சுழல் என்னும் தமிழ்ச் சொல்லின் தோற்றத்தினை (தொடக்கத்தினை) அறிந்துகொள்வோமாயின் இதுவரை நேயர்கள் சிலருக்குப் பிடிபடாதிருந்த
நெறிமுறைகள் சில விளக்கத்தை அடைந்துவிடும்.
ஒரு வினைச்சொல் பெயர்ச்சொல் ஆகும்போது திரிபுகளை அடைதல் நீங்கள் அறிந்ததே. விகுதி சேர்ந்தும் சேராமலும் வரும். சில சமயங்களில் முன்னொட்டுப் பெறுதலும் கூடும். பெரும்பாலன விகுதியுடன் வந்து தோன்றும். சொல் மிகுந்து நிற்க உதவுவதே விகுதி. விகுதி என்பதும் மிகுதி என்ற சொல்லின் திரிபு ஆதலின் , சொல் நீண்டுவிடும் நிலையே அது என்பதும் அறிக. இச்சொல், மிஞ்சு > விஞ்சு என்பது போன்ற திரிபு.
வீதி என்ற சொல்லும் அகலம் என்ற சொற்பொருளும் உடையது. மிகு> விகு> வீ> வீதி என்பது காண்க. இங்கு தி என்பது இச்சொல்லின் விகுதி அல்லது இறுதிநிலை. தொகு> தோ> தோப்பு போலுமே. விளக்கம் எளிதாம்பொருட்டு இங்கு தரப்பட்ட விளக்கம் சற்றே வேறுபட்டிருக்கலாம் ஆயினும் முன் (பழைய இடுகைகளில் ) கூறியவற்றுக்கும் இதற்கும் ஆழ்ந்து நோக்கின் வேறுபாடின்மை அறியலாகும். ஓர் ஒற்றடிப் பாதையினும் வீதி அகலமானது. ஓர் ஒழுங்கையினும் அது அகலமானதே. இவ்வாறு நினைத்துத்தான் செல்லும் அகன்ற பாதை என்னும் பொருளில் வீதி என்ற சொல்லும் வழங்கலாயிற்று.
இவ்வாறு நோக்க, விகுதி என்ற சொல்லும் வீதி என்ற சொல்லும் உறவின எனப் புலப்படும்.
பெயர்களில் தொழிற்பெயர்களை அல்லது வினையினின்று பிறந்த பெயர்களை விகுதி அல்லது இறுதிநிலை பெற்றனவென்றும் பெறாதனவென்றும் பிரிக்கலாம். படி(தல்) என்னும் வினையிற் பிறந்த பாடி என்னும் சொல் முதனிலை அல்லது சொல்லின் முதலெழுத்து, நீண்டு ( ஆகவே திரிந்து ) அமைந்த சொல்லாகும். ஏறத்தாழ வீடுகள் ஒரே மாதிரியாக அமைந்து (படி அமைந்து ) தொழிலும் வாழ்க்கை முறையும் அவ்வாறே படியமைந்து, மக்கள் வாழும் ஊர் பாடி ஆகும். எடுத்துக்காட்டு: ஆயர் பாடி.
ஆனால் இவ்வாறு தொழிலின் அல்லது ஒரு வினைச்சொல்லினடியாய்த் தோன்றி இடத்தின் பெயராய் முற்றி நின்றமையின் அதனைத் தொழிற்பெயர் என்னாது இடப்பெயர் என்று விளக்குவோரும் உண்டு. ஆனால் இவ்வாறு இதனை இடப்பெயர் என்று வகைப்படுத்திவிடில் அது படி என்னும் வினையினின்றே உருவெடுத்தது மறைவு படும். இவ்வாறு மறைவுண்டது காணார் அது தமிழோ அன்றோ என்று அலமருவர். ஆதலின் இலக்கணம் எழுதியோர் எவ்வாறு அதை வகைப்படுத்தினர் என்பது நமக்குத் தேவையற்றது ஆகும். மறைந்ததை வெளிப்படுத்தி அதனைத் தொழிற்பெயர் என்பதே சொல்லமைப்பியலுக்கு உதவுவதாகும். தொழிற்பெயர் என்ற பெயரும்கூட என்னவென்று கூறியபின்னரே புரியும் பெயராய் இருத்தலின் அதனை வினைத்தோன்றுபெயர் என்று புதியபாணியில் சுட்டுதல் இன்னும் நல்லது ஆகும். ஆனால் அஃது வினையாலணையும் பெயர் என்ற இன்னொரு பகுப்புடன் மயங்குமாதலின், இம்மயக்கு விலக்க, தொழிற்பெயர் என்பதையே ஏற்றுக்கொள்வதுதவிர வழியில்லை என்பதறிக.
அடுக்குகளாய் அல்லது மடித்து மடித்துக் கட்டப்பெற்ற கட்டடமும் மாடி என்ப்படுகிறது. மடி > மாடி. முதனிலை திரிந்த தொழிற்பெயர். இங்கு வந்த திரிபு முதலெழுத்து நீட்சி. இதுபின் அம் விகுதி பெற்று மாடம் என்றாகும்.மாடம் என்பதில் மாடி அல்லது மடி என்பதன் ஈற்று இகரம் வீழ்ந்து அம் விகுதி பெற்றது. மடி என்பதன் மகரம் நீண்டது காண்க. இந்த இகரம் வீழாதாயின் மாடம் என்று வராமல் மடியம் என்று வந்துவிடும். இப்படி ஒரு சொல் அமையவில்லை என்று தோன்றுகிறது. புதிய மடிப்புள்ள பொருள் எதற்கும் இன்னும் தமிழில் பெயரில்லையாயின் இந்த அமையாச் சொல்லை அதற்குப் பயன்படுத்திக்கொள்ள வசதி இன்னும் உள்ளது. பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்படி முதனிலை நீட்சி பெறாது குறுகி அமைந்த சொற்களையே இன்று காணத் தொடங்கினோம். விளக்கத்தின்பொருட்டு நீட்சிபெற்றனவாகிய சில சொற்களைப் பற்றி உரையாடினோம்.
சாவு > சவம் அல்லது சா> சவம் என்பது சில இடுகைகளில் உதாரணமாகக் காட்டப்பெற்றுள்ளது. தோண்டு > தொண்டை என்ற முதனிலைக் குறுக்கமும் காட்டியுள்ளோம். இவைபோலுமே சுழல் என்ற சொல்லும் இவ்வாறு ஆயிற்று:-
சூழ் என்பது வினையடி. ( சூழ்தல் ).
சூழ் > சூழ்+ அல் > சுழல். இது குறுகி அமைந்தது. நீர்ச்சுழல், காற்றுச்சுழல் முதலியன குறிக்கும்.
சூழ் + அல் = சூழல். இது சுற்றுச்சார்பு என்று பொருள்தருவது. விகுதி புணர்த்தி இயல்பாய் அமைந்தது.
சூழ் > சுழி என்பதும் குறுக்கமே. இகரம் விகுதி.
இவ்வாறு வினையைக் காட்டாமல், சுள்> சுழி, சுள்> சுழல் என்று காட்டுதலும் ஆசிரியர் சிலரால் கொள்ளப்படும் முறையாகும். அஃது இன்னொரு வகை விளக்கம். எளிதின் உணரப் பயன்படும் வழி மேற்கொள்ளத் தக்கது ஆகும்.
வேறொரு சூழலில் சந்திப்போம்.
தட்டச்சுச் சரிபார்ப்பு - (மெய்ப்பு) - பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.