Pages

வியாழன், 10 ஜனவரி, 2019

சிங்காரமும் சிருங்காரமும்.

சிருங்காரம் என்ற சொல்லை யாம் முன் விளக்கியிருந்தோம்.

சிருங்காரம் என்ற சொல்லும் இடைக்குறைந்து  "சிங்காரம்"  என்று வரும்.  தொடர்களில் இது:   " சிங்காரச் சென்னை"  " சிங்காரப் புன்னகை"  என வரும்.  சிங்காரம் என்பதும் ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பண்டை மக்கள் எண்ணினர்.   "சிங்கார லகரி " என்ற தொடர் காண்க.   லகரி என்பது முன்னர் விளக்கப்பட்ட சொல்லே:

https://sivamaalaa.blogspot.com/2019/01/blog-post_8.html


ஒரு பொருள் பேரளவில் இருந்தால் ஒரு குறிப்பிட்ட தொலைவிலிருந்து நோக்கினாலே அது முழுமையும் பார்வைக்குள் அடங்கும்.  அடங்கிய ஞான்று அதன் முழு அழகும் வெளிப்பட்டு மகிழ்வுறுத்தும். அதாவது எக்காட்சியும் ஒரு திரையடக்கத் தன்மை உடைத்தாய் இருத்தல் வேண்டும்.

ஒரு சாமிசிலை மிகப்பெரிதாய்  வடிக்கப்படலாம். கண்ணுக்குத் திரையடக்கமான மாதிரியானால் அழகு வெளிப்பட்டு சிங்காரமாகிவிடும். இதுவே இதன் சொல்லமைப்புப் பொருள் என்றாலும் பிற்காலத்தில் இது தன் சிறப்புப்பொருளை இழந்து  பொதுப்பொருள் எய்தி  " அழகு"  என்ற  பொருள்தெரிவிக்கும் சொல்லாகிவிட்டது என்பதுணர்க.

சிறுகுதல் :   குறைதல். சுருங்குதல்.

சிறுகிவிட்ட பொருள் பெரிய பொருளின் மாதிரியே.   மா = அளவு.  திரி : திரிக்கப்பட்டது, செய்யப்பட்டது.  திரியென்பது முதனிலைத் தொழிற்பெயர்.

மா என்பது பல பொருளுடைய சொல்.  அது மாவு என்றும் பொருள்படும்.

சிறுகு + ஆர் + அம் >  சிறுங்காரம்

இதுபோல் அமையும் சொற்களில் ஒரு ஙகர ஒற்றுத் தோன்றும்.  எடுத்துக்காட்டுகள்:

வில >  விலகு > விலக்கு > விலங்கு.  (வில + கு )

மனிதரிலிருந்து விலக்கிய அல்லது வேறான உயிர்வகை.  பிற அணி : பிற வகை:  பிற அணி > பிறாணி > பிராணி என்பதும்  அதுவாகும்.

பிறாணியின் உள்ளிருப்பது பிராணன்.  அது தம்மிலும் உள்ள துணர்ந்தக்கால் பொதுப்பொருளில் விரிந்தது.

அன்றிப் பிறந்தன அனைத்தும் உடையது பிற > பிராணன் எனினும்  அஃதே. இவை விளக்கவேற்றுமைகள் அன்றி அடிப்படை வேற்றுமை அல்ல.

பிற (பிறத்தல் ) > பிற + அணன் =  பிறாணன் > பிராணன்

அணவுதல் :  அணம்  -  அணன்

பிறத்தலை அணவி நிற்பதாகிய உயிர் என்று விரிக்க.

பிற என்பதனுடன் ஆகாரத் தொழிற்பெயர் விகுதி சேர்ந்தால் பிறா என்று வந்து பின் அணன் என்பதனுடன் இணையப் பிறாணன் ஆகி, பின்னர் றகரம் ரகரமாகிப் பிராணன் என்றாகும்.

ஆகார விகுதி பல சொற்களில் வரும்.

நில் > நிலா
பல > பலா  பல சுளைகளை உடைய பழம்.
விழை > விழா

அழ =  அல.
அழ > அல  > அலங்கு + ஆர் + அம் = அலங்காரம்.

பழ என்பது பல என்றும் வரும்.  அதுபோலவே அழ என்பது அல ஆனது,

அலங்காரம் என்பது போலவே சிறுங்காரம் என்பதிலும் ஙகர ஒற்று தோன்றியது.

இ+ கு : இங்கு;   அ+ கு = அங்கு;  எ+ கு =  எங்கு.      -க்கு என்று வலிக்காமல்   - ங்கு என்று மெலித்தனவால் உணர்க.

சிறுங்காரம் :  இதுபின் சிருங்காரம் என்று மாற்றப்பட்டது.   று > ரு.

