Pages

வியாழன், 17 மே, 2018

சான்று, கருத்து, வல்லுநர், அத்தாட்சி, சாட்சியம்.

சில ஆய்வாளர்கள் நன் கு ஆய்வு மேற்கொள்ளாமல் சொற்கள் சிலவற்றை இழிஞர் வழக்கு என்று ஒதுக்கிவிடுகின்றனர்.  அப்படி அவர்கள் ஒதுக்கம் செய்ததற்கு எந்த ஆதாரமும் அவர்கள் காட்டவில்லை. இறுதியில், தாம் மக்களிடம் புகழ்ப்பெற்று விளங்கின நிலையையும் தமது கல்விச் சான்றிதழையும் தவிர அவர்களிடம் வேறு ஆதாரங்கள் எவற்றையும் நாம் அறிந்துகொள்ளமுடியவில்லை.

இப்படி முடிவுகள் செய்வது அவர்களின் கருத்தின் அடிப்படையில்தானே அன்றி வேறில்லை.  சட்டத்துறையில் கருத்து அல்லது அபிப்பிராயம் என்பதற்கும்  சான்று அல்லது அத்தாட்சி என்பதற்கு  உள்ள வேறுபாடு, அத்துறையில் நின்ற முன்னணி அறிஞர்களால் நன் கு விளக்கப்பட்டுள்ளது.  சொந்தக் கருத்து என்பது ஒரு சான்று ஆகாது.  அதற்கும் மதிப்பு அளிக்கவேண்டும் என்றாலும் சான்றுக்கு அளிக்கப்படும் மதிப்பைவிடக் குறைவான தகுதியையே அதற்கு அளிக்கமுடியும்.  இத்தகைய கருத்துரைகளால் ஒரு முடிபை எட்டிவிடுதல் இயலாது.

ஒருவர் அமைச்சராகவோ அல்லது அரசுமுறை அலுவலர்களில் பெரியவராகவோ இருந்திருக்கலாம். அந்த வேலைமூலம் அவர் பெரும்புகழ் அடைந்தவராகவும் இருக்கலாம். இருப்பினும் ஒரு சொல்லைப் பற்றிய அவர் கருத்துரையானது சான்றுகளின் அடிப்படையில் அமைவுறாமல் தம் சொந்தக் கருத்தினடிப்படையிலும் தம் இயக்கத்தின் கருத்தடிப்படையிலும் இருக்குமாயின் அதை ஒரு மேலான தகுதிக்குரிய சான்று என்று கொள்வதற்கில்லை.  இதை ஓர் உதாரணத்தின் மூலம் விளக்கலாம்.

நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஒரு வல்லுநர் சாட்சியம் அளித்துக்கொண்டிருந்தார்.  அவர் ஒரு கைதேர்ந்த பொறியியலாளர் என்று கருதப்பட்டவர். வேறு பல வழக்குகளிலும் இயந்திரங்கள் பற்றிய அவருடைய சாட்சியங்கள் நீதிமன்றங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.  அன்று நடந்த வழக்கில் அவருடைய சாட்சியம் ஓர் இயந்திரம் பற்றியது. அவருடைய மூலச் சான்றுரை முற்றுப்பெற்றபின் குறுக்கு விசாரணை தொடங்கியது.

இன்று நீர் விளக்கிய இயந்திரத்தைப் போல் முன் எத்தனை இயந்திரங்களைப் பயின்று சாட்சியம் அளித்துள்ளீர் .....  என்பது அவரிடம் கேட்கப்பட்டது.  அவர் பல இயந்திரங்கள் பயின்று சாட்சியம் அளித்துள்ளேன் என்றார்.   "ஆனால் இது புதிய இயந்திரம். இதைப்போன்றது முன் வெளிவரவில்லை,  எனவே நீர் விளக்கிய இயந்திரங்கள் வேறுமாதிரியானவை; இது நம் முன் உள்ளது முற்றிலும் வேறுபட்டது. இதில் நீர் எப்போது வல்லுநர் ஆனீர்?" என்று அவரை நோக்கிக் கேள்வி பறந்தது.  "ஆமாம். இது புதியதுதான்.  இதைப்போல் பிறிது முன்னர் இருந்ததில்லை"  என்று அவர் ஒப்புக்கொண்டார்.  அதன்பின் அவருடைய சாட்சியத்தை நீதிமன்றம் "வல்லுநர் சாட்சியமாக"  ஏற்கமறுத்துவிட்டது.

