Pages

புதன், 28 ஜூலை, 2021

கங்கணம் - கயிற்றுக்கட்டு அல்லது காப்பு

 எடுத்துச் சொல்லவேண்டுமென்று பல சொற்கள் தலைப்பசைக்குள் போட்டி யிட்டுக் கொண்டிருப்பன வாகையால், இவற்றுள் எதை எழுதுவ தென்பது ஒரு போராட்டமே. இதில் இன்று நாமெடுத்துக் கொள்ள எண்ணியது  கங்கணம் என்ற சொல்லாகும்.  ஆனால் அது முன்னரே  வரைதரவு செய்யப்பட்டுள்ளது.  அது இங்கிருக்கிறது.  அதையும் படித்து மகிழுங்கள்:

கருங்கண்ணும் கடுங்கண்ணும்

கங்கணம் https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_3.html

கருங்கண் என்பதுபோலவே, சிலருடைய கண்கள் " கடுமை" யான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்று அஞ்சுவோருண்டு.  இந்த கடுங்கண்ணை மாற்றுவதற்குக் காவற்கயிறு கட்டிக்கொள்வதுமுண்டு.  அதுவே காப்பு.   உண்மையில் கருங்கண் என்றாலும் கடுங்கண் என்றாலும்  ருகரம் மற்றும் டுகரம் இடைக்குறைந்தால் கங்கணம் என்றே ஆகும்.  ஆகவே இவற்றுள் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை என்பதை அறிவீர்.

ரகர டகரத் திரிபு விதி

மேலும் ரகர டகரத் திரிபு விதியுமுண்டு.  ஒன்று மற்றொன்றாகத் திரிய வல்லது. இதற்கு இன்னொன்றை எடுத்துக்காட்டாக முன்வைக்கலாம்.  மடி> மரி என்பது காண்க.  மடிதலும் மரித்தலும் ஒருபொருளன.  மடிதல் என்பது உயிருடைப்பொருள் இறத்தலுக்கும்  மடித்தல் என்பது உயிரற்ற பொருள், காலக்கழிவினால் கெட்டுப்போவதற்கும்  பயன்பாடு பெறும்.  ஆதலின் இவை வழக்கில் வந்த வேறுபாடுகள்.  சொல்லமைப்பில் பெரிய வேறுபாடுகள் ஒன்றுமில்லை. கடமென்ற பதம்  கட என்ற வினையடித் தோன்றிய சொல்லெனினும்,  கடு என்ற அடியுடன் தொடர்புள்ளதே.

கடங்கணம்:

இனிக் கடங்கணம்  என்பது ஒரு கடமை பூண்டு செயல்படுதலையும் குறிக்கும்.  கடம் என்பது கடமை.   கணம் -  கண்ணுதல் என்பது கருதுதல்.  கண்+ அம். (கண்+ நுதல் என்பது வேறு.)   கடங்கணம் என்பது இடைக்குறைந்தாலும் கங்கணம் என்றே வரும். இது: கடமை மறவேன் என்று கழறிக் கையிற் கயிறேற்றிக் கொள்ளுதல் குறிக்கும்.  சிலேடையாகக் கவிபாட வல்ல பெரும்புலவர் கையில் இச்சொல் கிட்டினால் இதைப் பயன்படுத்தி  அவர் நல்ல செய்யுளை யாத்துத் தந்திடுவார் என்பதில் ஐயமில்லை.  சீவகசிந்தாமணி ஆசிரியர் இத்தகு பெரும்புலமை உடையவர்.  அவர் போன்றோர் இச்சொல்லைக் கூறியவாறு கையாளும் திறலர்.

அடிச்சொற் பல்பொருள்:

கண் பல்பொருளொருசொல். கண்: 1. விழி. 2  இடம் ( உருபு).  "ஒண்டொடி கண்ணே உள" என்ற தொடர் காண்க.  3.  கண்ணுதல் என்ற வினைச்சொல். கண் என்பதே வினைப்பகுதி. கருதுதல் என்பதே பொருள். இச்சொல் எவ்வாறு பொருந்துகிறதென்பதே மேலே விளக்கப்பட்டது.

கை, கால் ஆகிய உறுப்புகட்கு ஓரம் உள்ளது.  எடுத்துக்காட்டு: கணுக்கை, இது ஓரம் .  இந்த ஓரத்திற்கு இன்னொரு சொல்:  கங்கு என்பது.  கங்கில் அணியப்படுதால் கங்கணம்  ( கங்கு+ அண்+ அம் ) என்று வரும்.  அணிதற்கு அடிச்சொல் அண்.  அணவி நிற்பது எனினுமாகும்.  

இவை எல்லாம் தமிழ் அடிச்சொற்களே.  கள் என்பது மூலச்சொல். அதை இங்கு விளக்கவில்லை.  அதனை ஆய்ந்தக்கால், இந்த அமைப்புப்பன்மை என்பது ஒரு தோற்றமே என்று புலப்படுமாதலின்,  இங்கு கூறப்பட்டவையுள் எதனை மேற்கொள்ளினும் எம் துருவலில் போந்த விளக்கங்களில் பேதம் காணப்படவில்லை என்று தெளிக. ஆதலின் எதைக் கொள்ளினும் ஏற்புடைத்தாம். 

எவ்வாறாயினும் இச்சொல் மூன்று அல்லது அதனின் மிக்க பிறப்புடைய சொல் என்பதை அறிந்து மகிழ்க.

அறிந்து இன்புறுவீர்.

மெய்ப்பு பின்னர். 

மெய்ப்பு பார்க்கப்பட்டது:  29072021 0732


கவசம் அணிந்து

மனித இடைவெளித் தொலைவு கடைப்பிடிக்கவும்.

நாமும் வாழ்க, பிறரும் வாழ்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.