Pages

புதன், 18 ஜூலை, 2018

ஆரிய அறிவாளிகளும் அறிவில்லாதவர்களும்

இந்தியாவிற்குள் அவ்வப்போது வெளிநாட்டுக்காரர்கள் வந்து தங்கியுள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் நிகழ்ந்தவைகளாகக் கூறப்படுவனவற்றை ஆராயுங்கால் அப்படி வந்த வெளிநாட்டினர் திரும்பிச் செல்வதற்கு அக்காலத்தில் பெரிய வசதிகள் ஏதும் இல்லை என்பது எவனும் சொல்லிக்கொடுக்காமலே கேட்பவனுக்குப் புரியவேண்டும்.  எடுத்துக்காட்டாக சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து சுற்றிபார்த்துச் சென்றவர்களைக் குறிப்பிடலாம்.  இத்தகைய யாத்திரைகள் எளியனவாய் இருக்கவில்லை.  இதன்  காரணமாகவும் இங்கிருந்த பெண்டிரை விரும்பியது முதலான நிகழ்வுகளாலும் பலர் தங்கிக் கலந்துள்ளனர். கலவாதார் வாழ்ந்த அதே குடிப்பெயரை மேற்கொண்டு கலந்தாரும் மாறா இயற்கைப் போர்வை கவித்துக்கொண்டு இதுநாள்காறும் இருந்துவந்துள்ளனர் என்பதே உண்மை.

ஆரியர் என்று யாரும் வரவல்லை --  அதாவது இந்தியாவிற்கு மேற்றிசையிலிருந்து ---  என்பது தெளிவு.  வெள்ளிய தோலுடையவர்கள் வந்து கலந்திருக்கக்கூடும். இவர்கள் ஆரியர் அல்லர்.  வந்தவர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து பிறழ்ச்சி உண்டாக்குதற்பொருட்டுத் தொன்மங்களையும் பிற நூல்களையும் வரைந்திலர். அப்போதிருந்த நிலையில் யார் எங்கு வேண்டுமானாலும் வீடுகட்டிக்கொண்டு வாழலாம்.

ஒரு கூட்டத்தினருக்கும் இன்னொரு கூட்டத்தினருக்கும் இடையில் சண்டைகள் முதலியன ஏற்படுவது இயற்கை.  உணவுப் பொருள்களைப் பகிர்ந்துகொள்ள மறுப்பதாலோ தம் வீட்டுப் பெண்பிள்ளைகளை மணஞ்செய்து கொடுக்க மறுப்பதாலோ சண்டைகள் ஏற்படுவது இயற்கையாகும். இவைபோல்வன  நடவாத மனிதக்குழுக்கள் உலகிலே இல்லை என்பது சிந்தித்தும் செய்திகள் வாயிலாகவும்  யாரும் உணரக்கூடியதே ஆகும்.

வந்து தங்கியவர்கள் தாம் தாக்கப்பட்ட காலை ஆயுதமேந்தி எதிர்த்திருக்கலாம்.   இது தெருச்சண்டைகள் போன்றவையே அன்றி ஒரு போர் என்னுமளவுக்குத் திட்டமிட்ட கட்டுக்கோப்பான படைநடத்துதல் அல்ல.
ஆரியர் என்போர் அறிவாளிகள் என்று அச்சொல்லால் தம்மைக் குறித்துக்கொண்டனர் என்பர். தங்கிய விடத்து நடைபெறும் திட்டமிடாத சண்டைகளில் ஒரு சாரார் தம்மை அறிவாளிகள் என்று கூறிக்கொள்ள எந்தக் காரணமும் இல்லை. மற்றவர்கள் அறிவுகெட்டவர்கள் அல்ல்ர். பெரும்பாலும் அறிவாளிகள் சண்டைக்குப் போகமாட்டார்கள். எழும் இடர்களைத் தம் அறிவின் துணையால் தீர்க்க முனைவோர் அவர்கள்.  மேலும் வெள்ளைக்காரன் ஆராய்ச்சியில், வந்தவர்கள்தாம் தங்களை அறிவாளிகள் என்று கூறிக்கொண்டார்கள் என்பது எப்படித் தெரியும்.   இருந்தவர்கள் தங்களை அறிவாளிகள் என்று கூறிக்கொள்ளவே வாய்ப்புகள் அதிகம். ஒரு வளமிக்க மொழியும் எழுதுவதற்கு எழுத்துமுறைகளும் சுவடிகளும் வைத்திருந்தவர்கள் இருந்தவர்கள் அல்லரோ?  வந்தவர்களுக்கு எழுத்துக்கள் இல்லை என்றும், அவர்கள் அரமாயிக் முதலிய மொழிகளில் எழுதினர் என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். யார்யார் எந்தெந்த மொழிகள் பேசினர் என்பதற்கும் ஆதாரம் எதுவுமில்லை!

ஆரியர் யார்? வந்தவர்களா? இருந்தவர்களா?  சிரியாவிலிருந்து வந்தவர்களே அசுரர்கள் என்று குறிக்கப்பட்டனர்  என்றும் சிலர் கூறியுள்ளனர். இவையெல்லாம் உட்புகுந்து நோட்டமிட்டால் இனி வீழ்ச்சியடையக்கூடிய வாதங்கள் என்பது  மேலும் சொல்லாமலே புரியக்கூடியதாகும்.


தொடர்ந்து வாசிக்க:=

http://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_27.html

http://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post.html 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.