Pages

வியாழன், 29 ஜூலை, 2021

முகம் மூஞ்சி தமிழ்தான்

 ஒரு காலத்தில் தமிழில் முகம் என்ற சொல்லைப் பற்றிச் சந்தேகம் அல்லது  ஐயுறவு சிலரிடை இருக்கவே செய்தது. அவர்கள் அச்சொல்லைத் தமிழன்று என்று எந்த ஆய்வும் ஆதாரமும் இன்றிக் கூறினர்.

முகம் என்பதைத் தமிழ் என்று அறிய வெகு எளிதான வழி::

மு  - இது முன்னிருப்பதைக் குறிக்கும்.

கு - என்பது தமிழ் தோன்றிய காலத்திலிருந்து  (  அது எக்காலமோ ) [முன் பக்கத்தில்] சேர்ந்திருப்பது எனல் குறித்தது.  அது (முகம்)  தலையில் அமைந்துள்ள பகுதி.

அம் - இந்த விகுதி பெரும்பாலும் அமைந்தருத்தலைக் குறிக்கும்.

அம் >  அமை > அமைதல் > அமைத்தல்.  அம் என்பது இவ்வாறு (பல சொற்களின்) வினைச்சொல்லின்/ வினைச்சொற்களின்  முதனிலை  அசையாக வுள்ளது.

முகுஅம் >  முகம்.

பண்டைப் புலவருள் சிலரும் மூஞ்சி என்பது தமிழ் ஆனால் முகம் என்பது தமிழன்று என்றனர்.  இவர்கள் ஏன் "முகுஅம்" என்று சிந்திக்கவில்லை?  செய்யுள் பல கற்றனரே அன்றிச் சிந்திக்கவில்லை என்றுதான் நாம் முடிவு செய்யவேண்டும்.  அவர்கள் புலவர் என்பதனால் நாம் இதைக் கூறாமல் விடமுடியாது.

முகம் என்பது பிடிக்கவில்லை என்றால்  முன்+ கு+ அம்  என்று சொல்லைப் புனைந்து,  முன்கம்    என்பதையே பயன்படுத்தியிருக்கலாம்.  அது முங்கம் அல்லது முற்கம் என்று திரிந்திருக்கும்.   அதுவும் ஏற்புடையதாகவே இருந்திருக்கும். முங்கம் இடைக்குறைந்து முகமாகும் வாய்ப்பு அதிகம்.

முகு + இன் + சி >  மூ +ன்  + சி >  மூஞ்சி என்பதையும் அவர்கள் அறியவில்லை. மனிதனுக்குக் காதுகள் தலையின் பக்கலின் உள்ளன.

மூக்கு, கண்கள், வாய் எல்லாம்  முன்னே உள்ளன. இவை மூன்று  உறுப்புகள். அதனாலும் மூ + இன் + சி >  மூஞ்சி   (மூன்று உறுப்புகளை உடைய தலையின் பகுதி) என்பது தெளிவாகவே உள்ளது. [ மூன்று + சேர்ந்தது >   மூன்சே>  மூஞ்சே  மூஞ்சி  எனலும் பொருள்தரும் விளக்கமே ]  முகு என்பது மூ என்று திரியும்.   மூன்று என்பதும் மூ  எனலாகும்.  இருவழிகளிலும் மூஞ்சி என்பதில் எந்த ஐயப்பாடும் எழவில்லை.  காரணம் கூறாமல் ஐயப்பாடுகளை எழுப்பிக்கொண்டிருப்பவன் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.  காரண காரணிகளுடன் இதைக் குறிப்பிட்டு எதிர்த்தவர்களை யாம் அறிந்ததில்லை. இருந்தால் பின்னூட்டமிட்டுத் தெரிவிக்கவும்.

முகு என்பது மூ எனலாகும்.  இதுபோன்ற திரிபுகள்:  பகுதி >  பாதி. இதில் பகு என்பது பா என்றானது.   மிகுதி >  மீதி.  இதில் மிகு என்பது  மீ என்றானது.  தொகு > தோ > தோப்பு.    நகுதல் : ஒளிசெய்தல். பாம்புத்தோல் சித்திர வேலைகளுடன் கூடி ஒளியுடைய விலங்கு.  நகுஅம் > நாகம்.  இதில் நகு  என்பது நா என்று வந்தது.  இனி,  நகர்வதனாலும் நாகமென்பர்.  நகர் > நாக > நாக+ அம் > நாகம். இது நகர் என்பதில் அர் கெட்டு, நக என்பது நாக என்று நீண்டு, அம் விகுதி பெற்று அமைந்ததென்பர் அறிஞர் சிலர்.  என்றிவை கூறினும் தமிழ் ஆகும்.

இதுகாறும் கூறியவற்றால் முகம் தமிழே.  சமத்கிருதமென்பது மந்திரங்கள் ஓதி வீட்டுமுன் வந்து  பூசைகள் செய்வாரிடைத் தோன்றிய இந்திய உள்நாட்டு மொழியே அன்றி  ஆரியர் என்று யாரும் வரவல்லை.  வெளிநாட்டினர்  லடாக்கில் வந்து எல்லையில்லாமையால் இடம்பிடித்தனர் பலர்.  அவர்கள் யாரும்   ஆரியர் எனலாகாது.  வெளிநாட்டினர் வருவது எல்லா நாட்டிலும் நடந்த ஒன்றாகும். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அகரவரிசை கொண்டுவந்தனரோ?  அவர்கள் கொணர்ந்தவை எங்கே?  

ஒரு அமைப்புறவும் இல்லாத சொற்களை நம்மவை என்று பெருமைப்படுவதாயின் நமக்கு தலைக்கிறுக்குப் பிடித்திருக்கவேண்டும். உலகில் கோடிக்கணக்கான மொழிகளில் சொற்கள் உள்ளன.  நாம் நமவென்று கூறுபவை இங்குக் கணக்கெடுத்தால் ஓர் ஆயிரம் இருக்கலாம். கோடியில் ஆயிரம் எத்தனை விழுக்காடு?  நமக்கு ஒன்றும் பைத்தியம் இல்லை.  வெகு நிதானமாகவே உள்ளோம், காண்பீர்.  தொடர்பு இருப்பவற்றைக் கூறாதொழிதலும் தவறு;  தொடர்பு இலாதனவை தொடர்பு கூறுதலும் தவறு. இதை நாம் அறிவோம்.

பிறர் கூறியன மேற்கோளானால் நாம் அவற்றை மேற்கோளாகக் காட்டுவோம்.   எம்மவை என மாட்டோம். யாமே சிந்தித்த கருத்துக்களையே எழுதுகிறோம்..  பிறர் கருத்துக்களாயின் அவர்கள் நமக்கு முந்திய அறிஞர் பெருமக்களாக இருக்கவேண்டும். தொல்காப்பியர், சங்கப் புலவர்கள், தலைசிறந்த தமிழறிஞர்கள் எனக்காண்க. அல்லாரை நாம் உள்கொணர்வதில்லை. நீங்களும் இவற்றை அறிவீர்.  நன்றி உரித்தாகுக.  யாம் எழுதத் தொடங்கியே 30 ஆண்டுகள் ஓடிவிட்டன.  1958 முதல் தமிழ் ஈடுபாடு உடையோரும் நம்முடன் உள்ளனர்.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.