ஒரு சாமியார் என்னைப் பார்க்கவந்தார். அவரை அன்புடன் வரவேற்று, இருக்கையில் அமர்வித்தேன். தலைதாழ்த்திக் கும்பிட்டுக்கொண்டேன். அவர் ஆசீர்வாதம் வழங்கினார். என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று கேட்டார். சாமி , எந்தச் சொல் எப்படி அமைந்தது என்று சிந்தித்து என்னிடம் வந்து பேசுகிறவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்றேன்.
ஆசீர்வாதம் பெரியோரிடம் பெற்றுக்கொள்வது தொன்றுதொட்டு நம் பண்பாட்டில் நாம் கடைபிடித்துவருவதாகும்.
ஆ - இது ஆக்கம் குறிக்கிறது. ஆகு அல்லது ஆ என்ற வினைச்சொல்லும் அதுவே. ஆக்கம் என்பது தொழிற்பெயர். ஆ, ஆகு என்பவை வினைகள். அவ்வளவு தான் வேறுபாடு ஆவது. இது வேறு சொற்களிலும் அமைப்பாகப் போற்றப்பட்டுள்ளது. எ-டு: ஆகு + ஊழ்= ஆகூழ். ஆகும் ஊழ் ஊழ் என்பதை இன்னோர் இடுகையில் பகிர்ந்துகொள்வோம்.
[இங்கு யாம் சொல்லவிழைந்தது: ஆ, ஆகு என்பன முன்னொட்டுக்கள். இவை சொல்லின்முன் வைக்கப்படும் சொல்விரி ஆகும். இதை ஆங்கிலர் prefix என்பர். காயம் என்பது பழந்தமிழ்ச் சொல். இது பின் ஆகாயம் என்று விரிந்து, வானுக்கு மற்றொரு பெயரானது. காயம் என்பது வெங்காயம், பெருங்காயம், புண் எனப்படும் காயம் , ஆகாயம் எல்லாவற்றையும் குறித்தபடியினால், வேறுபடுத்த ஆகாயம் என விரிக்கப்பட்டது. இது பின் அயலிலிலும் சென்றது நம் பாக்கியமே. ( பாகு+ இயம் > பாக்கியம் , நற்பகுதி. நற்பேறு.) சொல்லின் அமைப்பின்படி நாம் பெறுவனவெல்லாம் பேறுதாம். துன்பமும் நாம் பெறுவதுதான். எனினும் நற்பேறு ஆவதையே பேறு என்பதுபோல் இது).]
பகு+ தி : பகுதி.
பகு > பாகு (முதனிலை நீட்சி) > பாக்கு (இங்கு ககரம் இரட்டிப்பு)
கமுகு வெட்டிப் பகுக்கப்படுவதால் பாக்கு என்று சொல்கிறோம்.
பாக்கு + இயம் = பாக்கியம்.
பாகு இயம் > பாக்கியம் என்றாலும் மேல் கூறியவற்றைச் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. ஒன்றைச் சொன்னால் பத்தை உணர்ந்து கொள் என்று யப்பானிய மொழி ஆசான்கள் சொல்வார்கள். இப்படி இரட்டிப்பதை உணர்ந்துகொள்க.
ஆசீர்வாதம் என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அதனை இங்குக் காண்க.
https://sivamaalaa.blogspot.com/2016/11/blog-post_18.html
இச்சொல்லை வேறொரு கோணத்திலிருந்து மறுபார்வை செய்வோம்:
ஆ- ஆக்கம்
ஆகு அம் > ஆக்கம் என்று கண்டோம். இங்கு ககரம் இரட்டித்தது. கு என்ற ஈற்றில் உகரம் கெட்டது அல்லது வீழ்ந்தது. இவ்வாறு இரட்டித்த இன்னொரு சொல்: வேக்காளம். வேகு + ஆளம் , இதிலும் கு என்பதன் ஈற்று உகரம் கெட்டு, ககரம் இரட்டித்தது, அதாவது க்கா என்று வந்தது. தகு அது - தக்கது எனினுமது.
