Pages

சனி, 9 ஜூலை, 2016

ஆக்கிரகம் -

பழ மூலங்களைக் கொண்டு ஒரு புதுமையைப் படைக்குங்கால் அதன் பழமை வெளிப்படாமல் அப்புதுமை முன்னிறுத்தப்படுமானால், இதனின் வேறு திறன் யாதே இருத்தல் கூடும்?  இது கூறினோம் .

இப்போது ஆக்கிரகம் என்ற சொல் அமைப்பினைக் கவனிப்போம்.

நாம் சொல்லுக்குப் பொருள் சொல்வதை நோக்கமாகக் கொள்ளவில்லை.
அகரமுதலி சொல்லும் பொருள் ஏற்கத் தக்கதாக இல்லாவிடின், அதையும் தூக்கி எறிந்துவிட்டு, உண்மையான பொருளைக் கண்டுகொள்ள வேண்டியது இன்றியமையாதது ஆகும். ஆக்கிரகம் என்பது எந்த மொழிக்குரிய சொல் என்பதும் நமக்குத் தேவையில்லை. அது எனது உனது என்று சொந்தம் கொண்டாடுவோனை நாம் கண்டுகொள்ள முனையமாட்டோம்.

இந்தச் சொல்லில் இறுதியில் நிற்கும் சொல் அகம் என்பது.  அகம்
என்பது உள்  என்று பொருள்படும். மனம் எனினும்  அமையும்.

அடுத்து முன் நிற்கும் துண்டுச் சொல் இரு என்பது. ஆகவே இரண்டையும் புணர்த்தினால் இரகம் என்று ஆகிறது. இரு+ அகம் = இரகம்.   இருவகம் என்று புணர்த்தினும் அமையும் ஆயினும், இந்தப் புணர்ச்சியில் வகர உடம்படு மெய் வரவில்லை. அறம் பொருள் இன்பம் என்ற சொற்களில் அறம் என்பதில் அறு+ அம் = அறம் என்று வகர உட்ம்படுமெய் எப்படி வரவில்லையோ, அப்படியே இங்கும் இரகம் என்பதில் வரவில்லை. அறு+ அம் = அற்றம் என்றும் வரும் ஆனால் அது இன்னொரு சொல். அங்கு இரட்டித்தது. அதை இங்கு மேற்கொண்டு குழப்ப வேண்டியதில்லை.  இரகம் என்பதில் இரட்டிக்க வழியில்லை. இவற்றை தெளிவின் பொருட்டுக் கூறினோம். இவை நிற்க.

இப்போது ஆக்கிரகம் என்பதன் முதல் துண்டுக்கு வந்துவிட்டோம். அது
ஆக்கு என்பது.

ஆக்கு + இரு + அகம். =  ஆக்கிரகம்.

இரண்டு வினைச்சொற்களை அடுத்தடுத்துப் போட்டான்;   இறுதியில்  அகம்  வைத்தான்.

ஆக்கிரகம் என்பதற்கு 1 உறுதி,    2.சினம்,    3.விடாப்பிடி,    4.  வீரம், 5  மேற்கொள்ளுதல் என்பன வா(ய்)த்தியார்கள் கூறும் பொருள். இவை எல்லாமும் மனவுணர்ச்சி வகைகள் என்பர். மனிதன் ஆக்கிக்கொள்ளும் இவ் வுணர்ச்சிகள் அகத்தில் இருப்பவை.  ஆகவே ஆக்கு இரு அகம் என்பதைக் கண்டுபிடித்து இன்புற்றீர்.

தமிழா? ...... இது தமிழில் பெரும்பாலும்  வழங்க‌வில்லை போலும்.

---------------------------------------------------------------------------------------------------------
குறிப்புகள் 
நம் ஆய்வின்படி இரு என்ற சொல் பல புனைவுகளில் பயன்பாடு கண்டுள்ளது.  இரு+அக(ம்)+சி+அம்;  இரு+ அவி (ழ்) + க் + கை;  இரு+ ஆசு + இ; இவ்வாறு பல எண்ணிக்கை உள்ளன. பழைய இடுகைகள் பார்க்க .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.