ இருக்கட்டும்.

பா - இருபகுதிகளாகி  துகை - ஒன்றாக அணியப்படுவதனால்  பகு, பா என்பனவே  அடிச்சொற்கள்.  அக்காரணங்களை நாம் அலசவேண்டியதில்லை. தொகை - துகை  திரிபு.  அதாவது பகுதொகை -  பாதுகை  ஆனதென்பது.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.