இதில் ஆகு என்பது நிலைமொழி அன்று; இதற்கு அந்தப் பெயரில்லை. அம் என்பது ஓர் அடிச்சொல், இங்கு விகுதியாய்ப் பயன்படும். அது வருமொழி அன்று. இது சொல்லாக்கம். புணரியல் சந்தி அன்று.
பின்னூட்டமிட்டால் மேலும் விளக்குவோம்.
சீர் - சிறப்பானது.
வாழ்த்து+ அம் > வாழ்த்தம் > ( இடைக்குறைத்து ) > வா(ழ்த்)தம்
> வாதம்.
இனி, வாய்+த்து+ அம் > வா(ய்த்த)ம் > இடைக்குறைந்து : வாதம் என்பதே. அதாவது வாயினால் வெளிப்படும் வாழ்த்து அல்லது சொல்.
படச்சுருள்களைத் தணிக்கையர் வெட்டுதல்போன்றவையே இடைக்குறைகளும் மற்ற குறைச்சொற்களும். தொல்காப்பியம் இவ்வாறு புனைவுகள் செய்தலைப் புலவர்களுக்குச் செய்யுளியற்ற உரிய விடுகையாக்கினார். ஆனால் அவருக்கு முன்னரே மொழியிலும் இவ்வமைப்பு ஏற்பட்டிருந்தது. அது பின்னும் தொடர்ந்தது.
வாழ்க்கையின் கெடுபிடிகளிலிருந்தும் பலர் விடுபட நினைத்துத் துறவு மேற்கொண்டனர். இதைச் சிற்றூர் மக்கள் தப்பி ஓடுவது என்று தரக்குறைவாகக் கண்டனர் என்று தெரிகிறது. பெரியோர் " இல்லறமே நல்லறம்" என்று போதித்து மாற்ற நினைத்தது தமிழ் இலக்கியங்களின் மூலம் தெரிகிறது. இச்சொல்லின் அமைப்பு அதைக் காட்டுவதாகும்:
தப்பு + அம் > தபு + அம் > தபம் > தவம். ( ப வ போலி).
அழகான சொல்லானது: கம்பனும் இச்சொல்லைக் கவினிய பாங்கில் பயன்படுத்தினான். இங்கே:
...................................................
தாங்கரும் தவமேற்கொண்டு
பூழி வெங்கானம் நண்ணிப்
புண்ணிய நதிகளாடி
ஏழிரண் டாண்டில் வாவென்
றியம்பினன் அரசன்..........
என்பது அவன் கவியின் பகுதி.
[I seldom refer to books. This is from memory. If not correct, please reproduce this for me in
comments column.]
தாங்கரும் தவம் என்றான் கம்பன். எவ்வளவு கடினமானது இல்வாழ்வு என்பது இதிலிருந்து தெரிகிறது. இவர் ஏன் சாமியாரானார் என்று கேட்கத் தோன்றியது. ஆனால் கேட்கவில்லை. புத்தரைக் கேட்டாலும் இவரைக் கேட்டாலும் ஒரே பதில்தான்.
பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேரின்பம் என்றார்
கூலவாணிகன் சாத்தனார்.
நாம் நம் அருமைச் சாமியாரை விட்டு எங்கோ வந்துவிட்டோம். அவரிடம் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் என்னிடம் தெரிவித்தது: கடவுளுக்கு உலகைப் படைக்கும்போது சில எழுத்துக்களே சிறப்பானவையாகத் தோன்றின என்றார். எந்த எழுத்துக்கள் என, அவர்: ஆ வா, ள தா, ம, ஏ என்ற எழுத்துக்கள்தாம் என்றார். ஏன் அப்படி என்று கேட்டேன். இதற்கான பதிலை அவர் கூறினார். இந்த எழுத்துக்களிலிருந்து நீங்கள் ஏன் இவை சிறப்புடையவை என்று கூறுங்கள்.
தெரியவில்லை என்றால் பதில் வெளியிடப்படும்.
இங்கே காண்க: https://sivamaalaa.blogspot.com/2021/10/blog-post_26.html
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.