"இராணுவம்" - சொல்லினாக்கம் அறிவோம்.
ராணுவம் என்பது இகரம் இயைத்து இராணுவம் என்றும் எழுதப்பெறும் என்றாலும் அது தமிழில் ரகர வரிசையில் சொல் தொடங்கலாகாது என்பதற்காகவே ஆகும். எனவே ராணுவமென்பது தமிழ் என்று காணாது முடிப்பாரும் உளர்.
பல ரகர வருக்கத்துச் சொற்கள் தமிழில் தலையிழந்தவை. அரங்கசாமி என்பது ரங்கசாமி என வருதல் போலுமே அது. ஆற்றிடை நிலத்து அமைந்துள்ள கோயில் ஓர் அரங்கில் அமைந்துள்ளது போல்வதே ஆதலின், அரங்கசாமி என அத்தெய்வம் பெயர்பெற்றது. ராணுவம் என்ற சொல் தமிழில் பேச்சு வழக்கில் உள்ளதே. இதுபோது தாளிகைகளிலும் பயன்பாடு காண்கிறது.
ஓர் அரணினுள் தங்கவைக்கப்பட்டுப் போருக்கு அணியமாய்1 உள்ள படையைக் குறிப்பதே ராணுவமென்பது. இப்போது அரண் அல்லது கோட்டைக்குளில்லாமல் வேறிடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படைகளும் இராணுவம் என்றே சொல்லப்படுகிறது.
அரண் > அரணுவம் > ராணுவமென்பதே இச்சொல்லின் பிறப்பு ஆகும். அர் என்பதே இதன் அடிச்சொல். அர் > அரண்; அர் > அரசன்; அர்> அரசி எனக்காண்க. இதனை விளக்கும் இடுகைகளைக் கீழே தந்துள்ளேம்.
அரணில் தங்காமல் ஒரு படுதாப் பந்தலில் தங்கினாலும் இற்றை நாளில் ஒரு படையணி - ராணுவமே. இச்சொல் பொதுப்பொருண்மை அடைந்துவிட்டது.
அரணம் என்ற இன்னொரு சொல்லும் காவல், கவசம் என்னும் பொருளது. கோட்டை, மதில் என்பவும் பொருள்.
அரண் உவப்பது படையணிகளையே. ஆதலின் அரண் + உவ + அம் = அரணுவம் என்பது படையணிகளைக் குறிக்கும். ராணுவம் என்பது தலையிழந்த திரிபு. ராணுவம் என்பது படை நிறுவாகம் என்றும் பொருதரும்.
அரண்+ உ + அம் = அரணுவம் என்று முடிப்பினும், உகரம் இடைநிலை என்று கொள்ளினும் இழுக்கில்லை.
தமிழில் நிகண்டுகள் முதலியன பல சொற்களைப் பாதுகாத்து வைத்துள்ளன. தமிழில் நூல்கள் பல போற்றுவாரற்று ஒழிந்தன. அவற்றில் நம்மை வந்தடையாத சொற்கள் பல இருந்திருக்கக்கூடும். அரணுவம் என்ற சொல்லும் அத்தகைத்தாகும்.
அரணி = ராணி என்பதும் கருதுக.
அரசன் வாழ்மனை அரண்மனை எனப்படுதலும் காண்க. அரமனை என்ற பேச்சுவழக்குச் சொல் அர் - அர என்ற அடிச்சொல்லுடன் இணைந்துநிற்றலின் சொல்லியலில் ஒரு போற்றற்குரிய வடிவம் எனின் மிகையாகாது.. அரண் என்ற சொல்லும் அர் + அண் என்று இணைந்து, அரசு நடாத்துவோர் அண்மி வாழும் இடம் என்று பொருண்மை பெறுதலும் கண்டுகொள்க.
அர் > அர > அரசு.
அர் > அரசு > அரசன்
அர் > அரசு > அரசி
அர் > அரை > அரையர். ( அர் + ஐ + அர் ). அரசுத் தலைவர். ஐ = தலைமை.
ஐ விகுதி எனலும் இழுக்கிலது.
அரை > ராய் ( தலையிழந்த அயல்வடிவம்).
ராஜ் ( அயல்வடிவம்) ரெக்ஸ் - இலத்தீன் திரிபு)
ரெஜினா - அரசி. ( அயல்வடிவம்.)
அரள், அரட்டு, மூல முழுவடிவங்கள்.
சில தமிழ்ச்சொற்கள் தமிழில் வழக்கிழந்து இனமொழிகளில் வழங்கி வீடுதிரும்பி அறியப்படுதலும் உண்டு. இவ்வாறு அயல் எட்டிய சொற்கள் பெரும்பாலும் திரிந்துவிடுதல் இயல்பு. ஆய்வின்மூலம் இவற்றை அறிந்துகொள்ளுதல் இயல்வதே என்றறிக.
குறிப்புகள்:
நிறுவாகம் : நிறுவப்பெற்ற ஆட்சியமைப்பு. ( நிருவாகம் என்பது சரியன்று).
அரசன் முதலிய சொற்கள்: https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_10.html
மற்றும் https://sivamaalaa.blogspot.com/2020/06/blog-post_11.html
1 அணியமாய் - தயாராய்
அர் > அரமன் > ராமன்.
அர = ஆளும்; மன் > மன்னன் என்றலும் நுணுக்கமாய் அணுகத் தக்க வடிவமே.
இர் > இர் ஆம் மன் : இருள் நிறத்து மன்னன். ( நீல நிறத்து மன்னன் ). ஆகும்> ஆம்.
தட்டச்சுப் பிழைகள் பின் திருத்தம் பெறும்.
சில திருத்தங்கள் 20.10.2020
Some additional information has now been given whilst editing. You will find it interesting.
பதிலளிநீக்கு