ஐயப்பசாமிக்கு அன்னதானப் பிரபு என்றொரு புகழ் நிலவுகிறது. சபரிமலை செல்வோரும் செல்லுமுன் வீட்டில் பூசைகள் செய்து மற்ற சாமிமாருக்குச் சோற்றுணவு பல குழம்புவகைகளுடனும் பச்சடிகளுடனும் வழங்கவேண்டும். இது தானம் ஆகும். இச்சொல் தா என்பதனடியாகப் பிறப்பது.
தா என்பது ஒத்தோருக்கு வழங்குதல். ஈகை என்பது இல்லார்க்கு வழங்குதல். மற்ற சாமிமார்கள் பற்றர்கள் ஆதலின் தானம் என்பது அவர்களுக்குப் பொருத்தமான சொல். ஒரு சாமி தம்மோடு ஒத்தவர்க்கு அன்னதானம் வழங்குகிறார். இது போற்றத் தக்கது ஆகும். தா என்ற தமிழ்ச்சொல்லுக் ஏற்ப அமைந்துள்ளது இந்நிகழ்வு.
தா + இன் + அம் = தா + (இ)ன் +அம் = தானம். கைம்மாறு கருதாமல் தரப்படுவது தானமாகும். இன் என்ற சொல்லாக்க இடைநிலை " ன் " என்று குறுகிற்று. தா என்பதும் "டோ" என்று இலத்தீன் வரை சென்று ஐரோப்பியக் கண்டமுழுதும் பரவிய பெருமைக்குரிய சொல். தமிழிலிருந்து வந்தமையை மறைக்க, மானத்தின் பொருட்டு, உலகப் பொதுமொழியினது இச்சொல் என்று மறைப்புரை பகர்வார் ஐரோப்பிய ஆய்வாளர். முன் தோன்றி மூத்த குடி தமிழ்க்குடி. தா என்ற சொல் நமக்குப் பெருமிதம் தருகிறது. உரோமப் பேரரசு ஏற்பட்டபின் அதற்கு ஒரு பொதுமொழி வேண்டப்படவே, தமிழ் முதலிய மொழிகளிலிருந்தும் சொற்கள் பெறப்பட்டன. அணுகுண்டு செய்யவேண்டுமென்றால் யூரேனியம் என்னும் பொருளை அயல்நாட்டிலிருந்துமே பெற்றுக்கொள்வதில் தடை யாது?
ஐயப்பன் அன்னதானப் பிரபு ஆகிறார். பிரபு எனின் பெருமான். பெரு+பு = பெருபு > பிரபு. பெருபு என்ற மூலவடிவம் ஒழிந்தது.
ஊமைக்குழந்தை பேசிப் பாடிய விந்தை:
ஐயப்பன் அருள்தரும் ஆண்டுகொண்ட தெய்வம் என்பதற்கு இப்போது ஒரு புதிய ஆதாரம் கிட்டியுள்ளதாகக் கேள்விப்படுகிறோம். ஒரு நாலு வயதுக் குழந்தை ஊமையாய் இருந்து பெற்றோருக்கும் மற்றோருக்கும் கவலையளித்துக்கொண்டிருக்க, அதனைப் பெற்றோர் சபரிக்குத் தூக்கிச் சென்றனராம். ஆலயத்துள் நுழையும்போது அங்கு பாடிக்கொண்டிருந்த இசையைக் கேட்ட குழந்தை, தன் வாய்ப்பூட்டுக் கழன்றதாய், மழலை மொழியில் ஐயப்பசாமியைப் பாடத் தொடங்கிவிட்டதாம். இப்போது பிற குழந்தைகள் போல நன்றாகப் பேசுகிறதாம். இப்படி ஒரு விந்தையும் நடந்துள்ளதாக பற்றர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
ஐயப்பசாமி யாவருக்கும் அருள்வழங்க வேண்டிக்கொள்கிறோம்.
விஷ்ணு என்னும் விண்ணர்பெருமான், கருமை நிறத்தவர். அறிவியலார் கூறும் கார்த்துளை ( பிளாக் ஹோல் ) கருமையானதே. இதுவே விண்ணர்பெருமானின் உறைவிடமாகவும் இருக்கலாம். நம்முள் வைகும் உயிர்க்கு ஆதாரமாய் அதை எப்படிப் பிரித்துக் காட்ட முடியாமல் திணறுகிறோம். அதைப்போலவே இறைமையையும் தனித்தெடுத்து இதுதான் இறை என்று மெய்ப்பிக்க இயலாது. நம்பினால் அதனால் நாம் இழப்பது ஒன்றுமில்லை.
ஐயப்பன் என்பதற்கு நற்பொருள் பல கூறுதல் இயலுமென்றாலும், ஐந்து தெய்வங்களும் தன்னுள் கொண்ட பெருமான் ஐயப்பன் என்று பற்றர் சிலர் சொல்வதும் நாமறிவோம். பிரம்மன் ( பெருமான் அல்லது பெருமன் ,) சிவன், விட்ணு , கந்தன், பிள்ளையார் ஆகிய ஐவரும் அடங்கியவரே ஐயப்பன் என்பர்.
எத்தெய்வம் வேண்டினும் அத்தெய்வமாய்த் தான் தோன்றுகிற வல்லமைத் தெய்வம் ஐயப்பன் என்பர்.
திருத்தம் பின்.
அடிக்குறிப்பு:
வியந்து ( வினையெச்சம் ) : வியந்தை > விந்தை ( இடைக்குறை, யகரம் மறைவு). இதை வேறு விதமாகவும் காட்டுதல் கூடும்,
எடுத்துக்காட்டு:
ஆண்ட + அவன் ( பெயரெச்சம் ) : ஆண்டவன். ஓர் அகரம் மறைவு,) இது சொற்புணர்ச்சி காரணமான எழுத்துக்கெடுதல் ).
மந்தை என்ற சொல் தோன்றியவிதம் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.