இப்படி வல்லுநராகத் தெரிகின்ற ஒருவர் வல்லுநரும் அல்லர்.
அப்படிக் கருதப்படாத ஒருவர் வல்லுநராகவும் இருக்கலாம்.
ஒருவர் வல்லுநரா அல்லரா என்பது ஆய்ந்து முடிவுசெய்யவேண்டிய ஒன்றாகுமென்பதை அறியவேண்டும்.

பத்திரிகைகளில் பலதரப்பட்ட கருத்துகள் வருகின்றன.  பல தலைவர்கள் கூறியனவாகச் செய்திகளும் வெளியிடப்படுகின்றன.  ஆனால் இவையெல்லாம் வெறும் வெளியீடுகள்தாம்.  மெய்ப்பிக்கப்பட்டவை அல்ல.

பலவேளைகளில் பத்திரிகைச் செய்தி ஒரு சான்றாகமாட்டாது.  எதிர்க்கட்சி தேர்தலில் வென்றுவிட்டது என்று பத்திரிகை சொல்லலாம். அதைவைத்து வென்ற தலைவருக்கு பதவி உறுதிமொழியை எடுத்துக்கொள்ள ஒரு நாட்டு அதிபர் இசைவுகொள்ள இயலாது.   தேர்தல் அதிகாரிகளுள் தலைமையானவர் வந்து எழுத்துமூலமாகச் சமர்ப்பித்தாலே அதை அந்த அதிபர் ஏற்றுக்கொள்ள முடியும்.  அதுவரை அதிபர் காத்திருக்கத்தான் வேண்டியுள்ளது,  இப்படி  ஓர்
அரசியல் நிகழ்வும் அண்மையில் நடந்தேறியது.

சரி. இப்போது அத்தாட்சி என்ற சொல்லைப் பார்ப்போம்.  இது சான்று என்ற சொல்லுக்கு இணையாக வழங்கப்படுவதுண்டு.

அத்து :     இது அற்று என்பதன் திரிபு.   முன் இருந்த நிலையை மாற்றியமைப்பது சான்றுகள் தாம்.  எனவே சான்றுகள் புகுந்தபின் முன்னைய நிலை அற்றுப்போகிறது.

ஆட்சி:   இது மேலாண்மை செலுத்துவதைக் குறிக்கிறது.  புதிதாக வந்துள்ள சான்றுகள் பழைய நிலையை மாற்றி ஆள்கின்றன அல்லது நிலைப்படுத்துகின்றன.  ஆள்+சி = ஆட்சி ஆகும்.

அத்து + ஆட்சி =   அத்தாட்சி.

இதில் கிருதம் எதுவும் இல்லை.

சான்று:  இதன் அடிச்சொல்:  சாலுதல்.  அதாவது நிறைவு தருவது.  சால்+து = சான்று ஆகும்.
சாட்சியம் :  இது சாட்டுதல் என்ற சொல்லினின்று திரிந்தது.   சாள்> சாடு;
சாள்> சாட்டு.  இங்கு சாள் என்பதே அடிச்சொல். இதனைப் பின்னர் விளக்குவோம்.  குற்றம் சாட்டுதல் என்ற வழக்கையும் நோக்கவும்.  இப்படிச் சாட்டுதற்கு ஆதாரமானது சாட்சியம்.  இங்கு அம் என்பது விகுதி.  இதில் சி அம் இரண்டும் விகுதிகள்.
அத்தாட்சி:  அழகாய் அமைந்த திரிபுச்சொல்.

அறிந்து மகிழ்வீர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.