Pages

வெள்ளி, 11 ஜனவரி, 2019

இராவுத்தர் பட்டப்பெயர்.

தமிழகத்தில் பல  சமயத்தினரும் வாழ்கின்றனர்.  இவர்களிலும் முஸ்லீம்களும் உளரென்பதும் அவர்களில் பலருக்கும்  பட்டப்பெயர்கள் உள்ளன வென்பதும் நீங்கள் அறிந்ததனவே  ஆகும்.  இப்பெயர்களில் இராவுத்தர் என்பதுமொன்று.

இவர்கள் தமிழகத்துட் புகுங்காலை குதிரைகளில் வந்தனரென்று இவர்களில் பலரும் கூறியபடியால் இராவுத்தர் என்ற சொல்லுக்குக் குதிரைவீரன் என்ற பொருளை அகரவரிசை அறிஞர்கள் தரலாயினர்.

ஆனால் இச்சொல்லை ஆய்ந்த வேறு சில அறிஞர்கள் இராவில் வந்து யுத்தம் செய்தபடியினால் இவர்கள் இராயுத்தர் என்று குறிக்கப்பெற்றனர் என்று கூறினர்.  பகலிலும் போரிட்டிருக்கலாம் எனினும் இரவு வேளையில் வந்து போரிடுவதை ஓர் உத்தியாகக் கொண்டிருந்தனர் என்று இவர்கள் கருதினர்; பெரும்பான்மை கருதிய வழக்காகவும்  இது இருக்கலாம்.

இவற்றுள் எது உண்மை ஆயினும்,  நாம் இங்குக் கருதியது  யாதெனின் முருகப் பெருமான்மேல் திருப்புகழ் பாடிய நம் அருணகிரிநாதர் முருகனையே இராவுத்தர் என்றொரு பாட்டினில் வைத்துப் பாடுகிறார்  என்பதுதான்.  இதை யாம் முன் எழுதியதுண்டு:  அந்த இடுகை இங்கு கிட்டவில்லை.

இனி இராவுத்தர் என்ற சொல்லை ஒரு முருகப்பெருமானின் பெயராய்க் கொண்டு இங்கு அதனை நுணுகி ஆராய்வோம்.

இரா  =  இல்லாத.   முருகன்போலும் இறைவன் கண்முன் நிற்பதில்லை.  ஆகவே அவர் கண்முன் இராத ( இல்லாத) வர்.

உது > உத்து:    இல்லாவிடினும் அவர் பற்றனின் முன்னிலையை உடையவர்:  அதாவது முன்னிருப்பவர்.

து என்பது உடைமைப் பொருளில் வருவதை:

விழுப்பத்து :   விழுப்பத்தை உடையது.
அறத்து  :    அறத்தினுடைய
புறத்து :   வெளியிடத்தினது.

என்பவற்றுள் காண்க.

எனவே துவ்விகுதியின் பொருளை இவற்றிலிருந்து கண்டுகொள்ளலாம்.

உ என்பது முன் என்று பொருள் தருவதனால் உத்து என்பது  முன்னது என்று பொருள் படும்.

அர் என்பது பலர்பால் விகுதி.  இங்கு பற்றும் பணிவும் கொண்டு வரும் விகுதி.

இல்லாமலே முன்னிருப்பவர் முருகன் (அல்லது கடவுள்.)  முன் இல்லை என்றால் இல்லை என்று பொருள்படாது.  அவர் இல்லாமலே (கண்ணுக்குப்  புலப்படாமலே)  இருக்கின்றார்.

படைத்தல், காத்தல், அழித்தல்,  மறைத்தல்,  அருளல் என்பன அவர்தம் பண்புகளாகக் கூறப்படும்.

இவற்றுள் மறைத்தல் என்பது இங்கு முன்மொழிவு   ( பிரஸ்தாபம் ) பெறுகிறது.

எனவே அருணகிரியாரின் பாடலில் இப்பண்புகளில் ஒன்றைச் சுட்டுகிறது இப்பெயர் என்று அறிக.  இது நம் முஸ்லீம் நண்பர்களைக் குறிக்கவில்லை.

இராவுத்தர் என்ற இச்சொல் வகர உடம்படுமெய் பெற்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.