Pages

சனி, 9 ஜூலை, 2016

பராக்கிரமம்

பரத்தல் என்ற‌ சொல்லை நாம் இங்கு பார்ப்பது இது முதல்முறை அன்று. பர என்ப‌திலிருந்து பரமன் என்ற அழகான சொல் வருகிறது.

பர > பரத்தல்.
பர > பரமன் (பர+அம் = பரம்; பரம்+அன் > பரமன்.)
பரம் > பரம்பொருள் 


பரம் என்றாலே எங்கும் பரந்தது என்று பொருள். இறைவன் எங்கும் இருப்பவன் என்று சொல்லப்படுவதால், பரத்தல் என்ற அடியிலிருந்து அவனுக்குப் பெயரமைத்தது அறிவுடைமை ஆகும்.

"பரந்த" நீர்ப்பரப்பு எனப்படும் கடலும் பரவை எனப்படும். பறவை வேறு.

பர என்பதன் தொடர்பில் இன்னொரு சொல்லைப் பார்ப்போம்.

அது பராக்கிரமம் என்ற சொல்.

ஒரு மனிதனின் வலிமை  எங்கும் விரிந்து யாவராலும் உணரப்படுமாயின் அது பராக்கிரமம் ஆகும். இதை:

பர+ ஆக்கு+ உரம் + அம் என்று பிரிக்கவேண்டும்.

உரம் என்பது வலிமை. அது எங்கும் விரிய உணரப்படுதல் பர என்ற‌
அடியாலும் ஆக்கு என்ற வினையாலும் கொணரப்படுகிறது. அம் என்பது சொல்லாக்க விகுதி.

பராக்கு உரமம் என்ற சொல்லை அமைத்தபின், அதில் ஒரு சிறிய மாற்றம் செய்யவேண்டும். அதுதான், பராக்கு+ உரமம் = பராக்குரமம்
என்பதை பராக்கிரமம் என்று "எளிதாக்குவது". இது உரம் என்ற சொல் உள்ளிருப்பதை மறைத்துப்  பொருளை ஒருவழிச் செல்லச் செய்கிறது.
பராக்கிரமம் என்ற சொல்லைப் பயன்படுத்துவோன், உரம் என்ற சொல்லை நினைவு கூர வேண்டியதில்லை. நினைவு, பொருட் சிதறாமை ஆயவற்றை இது உறுதிப்படுத்துகிறது. இது ஒரு மூல மறை திறமை ஆகும்.

இது நாளடைவில் திரிந்ததா அல்லது புனைவுபெற்றதா என்பது கால இடைவெளியால்  திட்டவட்டமாகச் சொல்லற்கில்லை. எனினும் உகரத்திற்கு இகரம் போலியாக அல்லது மறுதலையாக (vice versa) வருதலுண்டு. எடுத்துக்காட்டுகள்  பழைய இடுகைகளில் காண்க. எளிய காட்டாக,  இதழ் <> உதழ் என்ப  காண்க.

எனவே இந்தச் சொல்லை நோக்குந்தோறும் அதன் தமிழ் மூலங்கள் உங்கள் சிந்தையில் வந்து தெளியும் என்பதை  இங்குக்   கண்டின்புறுவீர்.

பழ மூலங்களைக் கொண்டு ஒரு புதுமையைப் படைக்குங்கால் அதன் பழமை வெளிப்படாமல் அப்புதுமை முன்னிறுத்தப்படுமானால், இதனின் வேறு திறன் யாதே இருத்தல் கூடும்?


குறிப்பு:  பராக்குரமம்  என்பதை  பராக்ரம என்கையில்  இந்தத் தொல்லை இல்லை. இதுவே பிற மொழியிற் கையாளப் படுவது.  குகரம் களைதல் .






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.