Pages

வியாழன், 21 மார்ச், 2019

இந்தியாவில் வேலை இல்லாதவர்கள்.


நல்ல நாணயங்கள் மத்திய வங்கியால் வெளியிடப் பட்டுக்கொண்டிருக்கின்ற அதே சமயம் கள்ளப் பணமும் பிறரால் வெளியிடப்பட்டு அவையும் இந்தியாவுக்குள் நடமாட விடப்படும் அவல நிலை வெகுநாட்களாக தொடர்ந்து வந்த நிலையில்தான் தலைமை அமைச்சர் மோடி சில கள்ளப் பணத்தை மீட்டுக்கொள்ளும் நடவடிக்கையைத் தொடங்கிவைத்தார்.

மத்திய விசாரணையகம் உள்நுழைந்து பிடித்த பல இடங்களில் பெருவாரியான கள்ள நாணயம் பிடிபட்டுள்ளது.

போரென்பதைப் பலவாறு மேற்கொள்ளலாம், பெருவாரியான கள்ளப்பணம் நாட்டில் புழங்கினால் அந்நாட்டின் பொருளியல் வீழ்ச்சி அடைந்து விலைவாசி ஏற்றம் விண்ணைத்தொடும். அரசு வெளியிடும் நாணயம் செல்லாக் காசாகிவிட்டால் ஒரு போரில் தோற்றுப்போன அவ்வளவு சீரழிவையும் அது தரவல்லதாகிவிடும். பல பயங்கர வாதிகள் கள்ளப்பணத்தைக் கொண்டே இந்தியாவுக்குள் நுழைவதாகவும், இவ்வாறு கள்ளப்பணம் அச்சிடும் அச்சகங்கள் இந்தியாவுக்கு வெளியில் பல இருக்கின்றன என்றும் சொல்லப்படுகின்றது.

கள்ளப் பணத்தின்மேல் மோடி போர்தொடுத்தமையால் அவற்றைப் பயன்படுத்தி வாக்குகள் வாங்கிய எதிர்கட்சிள் பலவற்றால் சரியாகச் செயல்பட முடியவில்லை.

தமிழ் நாட்டில் பிடிபட்ட கள்ளப்பணம் பெருந்தொகை என்றும் சொல்லப்படுகின்றது. பிற மாநிலங்களிலும் இதுவே நிலை.

இது எல்லாக் கட்சிகளுக்கும் முன்னைய அரசுகளுக்கும் தெரிந்திருந்தாலும் யாரும் நடவடிக்கை எடுக்காத நிலையில்தான் மோடி நடவடிக்கை மேற்கொண்டார். கள்ளப் பணச் சம்பளம் வாங்கிக்கொண் டிருந்தவர்களுக்கு வேலையில்லாமல் போயிருக்கலாம். அது தவிர்க்கமுடியாதது.

இப்போது நிதி நல்ல நிலைமையில் உள்ளதாகவே அரசறிக்கை கூறுகிறது, இருப்பினும் எதிர்கட்சிச் சார்பான அமைப்புகள் நிதிநிலை நன்றாக இல்லையென்றும் வேலையில்லாதோர் கூடிவிட்டனர் என்றும் கூறுகின்றன. உண்மையானால் இப்படிக் கூடுவதற்கு மோடி மட்டுமே காரணம் ஆகிவிட முடியாது. ஒவ்வோராண்டும் பல்லாயிரக் கணக்கில் புதியவர்கள் வேலைச் சந்தைக்குள் வந்து சேர்கின்றனர். பள்ளி முடித்தவர்கள், முன்னர் உள்ள வேலைகளிலிருந்து நீங்கியவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என்று பலர் வருவர். எல்லோர்க்கும் உடனே கொடுத்துவிட மோடியாலும் முடியாது. அப்படி மோடி கொடுத்தாலும் அவர்கள் பெறும் சம்பளத்தை நாட்டிலுள்ள வரிச்செலுத்துவோரே கொடுக்கவேண்டி யிருக்கும்.

