Pages

திங்கள், 3 டிசம்பர், 2018

கபாலி

ஆலமரமென்பது சொல்லமைப்பில் பொருள்கொண்டால் அகலமரமே.    அகல மரம் என்பது திரிந்து ஆல மரமாயிற்று.  பண்டை நாட்களில் அரசர்களால் அமைக்கப்பட்ட கோயில்கள் தவிர மற்றையவை ஆலமரத்தடி கும்பிடுமிடம்,


கோ எனில் அரசன்;  இல் எனில் இடம் அல்லது வீடு. கட்டப்பெற்றது என்பதாகும்   கோயில்கள் அரசர்களால் கட்டப்பெற்றவை.  இன்று இச்சொல் பொதுப்பொருளில் வழங்குகிறது.

ஆல் + அ + அம் =  ஆலயம். யகரம் உடம்படு மெய்.  ஆலமரத்து இடம்.  பொருள்:  ஆலமரத்தடியில் அங்கிருக்கும் தொழுமிடம்.

அகல் >  ஆல்.  இதுபோல இன்னொரு சொல் கூறவேண்டின் பகல் > பால்.  பகல் என்றால் பகுக்கப்பட்டது என்பது சொற்பொருள். சூரியன் ( <சூடியன்,  வெம்மை தருவோன் )   காயும் நாளின் பகுதியே பகல்.  பகு+ அல் = பகல். இது பின் பால் என்று திரிந்தது.   அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால், அப்பால், இப்பால், அவள்பால்.   அறத்துப்பால் என்பது அறத்தைக் கூறும் பகுதி, நூலினது ஆம்.    அகல்> ஆல் போலவே பகல் > பால்.

இப்போது கபாலி என்ற சொல்லுக்கு வருவோம்.

கவை >  கபா.   இது வகர பகரப் போலி.   இன்னொன்று:  வசந்தம் > பசந்த்.
தவம் > தபம் என்பதுமாம்.

அகல் > ஆல் .

இ என்பது விகுதி.


பொருள்:

கழுத்தை இரு நேர்கோடுகளால் காண்புறுத்தினால் ( பிரதிபலித்தால் )  அவற்றின் மேல்புறத்தில் ஒரு வட்டத்தை வரையவேண்டும்.  கழுத்தைக் காட்டும் இரு கோடுகளும் கவைகள் போலிருக்கும்,  மேலுள்ள வட்டம் தலையைக் காண்புறுத்துகிறது.   தலை இடம் அகன்றது.  ஒரு கவையிலிருந்து இடமகன்று இருப்பதால் தலை கப+ ஆலி ஆகிறது. ஒரு கவையில்  ஓர் அகன்ற தலை வைக்கப்பட்டுள்ள நிலையே கபாலம் ஆகும்.

ஒரு கவையோடும் அகன்ற தலை :  கபாலம் ஆகும்.  அதை உடையோன் கபாலி.

கபா+ ஆல் + இ =  கபாலி.

கவை என்பது ஒரு குச்சி அல்லது நீள்பொருள் இரண்டாகப் பிரிந்து வேறுபொருள்களை அகப்படுத்தும் அல்லது அதில் மாட்டிக்கொள்ளும் திறனுடையதாவதான ஒரு நிலையைக் காட்டுகிறது.  ஒரு கவையால் ஒரு கொடியைப் பிடித்து இழுக்கலாம். அல்லது அப்பால் தள்ளலாம்.  கபடு, கவடு என்பவை இதுபோலும் பிறரை மாட்டிவிடும் நேர்மையில்லாத குணத்தைக் குறிக்கிறது. கவை என்பது கவ்வு என்ற வினைச்சொற்குத் தொடர்பு உடைய சொல்லே.  இது பிறமொழிச் சேவை ஆற்றிய சொல். ஆங்கிலம் "கவட்" என்பதுவரை போயிருக்கிறது. Thou shalt not covet thy neighbour's wife என்பது பத்துக் கட்டளைகளில் ஒன்றாக வருகிறது.   பிறன்மனையாளைத் தன்வலைக்குள் சிக்கவைத்துவிட்டுக்   குற்றமின்மைக் குறிகாட்டும் ஆடவரும் உலகில் உளர்.  கவைகள் மரங்களில் காணப்பட்டுப் பெயரிடப்பட்டன.  இப்போது செயற்கைக் கவைகளும் உள.  கழுத்தாகிய கவையில் மாட்டப்பட்டிருப்பதே மண்டை ஆகும்.  ஆகவே " கபாலி" பொருத்தமான சொல்லமைப்பு. கவையாகிய கழுத்தில் அகல் ஓட்டு மண்டை அமர்ந்துள்ளது என்பது அறிதற்குரித்தாம்.

அறிந்தின்புறுக.

திருத்தம் பின்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.