Pages

புதன், 10 ஜூன், 2020

செது என்னும் அடிச்சொல்.

இன்று சேதம் என்ற சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

இது தமிழில் உள்ள வழக்குச்சொல் தான்.

"சேதம் இல்லாத இந்துஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா"

என்று பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பாடலில் வருகின்றது.

தான் - இடமென்றும் பொருள். தான் இருப்பது இடம். எதை எங்கு இடுகிறோமோ அது அதற்கு இடம்.   தான் > தானம்> ஸ்தானம். இந்தச் சொல் எங்கும் பரவி, துருக்கிஸ்தான் என்னும் ஊருக்குமப்பால் சென்றுள்ளது.  அது நிற்க,

ஒரு பொருளைச் செதுக்கினால் அல்லது வெட்டினால் அது செதுக்கம் அடைகின்றது.  செதுக்கு+ அம் = செதுக்கம்.  செதுக்கமென்பது ஒரு புத்துருவாக்கச் சொல். முன்னர் எவரும் கையாண்டிருக்கலாம்; எமக்குக் கிட்டவில்லை. அல்லது புதிய கருத்துக்குப் பயன்பாடு செய்யலாம்.

ஆனால் முன்பே வழக்கில் உள்ள சொல் சேதம் என்பது.   செதுக்கு என்பதில் உள்ள கு என்ற வினையாக்க விகுதியை விலக்கிவிட்டால் அடிச்சொல்லே மிஞ்சும்.  அது செது என்பது.

செது என்பது முதனிலை (முதலெழுத்து) நீண்டு அம் விகுதி பெற்றால் அது செது + அம் = சேதம் ஆகின்றது. ஒன்றைச் செதுக்கினால் அது உருவில் குறைவு பட்டுவிடும்.  ஏற்கெனவே இருந்த நிலை முழுமையானால் செதுக்கியபின் உள்ள நிலை சேதமாகின்றது.  நகை முதலியவற்றில் செய்யும்போது எடையில் குறைவுபடுதலைச் சேதாரம் என்பர்.   செது+ ஆரம் = சேதாரம் ஆகின்றது. புல்முதலியவற்றை மேலாக வெட்டுதலைச் செத்துவது என்பர். இந்தச் சொல்லை அகரவரிசைச் செந்நாப்புலவன்மார் விடுபாடு இழைத்து  தவறிவிட்டனர் என்று தெரிகிறது. அது அவர்கள் சேகரிப்பில் இல்லை. புல்வெட்டும் மூத்த தமிழரிடம் கேட்டால் அறிந்துகொள்ளலாம். உங்களிடம் உள்ள அகராதியில் தேடிப்பாருங்கள். அகர முதலாகச் செல்லுக்குப் பொருள்கூறுவது  அகர + ஆ(தல்) + தி (விகுதி). > அகராதி.

செது > செத்து > செத்துதல்.

சா ( சாதல் ) என்ற வினைச்சொல் வினை எச்சமாகும்போது சத்து என்றுதான் வரவேண்டும்.   சத்து > செத்து என்று வருதல் திரிபு.  செ என்பது இதன் வினைப்பகுதி அன்று. ஏனைத் திராவிட அல்லது தமிழின மொழிகள் சத்து என்று அதனை எச்சமாக்குதல் காண்க.

செத்துதல் என்பதில் தகரம் இரட்டித்து வினை அமைந்தது.

எனவே செது என்பது ஒரு பகுதி வெட்டுப்படல்  அல்லது பகுதி அழிதலைக்
குறிக்கும் அடிச்சொல்.

தட்டச்சுச் சரிபார்ப்பு - பின்னர்.


1 கருத்து:

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.