Pages

ஞாயிறு, 17 மார்ச், 2019

சூத்திரம் என்ற நூற்பா,



" வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே"

என்று தொல்காப்பியர்  சூத்திரம் செய்கிறார்.

சூத்திரம் என்பது நூற்பாவைக் குறிப்பது.  சூழ் + திறம் >  சூழ்திறம் > சூத்திரம் என்று சொல்லானது,

சூழ்தல் என்பது வினைச்சொல். இது தன்வினை உரு.  இதனைப் பிறவினையாக்கினால் அது சூழ்த்தல், சூழ்த்துதல் . சூழ்வித்தல் என்று  சில மாதிரிகளில் வரவேண்டும்.  சூழ்வித்தல் என்பது வழக்கில் உள்ளது.  மற்றவை அருகின அல்லது ஒழிந்தன.  சூழ்த்து + அல் = சூழ்த்தல்.  சூழ்த்து + தல் = சூழ்த்துதல்.

திரம் என்ற இறுதிநிலை அல்லது விகுதி திறம் என்ற சொல்லின் அமைப்பு நோக்கி அமைந்தது.  எனவே திறம் > திரம் என்பது சரிதான்.  எனினும் இதை இன்னும் ஆழ்ந்து ஆய்க.

திரு > திரும்பு.
திரு > திரி   ( திரு+ இ )   ( நூல் முதலியவை திரும்பிய அல்லது திருகியவாறு
அமைந்தது திரி ).
திரு > திறம்புதல்.   ( சொல் கேளாமல் வேறுவழியில் செல்லுதல்)
திரு > திராவுதல் (  இது பேச்சுவழக்கு:  அகராதியில் இல்லை ).
திரு > திருடு  :   நேர்வழியில் வராமல் மாற்றமாய் ஒரு பொருளைப்பெறுவது.

இனியும் உள. சேர்த்துக்கொள்க.

எடுத்துக்காட்டு

மா:  அளவு.
மாத்திரம் ஓர் அளவிற்கு மேல் செல்லாமல் திரும்பிவிடுதல்.

இவ்வாறு திரும்புதல் கருத்து உடைய திரம் என்ற சொல், விகுதி ஆனபின் பிற சொற்களில் பொருள் இழந்து வெற்றுப் பின்னொட்டு ஆனது. பல விகுதிகட்குப் பொருள் இருந்திருக்கலாம்.  அவை இப்போது அறிதற்கில்லை.

உத்திரம்:  குறுக்குப் பொருத்துமரம் அல்லது சட்டம். மேல்பளுவைக் கீழ்நோக்கிப் பகிர்ந்துகொள்ளுகிறது.  திரும்புதல் கருத்து.  உ = முன் அல்லது மேல்.  திரம் : முன் பாகியின்படி.  ( பாரகிராப்)

களத்திரம் என்ற சொல்லில் களத்து + இரு + அம் =  களத்திரம்  ஆகவே  வீட்டிலிருப்பவள், மனைவி என்பது பொருள்.  களம் = வீடு குறிக்க இடப்பட்ட சொல்.  சகக்களத்தி என்பதிலும் களம் இப்பொருளதே. இதிலிருப்பது திரம் என்னும் விகுதி அன்று.

எனவே திரம் என்பது பொருளுடையதாகவும் பொருளில்லாமலும் வரும் ஒரு
விகுதியாகும்.

சூழ்தல் எனில்  ஆலோசித்தல்.  சூத்திரம் என்பது  சூழ்த்திறம்,  ஆகவே திறம்படச் சூழ்ந்து இயற்றப்பட்ட ஒரு நூற்பா என்பது பொருளாகும்.

சூழ் என்பது முதனிலைத் தொழிற்பெயர்  எனின்  சூழ்த்திரம் > சூத்திரம் என்று ழகர ஒற்று இழந்து அமையும்.   சூழ்திறம் என்ற வினைத்தொகையினின்று அமைந்ததெனின்   சூழ்திரம் ( சூழ்திறம் )  என்ற தகர ஒற்றில்லாத சொல்லில் ழகர ஒற்று கெட்டபின் தகர ஒற்று இரட்டித்துச் சூத்திரம் என்று அமையும். சூத்திரம் என்பது தமிழ்ச்சொல் என்று முடிக்க.

பிழை புகின் பின் திருத்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.