மொழிவரலாற்றில்  ரகரம் முந்தியது.   றகரம் பிற்பட்டதாகும்.  றகரம் என்பது இரு ரகரங்கள் கொண்ட ஓர் எழுத்து.. நம் முன்னோர் ரகரத்தையும் றகரத்தையும் ஒலிப்பதில் வேறுபாடு தெரிவிக்கும் திறமுடையவர்களாய் இருந்தனர் என்று தெரிகிறது. இன்று இது எழுத்தளவிலான வேறுபாடே ஆகும். ஒலிப்பதில் யாரும் வேறுபாடு காட்டுவதாகத் தெரியவில்லை. திரம் என்று எழுதினாலும் திறம் என்று எழுதினாலும் வாசிப்போர் 1 ஒரே மாதிரியாகவே ஒலிக்கின்றனர்.  அறம் என்பதை ஓரிருவர் அழுத்தி ஒலித்து  அது வல்லின றகரம் என்று தெரிவிக்க முயன்றதுண்டு.  தமிழைப் படிப்பதே ஒரு சுமையாகி, அது வீட்டுமொழியாக  ஆகிவிட்ட இக்காலத்தில் இதை யாரும் பொருட்படுத்தவில்லை.  ரகர றகர வேறுபாடின்றி வழங்கும் பல தமிழ்ச்சொற்கள் பல உள்ளன.  ஒருகாலத்தில் இவை ஒருதன்மையவாய் இருந்தமையையே இது நமக்குத் தெரிவிக்கின்றது.  இரு ரகரங்களை இணைத்து எழுத்தமைத்து  வேறுபடுத்தற்குக் கீழே ஒரு கோடிழுத்துள்ளனர் (ற)  என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

புணர்ச்சி என்பது சிற்றின்பம் எனவும் குறிக்கப்படுவதால்  சிறு என்பதிலிருந்து அமைந்த சிருங்காரமென்பதும் புணர்ச்சி குறிக்கும்.  அல்லால் இன்பச்சுவை, அழகு  அன்பு , சிறிதாகிய பொட்டு எனவும் பொருள்தரும்.

சிராய் என்பது சிறு விறகுத் துண்டு.   இதுவும்  சிறு என்பதனடிப் பிறந்ததே எனினும் றகரம் ரகரமாய் மாறியிருத்தல் காண்க.  சிறு >  சிராந்தி  (  இளைத்தல் )  சிறிதாதல்:   சிறுமைக் கருத்தே  உணர்க. சிராய்தல் :  சிறுகாயம் உண்டாகுதல்.

சிறு என்பதன் முன் அடிச்சொல் சில் என்பதே.  சில் >  சிறு.  எனவே இதைச் சிறு என்பதிலிருந்து காட்டாமல் சில் > சிலுங்காரம் > சிருங்காரம் என்று காட்டின் லகர ரகரத் திரிபாக இதனை உணர்விக்குமாறு காண்க.  அதுவுமிதே.  கல்லினின்று  பெயர்ந்த அல்லது தெரித்த சிறு துண்டும் சில்லு எனப்படும்.

ஓர் இலை மரத்திலிருந்து விழுந்தது எனினும் கொம்பிலிருந்து விழுந்தது எனினும் கிளையிலிருந்து விழுந்தது எனினும்  காம்பிலிருந்து விழுந்தது எனினும் இணுக்கினின்று விழுந்தது எனினும் அதே.

அறிதலே மகிழ்தல். 



அடிக்குறிப்புகள்:

வாய் > வாயித்தல் (  வாய்கொண்டு  ஒலியினால் வெளிக்கொணர்தல் ).  யகர சகரம் போலியால்  வாசித்தல் ஆயிற்று.  இப்படி இன்னொரு சொல்:  நேயம் . > நேசம்.   பாய்> பாயம் > பாசம்.  உணர்வு ஒருவர்பாலிருந்து இன்னொருவர்பால் பாய்வது.  பாயம் வழக்கிறந்தது.  பாய்ச்சல் ( எழுச்சி என்றுமாம்).  உணர்வெழுகை. பசு(மை)+ அம் = பாசம், முதனிலை நீட்சி  எனினுமாம். இருபிறப்பி.  பாய  = பரவ.  ஆதலின் உணர்வின் பரவுதல் எனினுமாம்.  பாய்> பாய்ம்பு > பாம்பு:  இதில் யகர ஒற்று களைவுண்டது.  பாய்தல் நகர்தலாம் அன்றித் தாவுதலெனினும் ஒப்பதே. இவை வெவ்வேறு மாதிரி அசைவுகள்.



இளமை  சிறுமை  அழகு என்பதை வலியுறுத்தும் ஒரு பாட்டு.  எழுதிய கவி யாரென்று தெரியவில்லை: இளமையில்  உருவிற் சிறிதாய் இருப்பதும் ஒரு காரணமாகும்.பொருள்களும் சிறுமையில் அழகு தருபவை.

குட்டியாய் இருக்கையிலே --- கழுதை
குதிரையைக் காட்டிலும் எட்டுமடங்கு' --- ஏழு
எட்டுமாதம் ஆனபின்னே ---  முழங்கால்
முட்டுவிழுந்து மோசமாக விளங்கும்.

பாட்டில் பொருள் தொடர்பு அற்ற வரிகள் விடப்பட்டன ,


திருத்தம் பின்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.