எதிர்க்கட்சிகள் வெளியிடும் மாற்று நிதி அறிக்கைகள் பொய் அடிப்படையில் புனையப்பட்டவையாகவும் இருக்கலாம். நாட்டில் எத்தனை பேருக்கு வேலை யில்லை என்று யாரும் ஊர் ஊராகப் போய்க் கணக்கெடுக்காத நிலையில் இவை எல்லாம் வெறும் மதிப்பீடுகள் தாம். உழவர்கள் மழையின்மையால் அல்லது நீர்வறட்சியால் பயிர்த்தொழிலில் ஈடுபடாத நிலையில் அவர்களும் வேலையில்லாதவர்கள் தாம். எந்த அரசினாலும் இது போலும் எல்லாவற்றையும் தீர்த்துவைக்கும் மந்திரக் கோல் எதுவும் இல்லை. இவன் வேண்டாம் என்று இன்னொரு கட்சிக்காரனை ஏற்றுக்கொண்டாலும் அவனாலும் அது முடியாத நிலைதான்.

புதிய வேலைகளை உருவாக்கினாலும் வேலை தேடுகிறவர்களுக்கும் அந்த வேலைகள் பொருந்தாதவையாக இருக்கலாம். கட்டுமானத் தொழிலில் வேலை கிடைத்து அதனால் பள்ளியை முடித்து வேலை தேடும் ஒருவனுக்கு என்ன பயன்? அவன் தேடுவது வட்டாட்சியர் வேலையாக இருக்கலாம்; கிடைப்பது மண்சுமக்கும் வேலை என்றால் எப்படி? இத்தகைய நிலைமைகள் சரியாவதற்கு வெகுநாட்கள் வேண்டுமே.

இந்தியாவில் வேலை இல்லாதவர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வேலை செய்வதுபோல வங்காளதேசம், நேப்பாளம், இன்னும் சுற்றுவட்டத்து நாடுகளிலிருந்து இலக்கக் கணக்கில் இந்தியாவுக்குள் வந்துள்ளனர். அவர்கள் எப்படிப் பிழைக்கின்றனர் என்று தெரியவில்லை. இதையும் கணக்கிட்டால் வேலையில்லார் தொகை பன்மடங்காகும். நேருவின் காலத்திலிருந்தே பல இந்தியர்கள் வெளிநாடுகட்குச் சென்று பிழைக்கின்றனர். வேலையின்மையை முழுமையாக எந்தப் பிரதமரும் தீர்த்துவிடவில்லை. எதிர்கட்சிகள் எப்படி இதைத் தீர்க்கப்போகின்றன என்று இதுவரை எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

அன்னிய முதலீடு இந்தியாவிற்குள் வரவேண்டுமானால் நாட்டில் ஒழுங்கும் கட்டுப்பாடும் இருக்கவேண்டும். வேலைநிறுத்தம் போராட்டங்கள் பல உள்ள இந்தியாவுக்கு முதலீடுகள் வருவது கடினம். அத்துடன் காசுமீர் பிரச்சினை வேறு மோடியின் கவனத்தை முழுமையாகப் பற்றிக்கொண்டுள்ளது.. போர் தொடங்கும் நிலையானால் வெளியார் பணம் கொண்டுவந்து போட்டுத் தொழில் தொடங்குவது குதிரைக்கொம்புதான். நாலு வருடமே ஆட்சி செய்துள்ள மோடி இதையெல்லாம் தீர்க்கவில்லை என்று சொல்வது பொருத்தமில்லை. எழுபது ஆண்டுகள் ஆண்டவர்களாலும் இதைத் தீர்க்கமுடியவில்லை.

உடனே குணப்படுத்த இயலாத நோயை நாட்படப் போராடியே கொஞ்சம் குறைக்கலாம்.

இப்போது உள்ள நிலையில் மோடியே சிறந்த தலைவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.